காவிரியில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆறு திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம் வழியாகச் சென்று கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு 5 கிலோமீட்டர் தெற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அதில் நீந்திவரும் முதலைகள் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
பாசனக் கால்வாய்களில் நடப்பவர்களையும், குளிப்பதற்காக ஆற்றில் இறங்குபவர்களையும் அந்த முதலைகள் அடிக்கடி கடித்துக் குதறுவது தொடர்கதையாகி வருகிறது. மேய்ச்சலுக்காக செல்லும் ஆடுகள் மற்றும் மாடுகளையும் அவை விட்டு வைப்பதில்லை. நீர் வரத்து அதிகமில்லாத நேரத்தில் ஆற்றில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரிலும், ஏரி மற்றும் குட்டைகளிலும் இருக்கும் முதலைகள் உணவு தேடி ஊருக்குள் வரும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறும்.
கடந்த மே மாதம் காட்டுமன்னார்கோயிலுக்கு அடுத்து பொன்னோரி கிராமத்தில் இருக்கும் ஏரிக்கரையில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த முதலை ஒன்று, மக்களின் நடமாட்டத்தைக் கண்டு அங்கிருந்த புதரில் மறைந்திருந்தது. தற்செயலாக அதனைக் கண்ட மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்திருக்கும் பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்கின்ற அறிவானந்தம், தனது ஊரைக் கடக்கும் பழைய கொள்ளிடம் ஆற்றில் நேற்றிரவு குளிப்பதற்காகச் சென்றார். அப்போது இரைக்காக அங்கு காத்திருந்த முதலை ஒன்று முனுசாமியை தாவி கவ்விப் பிடித்து ஆற்று நீரில் வேகமாக இழுத்துச் சென்றது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து அங்கு விரைந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் முனுசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிதம்பரம்-சீர்காழி சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதையடுத்து காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும், தனியார் முதலை மீட்புக் குழுவினரும் பழைய கொள்ளிடம் ஆற்றில் படகில் சென்று முனுசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை சம்பவ இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் மேலகுண்டலவாடி என்ற பகுதியில் உயிரிழந்த முனுசாமியின் உடலை, முதலை வாயில் கடித்தபடி பிடித்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அப்போது படகின் துடுப்பைக் கொண்டு முதலையை தாக்கினர் மீட்புக் குழுவினர். அதையடுத்து முனுசாமியின் உடலை வாயிலிருந்து விடுவித்துவிட்டு அங்கிருந்து நீந்தித் தப்பியது முதலை.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய உயிரிழந்த முனுசாமியின் உறவினர் ஆனந்தன், “கடந்த 30 வருஷத்துல இதே பழைய கொள்ளிடம் ஆத்து கரையோரத்துல மட்டும் 15-க்கும் மேற்பட்டவங்களை முதலைங்க இழுத்துட்டுப் போயி கடிச்சிப் போட்டுடுச்சிங்க. அவங்க எல்லாருமே செத்துப் போயிட்டாங்க.
Also Read: பசியால் வாடும் முதலைகள்... ஊருக்குள் நுழையும் ஆபத்து... அணைக்கரையை கவனிக்குமா அரசு?
இங்க மட்டும் சுமார் 100 முதலைங்க இருக்கும். நேத்து ராத்திரி முனுசாமி 7 மணிக்கு ஆத்துல குளிக்கப் போயிருக்காரு. அப்போ அங்க இருந்த முதலை அவரோட காலை பிடிச்சி வேகமா இழுத்துக்கிட்டு போயிடுச்சி. அப்போ அங்க இருந்த பையன் ஒருத்தன்தான் கூச்சல் போட்டு ஊருக்காரங்களை கூப்பிட்டிருக்கான். அதுக்கப்புறம்தான் ராத்திரி முழுக்கத் தேடி முதலை வாயில இருந்து அவர் உடலை எடுத்திருக்காங்க. அந்த முதலை ராத்திரி முழுக்க அவரோட உடம்பை வாயிலையே கடிச்சிக்கிட்டிருந்துச்சி. மீட்புக் குழுக்காரங்க துடுப்பால அடிச்சப்போ கூட அவ்ளோ சீக்கிரம் உடம்பை விட்டுத்தரல அது” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/a-tragedy-caused-to-a-oldman-by-the-crocodiles-in-kollidam-river-at-cuddalore-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக