`சசிகலா விடுதலை’தான் தமிழகத்தின் ஹாட் அரசியல் டாபிக். எடப்பாடி தரப்பில் சசிகலா வெளியே வருவதை முடிந்த அளவுக்குத் தள்ளிப்போட பிரயத்தனம் செய்கிறார்கள். குறைந்தபட்சம் 2021, மே மாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும்வரை சசிகலா வெளியே வரக் கூடாது என்பதற்காக, கணக்கு வழக்குகளை லாகவமாகக் கையாளும் ஒருவரை டெல்லிக்குப் படையெடுக்க வைத்திருக்கிறார்களாம்.
மறுபுறம் சசிகலா தரப்பினரோ, `சின்னம்மா சீக்கிரம் விடுதலையாக வேண்டும்; தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி மூலம் டெல்லி மேலிடத்தில் காய்நகர்த்துகிறார்களாம். சிலபல அரசியல் கணக்குகளைப்போட்டு இரு தரப்பையுமே காத்திருப்பில் வைத்திருக்கிறதாம் செங்கோட்டை!
`எடையை’ப் பொறுத்துதான் தராசு தட்டு சாயும்!
சென்னை காவல்துறைக்குள் அமைச்சர்கள், ஆளும்கட்சியினரின் விசுவாசிகள் என்று கூறி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்கள் சமீபத்தில் தூக்கியடிக்கப்பட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது. அதில் பாதிதான் உண்மையாம். துறையில் ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்தவரின் கோஷ்டியிலிருந்து வெளியேறி, புதிதாக அதிகாரத்துக்கு வந்தவர் பக்கம் தாவியவர்களுக்கு மட்டுமே இடமாறுதலில் ஜாக்பாட் அடித்ததாம். இதில், நேர்மையான இன்ஸ்பெக்டர்கள் சிலர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அம்பத்தூர் காவல் சரகத்தில் பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், வசூல் மழை பொழியும் காவல் நிலையத்தைக் கேட்டு வாங்கியிருக்கிறாராம்.
அண்ணாநகர் காவல் மாவட்டத்தில், அமைச்சரின் ஆசிபெற்ற உதவி கமிஷனர் ஒருவருக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் குட்கா பிரச்னையில் ஆரம்பத்திலிருந்தே ஒத்துவரவில்லை. அதிகாரத்துக்கு கட்டுப்பட மறுத்த அந்த இன்ஸ்பெக்டரைக் காத்திருப்பு பட்டியலுக்கு தூக்கியடித்திருக்கிறார்கள்.
காவல்துறையா, தாவல்துறையா?
சென்னை, மேற்கு மாவட்ட தி.மு.க-வில் போஸ்டர் யுத்தம் பெரிதாக வெடித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞரணி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில், மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் படம் இடம்பெறவில்லை. இதனால் சிற்றரசு, `என் படத்தை ஏன் போடுவதில்லை... பெயரை ஏன் சிறிதாகப் போட்டீர்கள்... முன்னாள் மாவட்டம் அன்பழகனுக்கு நான் எந்த வகையில் குறைந்துபோய்விட்டேன்?’ என்றெல்லாம் கொந்தளித்தாராம்.
இதைக் கேட்ட சீனியர் நிர்வாகி ஒருவர், ``தம்பி, அனுபவம் இல்லாம, சின்னப்புள்ளைத்தனமா பேசாதீங்க. அன்பழகன், இருந்தப்பவும் தலைவர், தளபதி படங்களை மட்டும்தான் போஸ்டரில் போடுவோம். அதுல மாவட்டச் செயலாளரின் பெயர் மட்டும்தான் இடம்பெறும். பழைய போஸ்டரையெல்லாம் எடுத்துப் பாருங்க...’’ என்று அட்வைஸ் செய்தாராம். ஆனால், அப்போதும் அடங்காத சிற்றரசு பிரச்னையை உதயநிதியிடம் கொண்டு செல்லவிருக்கிறாராம்.
`டீச்சர்... இவன் என் தொடையில கிள்ளிட்டான்’கிற ரேஞ்சுக்கு தூள்கிளப்புது இளைஞரணி!
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சியில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் உயரதிகாரிகள் நொந்துபோயிருக்கிறார்கள். வரி விதிப்பில் அந்த அதிகாரி செய்த குளறுபடிகளால், அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அது குறித்து பெண் அதிகாரியிடம் விளக்கம் கேட்டால், உயரதிகாரிகளையே ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு திணறடிக்கிறாராம். இதனால், அந்த அதிகாரி குறித்த ஃபைலை நகராட்சிகளின் நிர்வாகத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறதாம் ஃபைல்.
என்னவென்று விசாரித்தால், இதற்கெல்லாம் ஆளும்கட்சி கூட்டணியிலிருக்கும் ஒரு புரட்சிகரமான கட்சியின் பின்புலம்தான் காரணம் என்று தெரிந்து, அதிர்ந்து போனார்களாம் அதிகாரிகள். திருவள்ளூரில் அந்தப் பெண் அதிகாரி கட்டியிருக்கும் பிரமாண்ட பங்களாவைப் பார்த்து துறையின் இதர அதிகாரிகள் வாயைப் பிளக்கிறார்கள்.
வரி விதிப்பில் புரட்சி செஞ்சிருக்காங்கனு சொல்லுங்க!
மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வன்னியர் சங்க செயல் வீரர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் `பாக்கம்’ சக்திவேல், இதே இயக்கத்திலிருந்து பிரிந்து, `மாவீரன் வன்னியர் சங்கம்’ அமைப்பை நடத்தும் வி.ஜி.கே.மணி என்பவரை ஏகவசனத்தில் தரக்குறைவாகப் பேசினார். இதற்கு பதிலடியாக, மாவீரன் வன்னியர் சங்க மயிலாடுதுறை நகரச் செயலாளர் இளையராஜாவும் அவரின் நண்பர்களும், சக்திவேலை கடுமையாகத் தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது குறித்து போலீஸில் சக்திவேல் புகாரளித்ததால், இளையராஜா கைதுசெய்யப்பட்டார். இந்தநிலையில், மயிலாடுதுறை ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த சக்திவேலை, மாவீரன் வன்னியர் சங்கத்தின் ஆட்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பியவர், எதிர்முகாமின் வி.ஜி.கே.மணியைத் தொடர்புகொண்டு, `சமாதானம்’ பேசி, நிலைமையைச் சமாளித்தாராம். ரணகளத்திலும் சூதானமாக காய்நகர்த்தியவரின் பராக்கிரமத்தைப் பார்த்து, அடியாட்களே சற்று மிரண்டுதான்போனார்களாம்.
`பேச்சு பேச்சா இருக்கணும்... ஆமா!’
புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் பெயருக்குத்தான் கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்றன. மற்றபடி இருதரப்பிலும் இருப்பவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டுதான் திரிகிறார்கள். சமீபத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதுக்கோட்டை, திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை. கேட்டால், ``எங்களுக்கு அழைப்பு இல்லை’’ என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். இதற்கு சில நாள்கள் முன்னர் தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
``ஏன் இப்படி?’’ என்று தி.மு.க தரப்பைக் கேட்டால், ``கதர்க் கட்சியினர் செய்த துரோகத்தை மறக்க முடியுமா?’’ என்று ஃப்ளாஷ்பேக் கொசுவத்தியைப் பற்றவைக்கிறார்கள். ``நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியை தி.மு.க கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஓட்டை மாற்றிப்போட்டதால் அந்தக் கனவு பறிபோனது மட்டுமன்றி, அந்தப் பதவி எதிர்க்கட்சியான அ.தி.மு.க வசம் சென்றுவிட்டது. அப்புறம் எப்படி அவர்களைக் கூட்டணிக் கட்சியாகக் கருத முடியும்?’’ என்று கொந்தளிக்கிறது தி.மு.க தரப்பு.
உடன்பிறப்புகளைக் `கதற’விட்ட கதர்!
தமிழகத்தில், புதியதாக பிரித்து உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் முடிந்துள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளாக, `தன்னுடைய மனைவிதான் வேலூர் மாநகராட்சியின் நிழல் மேயர்’ என்று பந்தா காட்டுகிறாராம் அமைச்சர் வீரமணியின் வலதுகரமான ஜெயப்பிரகாசம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கான அறங்காவலர் குழுத் தலைவராகவும், வேலூர் மாநகர மாவட்ட துணைச் செயலாளராகவும் இருக்கும் இவர், வேலூர் மாநகராட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சி உட்பட கட்சி நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தன் மனைவி அமலநிருபாவை அழைத்துவருகிறார். அதிகாரிகள் உட்பட கட்சியினர் பலரிடமும் மனைவியை அறிமுகப்படுத்தி, ``மேடம் யாருன்னு தெரியுமில்ல...’’ என்று சொல்லி, `வருங்கால மேயர்’ என்பதை உணர்த்துகிறாராம்!
அப்படியே பெண்கள் மேயரா வந்துட்டாலும், அவங்களை சுதந்திரமா செயல்பட விட்டுருவீங்களா மிஸ்டர் கரைவேட்டிஸ்?!
சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் தொடரும் சர்ச்சைகளால் மன உளைச்சலில் இருக்கிறாராம் சீமான். கடந்த சில நாள்களாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர், செப்டம்பர் 28-ம் தேதி வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சீமான் உடல்நலக்குறைவால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் பரவவும்... நாம் தமிழர் தம்பிகள் துடித்துப்போனார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிகூட `சீமான் நலம் பெற்று விரைவில் அரசியல் பணியைத் தொடர வேண்டும்’ என்று ட்வீட் செய்தார். தற்போது, `மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட சீமானின் உடல்நிலை சீராக இருக்கிறது’ என்கிறது நாம் தமிழர் வட்டாரம். விரைவில் அவர் முழுவீச்சுடன் அரசியல் பணியைத் தொடர்வார் என சீமானின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கமான், கமான்... சீமான்!
source https://www.vikatan.com/news/politics/from-sasikala-release-to-seeman-health-update-kazhugar-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக