பப்ஜி கேம் மூலம் காதல் ஏற்பட்டு இளைஞரும், இளம்பெண்ணும் திருமணம் செய்துகொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேம் மூலம் வேறு பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாட முடியும். அதில், ஒருவருக்கொருவர் ஆன்லைன் மூலம் பேசியபடியே இணைந்து விளையாடலாம். இப்படி இணைந்து விளையாடியவர்கள் திருமணம் செய்து கணவன் - மனைவி ஆகிவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளையைச் சேர்ந்தவர் சசிகுமார். மரவியாபாரியான இவரது இரண்டாவது மகள் பபிஷா (20). பபிஷா, திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றார். பின்னர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.
வீட்டில் இருந்தவர், ஸ்மார்ட் போனில் பப்ஜி கேம் விளையாடத் தொடங்கினார். பப்ஜி விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி, பல மணிநேரம் மொபைலில் விளையாடி கொண்டிருந்திருக்கிறார். பப்ஜி விளையாட்டின் மூலம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜின் பிரின்ஸ் (24) என்பவர் பபிஷாவுக்கு அறிமுகமானார். இருவரும் சேர்ந்து பப்ஜி விளயாடியதால் நட்பானார்கள். பின்னர் அவர்களுக்குள் காதல் மலந்திருக்கிறது.
எப்போதும் மொபைலும் கையுமாக இருக்கும் மகள் கேம்தான் விளையாடிக்கொண்டிருக்கிறாள் என பெற்றோரும் சாதாரணமாக இருந்துவிட்டனர். இந்நிலையில், பபிஷாவும், அஜின் பிரின்சும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டனர். இதையடுத்து, கடந்த 19-ம் தேதி அஜின் பிரின்ஸ் காரில் செறுகோல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பபிஷா வீட்டைவிட்டு வெளியேறி சாலை ஓரத்தில் காரில் காத்திருந்த அஜின் பிரின்ஸுடன் சென்றுவிட்டார்.
இதற்கிடையில் மகளைக் காணவில்லை என சசிகுமார் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்கு பதிவு செய்த திருவட்டாறு காவல் துறையினர் பபிஷாவைத் தேடத்தொடங்கினர். போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி திருவட்டாறு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. மகளை தன்னுடன் வந்துவிடும்படி பெற்றோர் அழைத்தனர். ஆனால், பபிஷா தனது காதலனுடன் செல்வதாகத் தெரிவித்தார்.
Also Read: PUBG:`FAU-G' அறிமுகம்; ஜிடிபி வீழ்ச்சி; சீனாவுக்கு எச்சரிக்கை - பப்ஜி தடையின் பின்னணி என்ன?
இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினரும் அவர்களை சேர்த்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் பபிஷா மற்றும் அஜின் பிரின்ஸ் ஆகியோர் அருகில் உள்ள ஆலயத்தில் வைத்து மாலை மாற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். பப்ஜி கேம் மூலம் திருமணம் செய்துகொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
source https://www.vikatan.com/news/tamilnadu/kanyakumari-couple-gets-to-know-via-pubg-married
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக