Ad

புதன், 23 செப்டம்பர், 2020

``யதார்த்தம் ஒன்றே எழுத்தாளர் இமையத்தின் ஆயுதம்..!'' - ஒரு வாசிப்பனுவம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒருவரின் வாசிப்பு ஆரம்பிப்பது ஒரு சில சாதாரணக் கதைகளில்தான். அதன்பின் தமிழ் துணைப்பாட சிறுகதை, நீதிக்கதைகளில்தான். சிறுகதை வடிவத்தில் அடுத்த பாய்ச்சலாக நாவல் வாசிப்பு இருக்கும். அதற்குப் பின் மொழி ஆளுமை, பேசப்பட்ட உணர்வுகளோடு ஒப்பிடுகையில் சிறுகதைகள் வாசிப்புப் பந்தயத்தில் முன்னிலை பெறுகின்றன. இதில் மறுவாசிப்பு செய்யும் சில சிறுகதைகள் சோதனைக்குள்ளாகின்றன, சில ஆட்டம் காணுகின்றன. சில கதைகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் புதிய எண்ணங்களை மெருகூட்டும்போது சாகா வரம் பெற்ற கதைகளாகின்றன.

Reading

கதை சொல்லும் போக்கில் எளிய நடையில் சொல்லப்பட்டால் எத்தனை முறை படித்தாலும் லயிக்க வைக்கின்றன. வாழ்வியல் தத்துவங்கள் சம்பவங்களின் இடையில் வரும்போது மனதில் ஆழமாய்ப் பதிகின்றன. கதை சொல்லும்போது கிளைக்கதையில் ஊடோடி கதை சொல்வது, சம்பவங்களைக் கோவையாக்கி அதில் வரும் திருப்புமுனைகளை சுவாரஸ்யமாக்குவது, முழுக்க முழுக்க அழகியலை வர்ணிப்பது என ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு யுக்தியைக் கையாள்வர்.

ஒரு பேருந்தின் உள்ளே இருந்து விளிம்பு நிலை மக்களின் அவலத்தை மெளனத்துடனும் மனதில் கனத்துடனும் ஜன்னல் வழியே பார்க்க வைப்பது போல் இருப்பவை இமையத்தின் சிறுகதைகள். யதார்த்தம் ஒன்றையே சொற்களின் வழியே ஆயுதமாய்ப் பயன்படுத்தி நம்மைக் கலங்கடிப்பார்.

நிஜ வாழ்க்கையினை எந்த வித ஒப்பனையுமின்றிப் பேச்சுவழக்கில் சொல்லும்போது இன்னும் நம் மனதுக்கு அருகில் கதை நிகழ்வதுபோல் தோன்றுகிறது. எங்கோ நடப்பதுபோல் இல்லாமல் நம் பக்கத்து வீட்டில் அதிகம் பார்த்து கவனியாதுவிட்ட இடங்களைக் கதைக்களமாகக் கொண்டு தேர்வு செய்வதால் மொழி அந்நியப்படவில்லை.

மனித வாழ்வின் பல்வேறு அவலத்தை, இன்பத்தைச் சித்திரிக்கும் சிறுகதையானது வாசிப்பில் இன்பத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. முகமற்றுப் போனவனின் குமுறலையும் சொற்களின் ஊடே விரியும் வாழ்க்கையையும் அதில் நாமும் வாழ்ந்த அனுபவத்தையும் தரவல்லது."நன்மாறன் கோட்டைக் கதையில்" அரசுப்பள்ளியில் டி சி கேட்டு வரும் அந்தப் பெண்ணின் இறுகிய கண்ணிலிருந்து வரும் கண்ணீரில் இன்னும் இருக்கிறது சாதியின் அவலம். பணியாரக்காரம்மா கதையில் பணியாரம் விற்கும் பெண்ணுக்கும் மளிகைக் கடைக்காரருக்கும் உள்ள காதலை யாரும் இவ்வளவு அடர்த்தியாகச் சொல்லியிருக்கமாட்டார்கள்.

எழுத்தாளர் இமையம்

அந்தக்காலத்தில் விசேஷ வீட்டுப் பந்தியில் சாப்பிடுவது தவம் போல. சிறுவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமானது. இலை வைப்பது, பரிமாறுவது என அவர்கள் இன்றும் அதைப் பெருமையாய் உணர்வார்கள். இதனை "நெல்சோறு"கதையில் சொல்லியிருப்பார். பந்தியிலிருந்து சிறுவர்கள் எழுப்பிவிடுவதை, மீண்டும் மீண்டும் செல்வதைச் சொல்லியிருப்பார்.

வீட்டில் திருட்டு போன நகையைப் பறிகொடுத்தவள் சாமி கோயிலில் "பிராது மனு" கட்ட வருகிறாள். அங்கு நேரும் சம்பவங்களும், அறியாமையையும் விளக்கியுள்ளார். இன்னும் இதுபோன்ற வெள்ளந்தி மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது "பிராதுமனு" கதை.

"ஒரு பணக்காரரின் ஆசைக்கு இணங்க மறுக்கும் சித்தாள் வேலை செய்யும் சாந்தாவின் துணிவும் அறிவும் ஒட்டுமொத்த ஆண் பார்வையையும் சவுக்கடி கொடுத்தது போல் தன் "சாந்தா" கதையில் யதார்த்தத்தோடு வெளிப்படுத்தியிருப்பார்.

அரசியலில் முன்னேறாத, வசதி இல்லாத அடிமட்டத் தொண்டனின் வாழ்வை "கட்சிக்காரன்" கதையில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்.

"சாலையை அகலமாக்கும் பணியில் இருக்கும் சர்வேயர் ஆனந்தன் சாலையின் ஓரத்தில் இருக்கும் வயதான தம்பதிகளிடம் பேசிவிட்டுக் கிளம்புகிறார். "இந்தக்கூர ஊட்டுல நெருப்பு வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல’’ என்று சொல்லும்போது நமக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி ஒட்டிக்கொள்கிறது "நறுமணம்" கதையில்.

எழுத்தாளர் இமையம்

ஏடிஎம் பின் நெம்பர் கூட தெரியாத ஆசிரியையும், அவளின் தோழியான வார்டு கவுன்சிலரும் சந்தித்து உரையாடுகின்றனர். முன்னேறிய இருவருக்குப் பின்னாலும் ஆணாதிக்கம் மிகுந்த கணவர்கள் இருக்கின்றனர். "வீடும் கதவும்" எனும் இக்கதையைப் படிக்கும் போது பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறியுள்ளனர், ஆனால் ஒரு சிறிய கால்கட்டுடன் எனப் புரிகிறது.

"துபாய்காரன் பொண்டாட்டி"கதை இமையத்தின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். பத்மாவதியின் மேல்விழுந்த இழுக்குச் சொல், அதற்கு உறவினரின் மெளனம், காலையில் கணவன் வரப்போகிறான்.. ஒரு பெண்ணின் தவிப்பை இரவு முழுக்க அருகில் இருந்து பார்த்தது போன்ற நுட்பமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

"Life is like a snooker game. You hit one. That ball hits another. Ultimately some other ball gets into the pocket.”

இந்தப் பொன்மொழி சிறுகதைக்கும் சாலப் பொருந்தும். ஒரே திசை நோக்கிச் செல்லும் கதையில் வேறு ஒரு எதிர்பாராத முடிவு ஏற்படும்.. அந்த வகையில் "நல்ல சாவு" கதையில் சின்னசாமி ஆசிரியரும் குசலாம்பாளும் விரும்பியதை அறிந்த ஊரார் இருவரையும் சரமாரியாக அடித்துவிட்டு இறுதியில் இருவரும் சாகாமல் பெண்ணின் தந்தை அருணாசல உடையார் இறப்பது.. யாரும் யோசிக்காத திருப்பம்.

எழுத்தாளர் இமையம்

உண்மைக்குப் பின்னால் இருப்பதும் ஒரு மாபெரும் உண்மைதான் என்பதுபோல ஒவ்வொரு கதைக்குப் பின்னால் இருக்கும் ரகசிய உண்மைகளையும் நேர்த்தியாய் எழுத்தில் படம் பிடித்துக்காட்டுவது இன்னும் அடுத்தடுத்த கதைகளைப் படிக்க ஆர்வம் கொள்ள வைக்கிறது.

தாமரையிலை தண்ணீர் போல் ஒட்டாதது மாமியார் மருமகளின் கதை. இதில் மகனின் மீதான பாசப்போராட்டத்தை அனாதை இல்லத்துக்குச் செல்லும் "உண்மை கதை" சிறுகதையில் "அநாதை இல்லத்தின் கதவோரம் மறைந்து பார்த்த தாயை மட்டுமல்ல.. அந்தக் கட்டடத்தையும் மகன் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்காமல் செல்லும் மகனின் செயலை தாயாய் இருந்து நம்மை உணரவைத்திருப்பார்.இதே போல் இன்னொரு காட்சிப்படுத்தலாக "சொந்த வீடு"சிறுகதையிலும் ஒளிவு மறைவின்றி மாமியார் மருமகள் மனநிலைகளைக் கதையில் சொல்லியிருப்பார்.

சம்பவங்களை வைத்து மட்டும் கதையை நீட்டிக்காமல் உரையாடல் வழியே கதையை சுவாரஸ்யமாக்குவது ஒரு கலை. சாதிக் கொடுமையின் கோரங்களை கதைகளின் ஊடாகவே விளக்கியிருப்பார். உரையாடல்கள் தான் இமையத்தின் மிகப்பெரிய பலம். நேர்மையான மனிதர்களின் முகங்களை, வெள்ளந்தியான கிராமத்து வாழ்வியலை எழுத்தில் காட்டும் கண்ணாடி இமையம்.

இயல்புவாத எழுத்துகளில் தன் அடையாளத்தைத் தொடர்ந்து படைத்து வருபவர். ஆசிரியராய் இருப்பதாலோ என்னவோ அரசாங்கப் பள்ளியில் நடைபெறும் நிகழ்வை மிக நுட்பத்துடன் "அரசாங்கப் பள்ளிகள்" கதையில் சொல்லியிருப்பார். தினசரி பள்ளியில் நடக்கும் பஞ்சாயத்துகளைத் தலைமையாசிரியர் கூறுவதுடன் அக்கதையின் கடைசி வரியில் தலைமையாசிரியரிடம் "டீச்சர் ஒங்களப் பாத்திட்டு வரச் சொன்னாங்க சார்" எனத் தொடர்கதையாய்த் தொடரும் நிகழ்வினைச் சொல்லியிருப்பார்.

Reading

ஒரு யுகத்தில் நடந்ததை,தலைமுறையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பினைக் கூறாமல் சில மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களைக் கதையாக்கி சொல்வது மிகவும் நுட்பமானது."ஓடிப்போன தன் மகளைத் தேடிவரும் தாயை அழைத்து விசாரிக்கும் போது வெளிப்படும் உண்மை சம்பவத்தினை "சாவு சோறு" கதையிலும் பள்ளிக்கூடம் முடிந்து வரும் கண்ணன் வீட்டில் நடக்கும் சம்பவத்தினை விவரிப்பதாக "குடும்பம்" கதையிலும் சொல்லியிருப்பார்.சில மணி நேரத்தில் கடந்து செல்லும் கதைகளைக் கூட பதிவு செய்திருப்பார்.

#ரசித்த வரிகள்

*சனங்களால பூன, ஆடு, மாடு, நாயோட கூட ஒண்ணா இருக்காங்க. ஆனா மனுசன் கூட மட்டும் இருக்க முடியல

*அதிகாரத்துக்கு மனசு இல்ல. உசுரு இல்ல. கல்லு. அடுத்தவன் மண்டைய ஒடைக்கிற கல்லு.

*அவமானமில்லாத, அசிங்கமில்லாத வாழ்க்க ஒலகத்தில் யாருக்கு இருக்கு?

*எல்லாரும் தொலைக்காட்சி பெட்டியை பைத்தியம் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

*கிணற்றிலிருந்து வாளியை எடுப்பதுபோல் நினைவுகளை எடுத்தாள்’’

*மனசுல தைரியம் வர்றப்பதான் மனசுல உள்ளதை சொல்லமுடியும்.

*வவுத்துக்குத் தெரியுமா இது சாவுச்சோறு, இது கல்யாணச் சோறுன்னு”

*பத்து ஜென்மத்துக்கு நாயா பொறந்தாலும் கூடப் பரவாயில்ல, பொண்ணா மட்டும் பொறக்கக்கூடாது. மீறிப் பொறந்தாலும் உனக்கு மட்டும் வாக்கப்படக்கூடாது.

Reading

"சிறுது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும்,ஓர் அவசரத்தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் சிறுகதையில்" என்பார் தி.ஜானகிராமன். ஒரு கதையைப் படித்து முடித்த பின் அடுத்த கதையைப் படிக்க தயக்கம் வர வேண்டும். முந்தைய கதையின் தாக்கம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் ஓய்வு எடுக்கத் தூண்ட வேண்டும்.அதிலிருந்தி வெளிவர மனம் அவகாசம் கேட்க வேண்டும்.

இதிலென்ன புதிதாய்ச் சொல்லியிருக்கப்போகிறார்கள் எனும் வாசகனின் முன் முடிவை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டும் அந்த எழுத்து. எழுத்தாளனின் எழுத்துக்கு முழுவதும் மனம் அர்ப்பணிக்க வேண்டும். படிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துடன் நம்மைப் பொருத்திப் பார்க்க வைக்க வேண்டும். குடத்தில் நீர் நிரம்புவது போல் கதையினை மெல்ல மெல்ல வாசகன் மனதில் நிரப்ப வேண்டும்.

அதனுடன் ஒன்றி அக்கதை பயணிக்கும் தூரத்திலேயே நம் பயணத்தை அமைக்கும் வகையில் இருக்க வேண்டும். ஒரு சிறுகதையின் முதல் வரியிலேயே நம்மையும் அக்கதையின் பார்வையாளனாக்கிவிடும் அந்த மாயாஜாலம் தான் எழுத்தாளர் இமையத்தின் அசுரபலம். மேற்குறிப்பிட்ட அத்தனையையும் இவரின் எழுத்துகளில் காணலாம்.

"அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளைத் தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும்'' என்பார் க.நா.சு.

எழுத்தாளர் இமையத்தின் சிறுகதைகளும் அத்தன்மையதே!

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/reading-experience-of-writer-imayam-short-stories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக