Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சீர்காழி: கோலம்போட வந்த ஆசிரியர் கொலை! - விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகி கைது

சீர்காழியில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் வீட்டு வாசலில் கோலமிட வந்த ஆசிரியர் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால், அப்பெண்மணி அடித்துக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிருந்தா

நாகை மாவட்டம் சீர்காழி திருவள்ளுவர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தலைமை ஆசிரியரான ஆனந்த ஜோதி. இவரின் மனைவி சித்ரா (வயது 49). கடந்த 18-ம் தேதி அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சீர்காழி போலீஸார் வழக்கு பதிந்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை போலீஸார் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராப் பதிவுகள் மற்றும் தொலைபேசி தொடர்புகளைக் கொண்டு விசாரணை நடத்தினார்கள். இதில், சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பிருந்தா (வயது 27) என்பவருடன், சட்டநாதபுரம் கணபதி நகரைச் சேர்ந்தவரும், விஜய் ரசிகர்மன்ற மாவட்ட நிர்வாகியுமான சையது ரியாஸ்தீன் (வயது 29) அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்றிரவு சையது ரியாஸ்தீன் மற்றும் பிருந்தாவை போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சையது ரியாஸ்தீன் சித்ராவை இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் பிருந்தா. கடந்த 2014 -ம் ஆண்டு சீர்காழியில் கம்ப்யூட்டர் சென்டரில் பயிற்சிபெற வந்தபோது அவருக்கும், சையது ரியாசுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் 2016 - ம் ஆண்டு பிருந்தாவுக்கும் அரியலூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே சையது ரியாஸ்தீனும், பிருந்தாவின் தந்தை குணசேகரனும் சேர்ந்து கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி சையது ரியாஸ்தீன்

இந்நிலையில், திருமணமாகி 5 மாதத்தில் பிருந்தாவின் கணவர் செல்வகுமார் சிங்கப்பூரில் பணிக்குச் சென்றுவிட்டார். இதனையடுத்து பிருந்தா, சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு வீடு பிடித்து குடியேறியுள்ளார். இங்கு வந்தபின் பிருந்தாவுக்கும், சையது ரியாசுதீனுக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் செல்போனில் அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பது மட்டுமன்றி, நேரில் சந்தித்தும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இதனைக் கண்ட சித்ரா, அவர்களைக் கண்டித்ததுடன் சையது ரியாஸ்தீன், பிருந்தா வீட்டுக்கு வருவதைத் தடை செய்துள்ளார். ஆத்திரமடைந்த சையது ரியாஸ்தீன், தனக்கு இடையூறாக இருந்த சித்ராவைக் கொலைசெய்யத் திட்டமிட்டு இரண்டு முறை ஒத்திகை பார்த்திருக்கிறார். கடந்த 18 -ம் தேதி விடியற்காலை 3:30 மணி முதல் சித்ராவின் வீட்டு அருகே காத்திருந்து, 4:25 மணிக்கு இரும்பு பைப்பால் சித்ராவை அடித்து கொலை செய்துள்ளார். தற்போது, சையது ரியாஸ்தீன் மற்றும் பிருந்தாவைக் கைது செய்துள்ளோம். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்பு பைப் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/vijay-fans-association-district-cadre-arrested-for-murder-in-sirkali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக