Ad

புதன், 23 செப்டம்பர், 2020

ரோஹித் செம்ம ஹிட்டு... ஆமா, கொல்கத்தாவுக்கு டார்கெட்னா என்னன்னு தெரியுமா? #KKRvMI

ஐபிஎல்-ல் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் சூடு பிடிக்கும்போது, இந்தியாவிலிருக்கும் பல மைதானங்கள் யானை ஏறி விளையாடியது போல் மோசமாகியிருக்கும். அதில் என்ன அடித்தாலும் ரன்களே வராது. இந்த முறை துபாய் என்பதால், ஆரம்ப போட்டிகளுக்கு புற்களை மாடு மேயும் அளவுக்கு வளர்த்தியிருக்கிறார்கள்.

"பந்து அப்படி திரும்பும், இப்படி திரும்பும் என்றார்கள், ஆனால் எல்லாமே பேட்டுக்கு வருகிறது" என பேட்டியளித்திருந்தார் அஷ்வின். ஆம், எல்லா பந்துகளும் 'என்னைய அடி' என்பது போலத்தான் பேட்டுக்கு வருகிறது. அப்படியும் போட்டிகள் ஒன்சைடு கேம்களாக மாறும்போது கடுப்பாகிறது. சென்னை, ராஜஸ்தான் ஆட்டத்தில் தோனி ஆடிய தடுப்பாட்டத்தைப் பார்த்துக் கடுப்பாகிப்படுத்தால், நேற்று கொல்கத்தா மொத்தமுமே, தோனியைவிட மோசமாக தடுப்பாட்டம் ஆடினர்.

#KKRvMI

195 ரன்கள் எனும்போது, ஓவருக்கு பத்து ரன்கள் தேவைப்படும். ஆனால், எல்லா வீரர்களுமே டீசல் இன்ஜின்போல், ஒரு ஓவரை எடுத்துக்கொண்டனர். எப்படியும் பும்ராவின் நான்கு ஓவர்களில் ஒன்றும் அடிக்கப்போவதில்லை (கம்மின்ஸ் ஆறுதல்). அப்படியிருக்க, டார்கெட், ரன்ரேட் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிங்கிள் ரொட்டேட் செய்து கொடுமைப் படுத்தினர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பயிற்சியாளராக அமர்ந்திருந்த மெக்கலத்தை ஜெர்ஸி மாட்டிக்கொண்டு ஆட சொல்லியிருக்கலாம். அப்படியாவது ரன்கள் சற்று வேகமாக வந்திருக்கும்.

இந்த சீசனில் பேட் கம்மின்ஸை 15.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்ததால், க்வாரன்டீனிலிருந்து வெளியே வந்த, முதல் நாளே அவரை சோதித்துப் பார்த்தது கொல்கத்தா. லீகில் இருக்கும் 14 போட்டிகளிலும், அவர் நான்கு ஓவர் வீசினால், ஒரு ஓவருக்கான விலையாக அவர் பெற்றிருக்கப்போவது 27.67 லட்ச ரூபாயாம். அதாவது ஒரு பந்துக்கு 4.6 லட்சம். நியாயமாரே!

டாஸ் வென்ற கொல்கத்தா, பெளலிங் தேர்வு செய்தது. டியூ ஃபேக்டராம். மும்பை அதே பிளேயிங் லெவனுடன் ஆடியது. மும்பை கொல்கத்தா என்றாலே குஷியாகிவிடும். கொல்கத்தா மும்பை இதற்கு முன்பு மோதிய போட்டிகளில், 19 முறை மும்பை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் கடந்த பத்து போட்டிகளில், ஒருமுறை மட்டுமே மும்பையை வென்றிருக்கிறது கொல்கத்தா. மொத்தமாய் ஆறு முறை மட்டுமே, கொல்கத்தா மும்பையை வென்றிருக்கிறது.

ரோஹித், தினேஷ்
கொல்கத்தா பிளேயிங் XI: சுனில் நரைன், ஷுப்மன் கில், நித்திஷ் ராணா, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல், கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், ஷிவம் மவி, நிக்கில் நைக்.
மும்பை பிளேயிங் XI: ரோஹித், டி காக், சூர்யகுமார் யாதவ், சௌரப், க்ரூனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, பேட்டின்சன், பும்ரா, போல்ட், ராகுல் சஹார்.

ரோஹித்தும், டி காக்கும் ஓப்பனிங் இறங்கினார்கள் . ஷிவம் மவி வீசிய பந்தை டி காக் புல் ஷாட் அடிக்க, முயல பந்து மேலே பறந்தது. ஆனால், அது மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த நிக்கில் நைக் கைகளில் எளிதாக லேண்டானது. ஒன் டவுன் சூர்யகுமார் யாதவ். சந்தீப் வாரியரின் ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் சூர்யா. 15 கோடி கொடுத்து வாங்கிய கம்மின்ஸ், தன் முதல் ஓவரிலேயே 15 ரன்களை விட்டுக்கொடுத்தார். சிங்கிள்ஸ், டபுள்ஸ் பற்றியெல்லாம் ரோஹித் யோசிக்கவேயில்லை. கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரி லைனுக்கு விளாசித் தள்ளினார். பவர்பிளே முடிவில் 59 ரன்களை எடுத்திருந்தது மும்பை.

ரோஹித் ஷர்மா

சந்தீப் வாரியர், கம்மின்ஸ் என யார் ஷார்ட் பால் போட்டாலும், அதை சிக்ஸருக்கு அனுப்பினார் ரோஹித். ரஸல் தன் பங்குக்கு ஒரு ஷார்ட் பால் வீச, அதை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பினார் ரோஹித். 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த சூர்யா ரன் அவுட் முறையில் இரண்டாம் ரன்னுக்கு ஆசைப்பட்டு வெளியேறினார். குல்தீப் யாதவின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து, ஐபிஎல்-ல் தன் 200-வது சிக்ஸரைப் பதிவு செய்தார் ரோஹித்.

கம்மின்ஸின் ஓவரில், ஹர்திக் பாண்டியா தன் பங்குக்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என வெளுத்தார். 'ஓவர்சீஸ்ல டபுள் பைக்ல வந்தவண்டா நானு' என நினைத்திருப்பார் கம்மின்ஸ், மூன்று ஒவரிலேயெ விக்கெட் எதுவும் கொடுக்காமல், 49 ரன்கள் விட்டுக்கொடுத்துவிட்டதால், நான்காவது ஓவரை அவர் வீசவேயில்லை. ரஸல் பந்துவீச்சில், 'ஓ குமுதா பந்து இப்படி போகுதா' என வேடிக்கை பார்த்த சீனியர் பாண்டியா பேட்டை ஸ்டம்ப்பில் தட்டி, ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். பெரிதாக ரன் ஏதும் ஓடாமல் இருந்த, ரோஹித் ஏனோ களைப்புடன் காணப்பட்டார். இறுதியாக 18-வது ஓவரில் லாங் ஆனில் நின்றுகொண்டிருந்த கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரோஹித். அதில் 52 ரன்கள், பவுண்டரி, சிக்ஸர்கள் மூலம் வந்தவை.

#KKRvMI
இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. சரி, 9 மணிக்கு டின்னர் ஆர்டர் செய்வோம் என மணியைப் பார்த்தால், மணி 9.30. 20 ஓவர் வீசுவதற்கு, 125 நிமிடத்தை எடுத்து வீணடித்திருக்கிறார்கள்.

போல்ட் வீசிய முதல் ஓவரில் ஷுப்மன் கில் பேட்டிங் பிராக்டீஸ் செய்தார். அடுத்த பேட்டின்சன் ஓவரில் லெக் சைடில் ஒரு சிக்ஸ் அடித்தார் நரைன். அதுவும் இல்லையென்றால், ஸ்கோர் சிங்கிள் டிஜிட்டிலேயே இருந்திருக்கும். அடுத்த போல்ட் ஓவரில் கில் அவுட். சேஸ் செய்யவேண்டிய ரன்கள் அதிகம் என்பதால், பொறுப்பை உணர்ந்து ஒன் டவுனில் இறங்கினார் கேப்டன் தினேஷ் கார்த்திக். ஆனால், ஹிட்டராக மாறாமல், ஸ்டிரைக் ரொட்டேட் செய்து சோதித்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். பும்ராவின் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே அடித்தனர். அடுத்த பேட்டின்சன் ஓவரில் சுத்தல் ஸ்பெஷலிஸ்ட் நரைனும் அவுட். பவர் ப்ளே முடிவிலேயே தேவைப்படும் ரன் ரேட் 12-ஐ நெருங்கிவிட்டது.

ஆனால், அதைப் பற்றி எந்த சலனமும் கொல்கத்தா பேட்டிங்கில் தெரியவில்லை. பத்து ஓவர் முடிவில் 71 ரன்கள். ராகுல் சஹார் வீசிய பந்தை, தூக்கி அடிக்க முயன்று, எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார் தினேஷ் கார்த்திக். அடுத்து இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், உள்ளே வர,' ஓக்கே பை' என கிளம்பினார் நித்திஷ் ரானா. பும்ராவின் முதல் ஓவரில் ஒரு ரன் அடித்தனர் அல்லவா, இரண்டாவது ஓவரில் இரண்டு ரன் எடுத்தனர். பும்ராவின் மூன்றாவது ஓவரில் மார்கன், ரஸல் இருவரும் கிளம்ப, ஆட்டம் மனதளவில் முடிவுக்கு வந்தது. 3 ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார் பும்ரா.

Also Read: ரோஹித் சரவெடிகள்... கொல்கத்தாவை வென்றது மும்பை... #KKRvMI மேட்ச்சின் டாப் 10 தருணங்கள்!

ராஜஸ்தானுக்கு எதிராக தோனி 20-வது ஓவரில் செய்த வானவேடிக்கை ஆறுதல் விளையாட்டை, கம்மின்ஸ் கொல்கத்தா ரசிகர்களுக்கு 18-வது ஓவரில் செய்தார். நான்கு தரமான சிக்ஸர்கள், அதுவும் பும்ரா பந்துவீச்சில். அந்த ஒரு ஓவரைத் தவிர கொல்கத்தா பிடித்த மற்ற அனைத்து ஓவர்களும் நேர விரயம்.

ஓப்பனர்களின் நூறுக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ஆரம்பித்து கொல்கத்தா திருத்திக்கொள்ள அத்தனை விஷயங்கள் இருக்கின்றன.

#KKRvMI

முதல் போட்டியில் ஃபீல்டிங்கில் சொதப்பிய மும்பை, இந்தப் போட்டியில் பட்டாசாய் ஃபீல்டிங் செய்தது. சிறப்பாக பேட் செய்த ரோஹித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால், மும்பை முறையே ஐபிஎல் 2020 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும், கொல்கத்தா கடைசி இடத்தையும் பிடித்துக்கொண்டது. இந்தத் தோல்வியின் மூலம், ஒரே அணியிடம் 20 முறை தோற்ற முதல் அணி என்னும் பெருமையை பெற்றிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-mumbai-indians-win-for-the-20th-time-against-kolkata-knight-riders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக