காலம் அறிய முடியாத காலத்தைச் சேர்ந்தது திருவாரூர் தியாகராஜர் கோயில். முற்கால சோழர்கள் காலத்திலேயே சிறப்புற விளங்கியது இக்கோயில். இந்தக் கோயிலின் சிறப்பே எல்லாம் பிரமாண்டம் என்பதுதான். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் நீரோடை ஐந்து வேலி என்ற பரப்பளவில் கட்டப்பட்டது.
ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் தனிக்கோயிலை வணங்கிச் சென்றதாகவும், இந்தக் கோயிலின் வடிவத்தைப் பார்த்துதான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேவாசிரியன் மண்டபம் என்ற திருப்பெயர் கொண்ட 'ஆயிரங்கால் மண்டபம்' ஒன்று கிழக்கு பகுதியில் அமைந்து உள்ளது. இது சைவர்களுக்கு புனிதமான இடம் என்று போற்றப்படுகிறது. இங்கு அமர்ந்திருந்த விறன்மிண்டரை வணங்காமல் சென்ற சுந்தரரையும் அவருடன் பேசிக் கொண்டிருந்த ஈசனையும் 'புறகு' என்று சொல்லி விறன்மிண்டர் கோபித்துக் கொண்டு சென்றார். அதனால் இதன் அருகேதான் சுந்தரரால் அடியார்கள் பெருமை சொல்லும் திருத்தொண்டத்தொகை பாடப்பட்டது. இங்கேதான் பெரிய புராணம் அரங்கேற்றம் நடைபெற்றது. அத்தனை புனிதமானது இந்த மண்டபம்.
தேவர்கள் சிவபூஜை செய்யும் இடமாகவும் கருதப்படுகிறது. சிவகணங்கள் சிவபூசையில் காத்திருக்கும் இடமாகவும் இது போற்றப்படுகிறது. அடியார்கள் ஓய்வு கொள்ளும் இடம் என்பதால் இது கருவறைக்கு நிகராக வணங்கப்படும் இடமாகவும் உள்ளது. 63 நாயன்மார்களும் திருமுறை இயற்றிய தேவாசிரியர்களும் தங்கி இருக்கும் என்பதாலேயே இது தேவாசிரிய மண்டபம் என்று ஆனதாம். இதனால் இந்த கோயிலுக்கு வருபவர்கள் தேவாசிரியன் மண்டபத்தை வணங்கி விட்டுதான் கோயிலுக்குள்ளே செல்வார்கள் என்பது ஐதீகம்.
பெருமைகள் கொண்ட இந்த மண்டபத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் முழுக்க முழுக்க மூலிகைகளை மட்டுமே பயன்படுத்தி பல அற்புத ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை சிவலீலைகளை விளக்கும் விதமாகவும், திருவாரூர் பெருமைகள் சொல்லும் விதமாகவும் வரையப்பட்டன. இவை ஒட்டு மொத்தமாக சுமார் தொண்ணூற்று ஆறு ஓவியங்கள் உள்ளன. அத்தனையும் பார்ப்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாக வரையப்பட்டு உள்ளன.
குறிப்பாக தியாகராஜப் பெருமான் தேவலோகத்திலிருந்து ஆழித்தேரின் மூலமாக பூலோகம் வரும் ஓவியம், குதிரை வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற தொண்ணூற்று ஆறு வகையான ஓவியங்கள் மூலிகைகளால் மட்டுமே வரையப்பட்டு உள்ளன. இயற்கை மூலிகைகள் கொண்டு தீட்டப்பட்ட இந்த ஓவியங்கள் காலம் கடந்தும் ஈசனின் புகழை எடுத்துச் சொல்லி வந்தன. ஆனால், இப்போது இவை அனைத்தும் முறையான பராமரிப்பில்லாமல் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் உள்ளதாக திருவாரூர் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசாங்கம் மீண்டும், பழைமை மாறாமல் மூலிகைகள் கொண்டு தேவாசிரியன் மண்டபத்தில் சிதலமடைந்த ஓவியங்களை வரைந்து புனரமைக்க வேண்டுமெனவும், அதுமட்டுமின்றி தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் படி எடுத்து, அதன் சிறப்பை, வரலாற்றை ஒரு நூலாக வெளியிட வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது குறித்து திருவாரூர் ஓவியர் சிமாமகேந்திரன் பேசியபோது, "இந்த தியாகராஜர் கோயிலில் வரையப்பட்டு இருக்கிற ஓவியங்கள் எல்லாம் சுமார் நானூறு வருசம் பழமை வாய்ந்ததுன்னு சொல்லுறாங்க. ஆனா இப்போ இது எல்லாம் சரியான பராமரிப்பு இல்லாம அழிஞ்சு போற நிலைமையில இருக்கு.
சுமார் 450 வருசத்துக்கு முன்னாடி மராட்டிய மன்னர்களால் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பு வாய்ந்தவை. இதை பார்க்கவே ரொம்ப பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கும்.
வெறும் பக்தியோடு மட்டும் இல்லாமல், இந்த ஓவியங்கள் எல்லாம் பண்டைய கால மக்கள் எப்படி வாழ்ந்தாங்க, அவங்க உடைகள், அணிகலன்கள், எப்படி எல்லாம் போர் செஞ்சாங்க, இப்படிப் பல வரலாற்று கருத்துக்களை நமக்கு எடுத்து சொல்லுது. இது மாதிரியான வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது நம்ம அரசாங்கத்தோட மிகப் பெரிய கடமை. உடனடியா தமிழக அரசாங்கம் இந்து சமய அறநிலைத்துறை மூலமா இந்த மூலிகை ஓவியங்கள் அத்தனையும் சரி செஞ்சி கொடுக்கணும். நுணுக்கமான இந்த கலைப்படைப்பை அழிய விடக்கூடாது" என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.
கோயிலைப் பாதுகாப்பது என்பது சொத்துக்களை மீட்பதோ, வழிபாட்டைத் தொடர்வதோ, அன்னதானம் செய்வதோ மட்டுமில்லை. நம் கலை கலாசாரங்களை எடுத்துச் சொல்லும் படைப்புகளைப் பாதுகாப்பதும்தான். தமிழக அரசு, தஞ்சை பெரிய கோயிலில் கோபுரத்தின் மேலே உள்பகுதியில் உள்ள ஓவியங்களைப் புனரமைத்து வருகிறது. அதுபோல திருவாரூர் தியாகராஜ கோயிலில் உள்ள அரிய வகை மூலிகை ஓவியங்களைப் புனரமைத்து வரலாற்று அடையாளங்களைக் காக்குமா?
source https://www.vikatan.com/spiritual/temples/thiruvarur-thiyaagaraaja-swamy-temple-old-paintings-need-renovation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக