Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

புதுச்சேரி: கோடிக்கணக்கில் ஏலம்; பதுக்கப்பட்ட கோயில் சிலைகள்! சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்று வந்த குற்றச்சாட்டில் தீனதயாளன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி கோலாஸ் நகரில் மேரி தெரசா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. அங்கு பதுக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள தொன்மையான 11 சிலைகளை பறிமுதல் செய்தனர், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுடன் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார்

இந்நிலையில், புதுச்சேரி ரோமன் ரொலான் வீதியிலுள்ள ஒருவரது வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் சென்றது. அதனடிப்படையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார், நேற்று அந்த வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 74 சிலைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் ஐம்பொன், உலோகம் மற்றும் கற்களால் வடிவமைக்கப்பட்ட பழமையான சிலைகள்.

Also Read: 40 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்திலிருந்து அனந்தமங்கலம் திரும்பும் ராமர் சிலை... கிடைத்தது எப்படி?

முதல்கட்ட விசாரணையில் வீட்டின் உரிமையாளரான ஜான் பால் ராஜரத்தினம், கோலாஸ் நகர் மேரி தெரசாவின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், ``புதுச்சேரியில் உள்ள ஜான்‌ பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டில் தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயில்களில் இருக்கும் சிலைகளை மறைத்து வைத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல்

அதையடுத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் அடிப்படையில், அந்த வீட்டில் ஆய்வு செய்வதற்காகக் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம். அதன்பிறகு, வீட்டின் உரிமையாளர் ஜான் பால் ராஜரத்தினம் மற்றும் இந்து அதிகாரிகள் முன்னிலையில் சோதனை மேற்கொண்டோம்.

அப்போது 74 கடவுள் சிலைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தோம். இதில், ஐம்பொன் மற்றும் உலோகத்திலான 60 சிலைகளும், கற்களால் வடிவமைக்கப்பட்ட 14 சிலைகளும் கிடைத்திருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகள் இல்லை. அவை அனைத்தும் கோயில் வழிபாட்டிற்கு வைக்கப்படும் உற்சவ சிலைகள். அதனால், இவை அனைத்து கடத்தப்பட்ட சிலைகளாக இருக்கலாம்.

Also Read: `22 சிலைகள்; 48 நாள்கள்; பல கோடி மதிப்பு!' - கோயில் கொள்ளை வழக்கில் அதிரடி காட்டிய தஞ்சை போலீஸார்

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தெந்த கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்டது என்ற விசாரணை செய்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கோயில்களில் சிலைகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏலத்தின் மூலமே இந்த சிலைகள் விற்கப்படுகின்றன. அதன்படி, ஒரு சிலை 2 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை விற்கப்படும். அப்படிப் பார்த்தால் தற்போது கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/tn-idol-wing-seized-20-statues-in-puducherry-raid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக