Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ஈ சாலா கப் நமீதாதானா... இப்ப என்னப் பண்ணுறது சொல்லு கோலி, சொல்லு கோலி! #KXIPvRCB

அகில உலக கிரிக்கெட் ரசிகர்களால் `குட்டி கோலி' என அழைக்கப்படுகிற கே.எல்.ராகுலின் குட்டி பெங்களூர் அணியும், `பெரிய ராகுல்' என அழைக்கப்படாத விராட் கோலியின் பெரிய பெங்களூர் அணியும் நேற்று களம் எட்டில் மோதியது. கப் விஷயத்தில் ஆர்சிபி-யாவது சைக்கிளில் லைட் இல்லாமல்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. கிங்ஸ் லெவனோ சைக்கிளே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. ப்ச்ச்...

`இந்த அவல நிலை மாறவேண்டும், கவலை நிலை மறைய வேண்டும், குவளையில் வெற்றி அள்ளிப் பருக வேண்டும், ஈ சாலா கப் நமீதாவாக, ஸாரி நம்தாக வேண்டும்' என நாக்குப்பூச்சியை தண்ணி ஊற்றி உசுப்பிவிட்டு களத்துக்குள் குதித்தன இரு அணிகளும். 'காயம்பட்ட ஒரு சிங்கத்தோட மூச்சுக்காத்தே கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். இங்கே இரண்டு சிங்கம். அலறல் கதறல் எல்லாம் படுபயங்கரமா இருக்கும்' என துபாய் நடுங்கிப்போனது.

#KXIPvRCB

டாஸ் ஜெயித்ததும் குஷியான ஆர்சிபி ரசிகர்களின் சந்தோஷத்தை கால் மாத்திரை அளவு கூட நீடிக்கவிடாமல், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார் கோலி. பஞ்சாப் அணியில் ஜோர்டன் மற்றும் கவுதமுக்கு பதிலாக நீஷம் மற்றும் முருகன் அஷ்வின் இணைந்தனர். பெங்களூர் அணியில் `எந்தவித மாற்றமும் இல்லை'.

முன்னாள் ஆர்சிபி வீரர்களான கே.எல்.ராகுலும் மயாங்க் அகர்வாலும் பஞ்சாபின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இந்நாள் ஆர்சிபி வீரரான உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளை பார்த்து பக்குவமாக வீசி ஆச்சர்யம் அளித்த உமேஷ், கடைசி பந்தில் பவுண்டரி கொடுத்து ரசிகர்களை இயல்பு நிலைக்கு திருப்பினார். அடுத்ததாக, ஹிப்பியாக மாற வேண்டி ஹேப்பியாக முடிவளர்த்து சுற்றிக்கொண்டிருக்கும் ஸ்டெய்னை வம்படியாக இழுத்து வந்து இரண்டாவது ஓவர் போடவைத்தார் கோலி. அந்த ஓவரில் கவர் பாயின்ட் பக்கட்டு ஒரு பன்ச், தேர்ட் மேன் பக்கட்டு ஒரு சாப். இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ராகுல்.

முதல் ஓவரில் 1 பவுண்டரி, இரண்டாவது பவுரில் 2 பவுண்டரி, அப்போ மூணாவது ஓவரில் 3 பவுண்டரி பறக்கும் என காத்திருந்தவர்களுக்கு மீண்டும் ஆச்சர்யம் அளித்தார் உமேஷ். ஆமாம், அந்த ஓவரில் 2 பவுண்டரிகள்தாம். அகர்வால் தம் பங்குக்கு பேட்டை சுழற்றினார். நான்காவது ஓவர் வீச வந்தார் சைனி. அதில் ஒரு பவுண்டரி கிட்டியது. பார்டனர்ஷிப்பில் 57 ரன்கள் குவித்திருந்த நிலையில், `சரி சரி பங்கை பிரி, பங்கை பிரி' என தன்னுடைய 26 ரன்களை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டினார் மயாங்க் அகர்வால். சஹால் வீசிய கூக்ளி, சிக்கன் டின்னர் அடித்தது!

#KXIPvRCB

அதன்பிறகு, ஆர்சிபியில் யாரும் ஒன்றும் அடிக்கவில்லை. ஏன், முழு மேட்சிலுமே யாரும் அடிக்கவில்லை. ராகுல் மட்டும்தான் அடித்தார். துவைத்தார். பிழிந்தார். காயப்போட்டு எடுத்து அயர்ன் செய்துவைத்தார். அவரும் நிக்கோலஸ் பூரானும் ஜோடி சேர்ந்து, 13வது ஒவர் வரை நிலைத்து ஆடி, அணியின் ஸ்கோரை 114 வரை உயர்த்தினர். மித மிஞ்சிய பொறுமையும், மீதம் கொஞ்சம் பொறுப்பும் கொண்டு 18 பந்தில் 17 ரன்கள் தட்டியிருந்த பூரான், துபே வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் பெவிலியனுக்கு ரெஃப்ரெஷாக கிளம்பினார். அட, அடுத்து ஃபீல்டிங் பண்ணணும்ல!

மீண்டும் 16-வது ஓவரை வீசிய துபே, பூரானுக்கு துணையாக மேக்ஸ்வெல்லையும் அனுப்பினார். ஆமாம், இரண்டு பேர் இருந்தால்தானே ஹேண்ட் கிரிக்கெட்டாவது விளையாட முடியும். ஸ்டெய்ன் வீசிய 17-வது ஓவரின் 5வது பந்தில்தான், பஞ்சாப் அணியின் இரண்டாவது சிக்ஸையே அடித்தார் ராகுல். `என்ன தம்பி சொல்றே?' என நம்மைப் போன்ற அதிர்ச்சியான கோலி, அடுத்த பந்திலேயே ராகுல் கொடுத்த அல்வா கேட்சை ஆக்கு பாக்கு வெத்தலைப் பாக்கு ஆடி டிராப் செய்தார். வேறு யாராவது கேட்சை டிராப் செய்திருந்தால், அவரை அணியில் இருந்தே டிராப் செய்திருப்பார் கோலி. `இப்போ என்ன செய்யப்போற சொல்லு கோலி, சொல்லு' என ஆர்சிபி வீரர்கள் புழுங்கினர்.

#KXIPvRCB

`நெளிந்த கப்பை நெம்பிவிட்டு உடைத்த கதை'யாக, அடுத்த ஓவரிலேயே ராகுல் கொடுத்த இன்னொரு கேட்சையும் டிராப் செய்தார் கோலி. சித்தார்த் அபிமன்யுவின் தியாகத்தை உணர்ந்த மித்ரனைப் போல், கோலியின் தியாகத்தை உணர்ந்த ராகுல், பேட்டிங்கில் வேகம் கூட்டினார். அடுத்த ஓவரில் மட்டும், 3 சிக்ஸர்கள் மட்டும் 2 பவுண்டரிகள். ஹேப்பி ஹிப்பி ஸ்டெய்னுக்கு பி.பி. ஏறியது. கடைசி ஓவரை வீச வந்தார் `குட்டி யுவி' துபே. முதல் மூன்று பந்துகளை கருண் நாயர் அடித்து பறக்கவிட்டு, ராகுலின் பக்கம் ஆட்டோ ஏற்றி அனுப்பிவைத்தார். ராகுலும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என ஊமைக் குத்தாக குத்திவிட, அணியின் ஸ்கோர் 206-ஆக உயர்ந்தது. கடைசி பந்தில் அடித்த சிக்ஸரின் மூலம், ஐபிஎல்-ல் ஒரு இந்தியர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் (132 ரன்கள்) என்ற சாதனையை எட்டிப்பிடித்தார் ராகுல்.

இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ஆர்சிபியின் 2K ரசிகர்களிடம், `நீ ராகுல் சென்சுரி அடிச்சுட்டான்னு வருத்தத்துல இருக்க. நான், ராகுலோட கெயில் இறங்கலையேனு சமாதனத்துல இருக்கேன்' என வழக்கமான மென்சோக புன்சிரிப்பை உதிர்த்தனர் ஆர்சிபியின் 90'ஸ் ரசிகர்கள். 206 எனும் இமாலய, இத்தாலிய, இந்தோனேஷிய இலக்கை விரட்டிப்பிடிக்க தயார் ஆனது விராட் கோலியின் படை.
#KXIPvRCB

அறிமுக மேட்ச் எனும் தடைக்கல்லை, அரைசதம் அடித்து படிக்கல்லாக மாற்றிய படிக்கல்லும், ஃபின்ச்சும் பெங்களூர் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரிலேயே காற்று, காட்ரெல் பக்கம் வீசியது. 4-வது பந்திலேயே படிக்கல்லைத் தூக்கி எடைக்குப்போட்டார். ஒன்டவுனில் இறங்கினார் ஃபிலிப். ஷமி வீசிய 2வது ஓவரின் 3வது பந்தை பேடில் வாங்கிய ஃபிலிப்பை நோக்கி, யோசிக்காமல் ஒற்றை கையைத் தூக்கினார் அம்பயர். `ரிவ்யூலாம் வேணாம் ஃபிலிப்ஸே' என ஃபின்ச்சும் கடுப்பாக, ரிவ்யூக்கு செல்லாமல் பெவிலியனுக்கு சென்றார் ஃபிலிப்.

அடுத்ததாக கேப்டன் கோலி இறங்கினார். `இன்னைக்கு சேஸிங் கிங்கோட வேட்டை இருக்குடோய். நான் போய் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வந்துடுறேன்' என கிச்சனுக்குள் எழுந்துபோன ஆர்சிபி ரசிகர்கள் ஸ்நாக்ஸ் எடுத்து வருவதற்குள் அவுட்டாகி கிளம்பினார் கோலி. அவரை ராணுவ மரியாதையோட அனுப்பி வைத்த காட்ரெலைக் கண்டு கதறினார்கள். அடுத்து டிவில்லியர்ஸ் வந்தார். சிக்ஸர், பவுண்டரி என ஒண்டியாகப் போராடிக்கொண்டிருந்தார். காட்ரெல் வீசிய வெடிகுண்டுகளை காட்ரெல் பக்கமே அடித்து வெடிக்கவைத்தார். 5வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி. பிஷ்னோய் வீசிய 6வது ஓவரில், 3 பவுண்டரி என அடித்துக்கொண்டிருந்த டிவில்லியர்ஸைப் பார்த்து, ஆர்சிபி ரசிகர்களுக்கு 1338-வது முறையாக நம்பிக்கைப் பூத்தது.

Also Read: தோனியை ஃபாலோ செய்த கோலி... பழைய ஃபார்முக்கு திரும்பிய ஆர்சிபி-யின் டாப் 10 தருணங்கள்! #KXIPvRCB

இங்கிட்டு பூத்த பூவை, அங்கிட்டு கிள்ளி எறிந்தார் ஃபின்ச். பிஷ்னோய் வீசிய 8வது ஓவரில், நடையைக் கட்டினார். அடுத்த ஓவரிலேயே, ஏபிடியும் அவுட். ஏபிடி பார்சலின் அனுப்புநர் முருகன் அஷ்வின். அதன் பிறகு மேட்சில் பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை. ஆர்சிபி வீரர்கள்தான் பிட்சுக்கும் பெவிலியனுக்கும் குறுக்க மறுக்க நடந்துக்கொண்டிருந்தார்கள். நின்றுநிதானமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர், 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதர ஆர்சிபி பெளலர்களும் தங்களது பேட்டிங் திறமையை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். என்ன, அதைப் பார்க்கத்தான் யாரும் விழித்திருக்கவில்லை. அப்படி இப்படி உருட்டி, 17வது ஓவரில் ஆல்-அவுட்டாகி 109 ரன்களுக்குள் சுருண்டது பெங்களூர். 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப்.

#KXIPvRCB

69 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 14 பவுண்டரிகள் என, ஒற்றை ஆளாக ஆர்சிபி அணியை விட அதிக ரன்கள் எடுத்திருந்த ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. "கேப்டன் பதவியே பிரஷர் சார். நான் கேப்டனே இல்லைனு நினைச்சுகிட்டேன் சார். நான் கேப்டனே இல்ல சார். ஐ எம் நார்மல் மனுஷன் ஃப்ரம் கிங்ஸ் லெவன் பஞ்சாப். இது எனக்கு கிடைச்ச வெற்றியில்லை. என் அணிக்கு கிடைச்ச வெற்றி'' என்றார் கே.எல்.ராகுல். "வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும். விழுந்தால் விதைபோல் விழுவோம். எழுந்தால் மலைபோல் எழுவோம். எழுவோம்'' என்றார் கோலி. அழுகை எனும் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார்கள் ஆர்சிபி ரசிகர்கள். ஈ சாலா கப்பு...



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kings-xi-punjab-vs-royal-challengers-bangalore-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக