புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிலையைச் சேர்ந்தவர் அம்பாள்(90). இவரது மகள் உமையாள்(70). தாய், மகளான இருவரும் விராச்சிலை பழைய ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே உள்ள தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில், முதியவர்களான இருவரும் ஆண் துணையின்றி தனியாக இருப்பதைத் தெரிந்த கொண்டு வீட்டின் உள்ளே புகுந்த 3 பெண்கள், மூதாட்டிகளை அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டு, கூச்சலிடாதபடி வாய்களைத் துணையை வைத்து அடைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளையும், பீரோவில் வைத்திருந்த ரூ.12,000 ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சுருட்டினர். பொருட்களை எடுத்துவிட்டு மூதாட்டியின் வாய்களில் அடைத்து வைத்திருந்த துணியை எடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுவே அவர்களுக்கு ஆபத்தாகி முடிந்துவிட்டது. வாய்க் கட்டினை அவிழ்த்தவுடனே மூதாட்டிகள் இருவரும் கூச்சலிட அருகே துக்க நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் மூதாட்டிகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது, நகைகளுடன் அவசர, அவசரமாகத் தப்பி ஆட்டோவில் செல்ல முயன்ற 3 பேரையும் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து பனையப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 3 பெண்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பல நாட்கள் நோட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா, சிவகங்கை மாவட்டம் ஆவணிபட்டியைச் சேர்ந்த தெய்வானை,கீழச்செவல் பட்டியைச் சேர்ந்த கருப்பாயி என்பதும், மூதாட்டிகளின் வீட்டை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடிய நகை மற்றும் ரொக்கப்பணத்தையும் மீட்டு மூதாட்டிகளிடம் கொடுத்தனர். மேலும், இந்தப் பெண்கள் இதுபோன்று வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: சென்னை: முதல் திருட்டு... பயத்தில் மதுஅருந்திய இன்ஜினீயர் - திருடச் சென்ற வீட்டில் உறக்கம்
source https://www.vikatan.com/news/crime/3-women-caught-by-public-in-theft-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக