கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிக்கு சென்றபோதுதான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையிலிருந்த அவரின் உடல்நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், திடீரென நேற்று முன்தினம் மாலை அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. இது தொடர்பாக நேற்று மாலை 6.30 மணியளவில் மருத்துவமனை தரப்பிலிருந்தும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் சிகிச்சையிலிருந்த அவர், இன்று மதியம் 1.04 மணியளவில் உயிரிழந்தார். பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரின் உடல் சென்னை சத்யம் தியேட்டர் கார் பார்க்கிங்கில் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், அவரின் உடலை ரெட்ஹில்ஸில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/legendary-singer-s-p-balasubrahmanyam-is-no-more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக