ஜோஸ் பட்லர் இல்லை, பென் ஸ்டோக்ஸ் இல்லை... ஆனாலும் 200 ரன்களுக்கு மேல் அடித்து சென்னைக்கு 2020 சீசனின் முதல் அப்செட்டைக் பரிசளித்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த தோனியின் வியூகங்கள், ராஜஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் பலிக்காமல் போனது ஏன்... தவறுகள் நடந்தது எங்கே... திருத்தவேண்டிய இடங்கள் என்னென்ன?!
பேட்டிங் பலம்!
ஷார்ஜா ஸ்டேடியத்தில் ஸ்ட்ரெய்ட் பவுண்டரிகள் மிகவும் சிறியது என்பதோடு, பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால் சென்னையின் பேட்டிங் லைன் அப்பை வலுவாக்குவார் தோனி என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக அடையாளம் காணப்படும் ரித்துராஜ் கெய்க்வாட் ப்ளேயிங் லெவனுக்குள் வந்துவிடுவார் என்பது கணிப்பு. எதிர்பார்த்ததைப்போலவே தோனியும் அந்த மாற்றத்தை நிகழ்த்தினார்.
ஆனால், அதில் சர்ப்ரைஸ் என்னவென்றால், "100 சதவிகிதம் ஃபிட்டாக இல்லாத அம்பதி ராயுடுவுக்கு பதிலாக ரித்துராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்" என அதிர்ச்சி கொடுத்தார். கடந்த ஆண்டில் இருந்தே ஃபார்மில் இல்லாத முரளி விஜய்யும், கேதர் ஜாதவும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துவிடுகிறார்கள். 2018 ஐபிஎல் சீசனின் முதல் மேட்ச்சில் மும்பைக்கு எதிராக கடைசி நேரத்தில் ஒரு சிக்ஸர் அடித்து சென்னையை வெற்றிபெறவைத்ததைத்தவிர ஜாதவ் சமீபத்தில் எந்த சாதனையும் செய்துவிடவில்லை. அதேபோல் முரளி விஜய் கடந்த ஆண்டே சரியாக விளையாடவில்லை. இரண்டு போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டு பின்னர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டவர் அவர். ஆனால், மும்பை மேட்ச்சில் சொதப்பிய பிறகும் நேற்று அவர் அணியில் ஓப்பனராக இருந்தார். பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் போதுமான பேட்ஸ்மேன்களே இல்லாமல் வருவது என்பதெல்லாம் போட்டி தொடங்குவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம்.
மிஸ்ஸான ஸ்பின் டு வின்?!
ஸ்பின் டு வின் என்பதுதான் இந்த ஐபிஎல்-ன் மந்திரம். ஸ்பின்னர்கள் இன்னும் அதிக அளவில் விக்கெட்டுகள் எடுக்க ஆரம்பிக்கவில்லையென்றாலும் அரபு பிட்ச்களில் ஸ்பின்னர்களே வெற்றி/தோல்விகளை தீர்மானிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்று ராஜஸ்தான் அதை சரியாக செய்தது. ஸ்பின்னர்கள் இந்தத் தொடருக்கு மிகவும் முக்கியம் எனும்போது, ஸ்பின்னில் வீக்காக இருப்பதால் ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் புது ஸ்பின்னர்களை உள்ளே இறக்கி தோனி பரிட்சார்த்த முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். நேற்றைய தோல்விக்குப் பிறகு, "தொடரின் ஆரம்பம் என்பதால் சில சோதனைகள் செய்துபார்க்கிறோம்"' என்றார் தோனி. ஆனால் பேட்டிங்கிற்கு பதிலாக பெளலிங்கில் சோதனை முயற்சிகள் செய்திருந்தால் மகிழ்ந்திருக்கலாம். எங்கிடிக்கு பதிலாக இம்ரான் தாஹிர் அல்லது சாய் கிஷோர், கார்ன் ஷர்மா என பென்ச்சில் இருக்கும் ஸ்பின்னர்களின் திறமைகளை சோதித்திருக்கலாம். எப்போதுமே ஸ்டம்புக்குப் பின்னால் இருந்து ஸ்பின்னர்களுக்கு அறிவுரை வழங்கிகொண்டேயிருக்கும் தோனி நேற்று அதை செய்யவேயில்லை.
தொடர்ந்து ஃபுல் லென்த்தில் சஞ்சு சாம்சனுக்கு லாங் ஆன், ஆஃபில் சிக்ஸ் அடிக்கவசதியாக பந்து வீசிக்கொண்டேயிருந்தார் சாவ்லா. வேடிக்கை மட்டுமே பார்த்தார் தோனி. ஸ்பின்னர்களை அடித்து வெளுக்கிறார்கள் எனத்தெரிந்தும் தொடர்ந்து 6-10 ஓவர்களை ஜடேஜா - சாவ்லாவுக்குக் கொடுத்துக்கொண்டேயிருந்தார். மும்பைக்கு எதிரான மேட்ச்சில் ஸ்பின், வேகப்பந்து என பெளலர்களை மாற்றிக்கொண்டேயிருந்தார். ஆனால், அதை அவர் நேற்று செய்யவில்லை. ஸ்பின்னுக்குத் திணறிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தையே மீண்டும் ஃபார்முக்கு வரவழைத்துவிட்டார்கள் சென்னை ஸ்பின்னர்ஸ். ஆனால் ராஜஸ்தானோ ஷ்ரேயாஸ் கோபால், டெவாட்டியா என இரண்டு ஸ்பின்னர்களோடு களமிறங்கியிருந்தது. முரளி விஜய்யின் விக்கெட்டை கோபால் வீழ்த்த, வாட்சன், கரண், கெய்க்வாட் என முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரையுமே டெவாட்டியா தூக்கிவிட்டார்.
நோ பால் நான்சென்ஸ்!
ஒரு பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டவுடனேயே பெளலர் பிட்சில் எங்கே கால் வைத்தோம் என்பதை உறுதிசெய்துகொண்டு, அந்தத் தவற்றை திரும்பச்செய்யாமல் கவனமாக அடுத்தப் பந்தை வீசுவதைத்தான் நாம் இவ்வளவு காலம் பார்த்திருக்கிறோம். ஆனால், நோ பாலுக்குத் தண்டனையாக வீசப்படும் ஃப்ரீ ஹிட் பாலைக்கூட நோ பாலாக வீசுவதெல்லாம் உச்சபட்ச ஒழுங்கீனம். அதுவும் ஸ்ட்ரைக்கில் இருப்பது பேட்ஸ்மேன் அல்ல, டெய்ல் எண்டர். முழுநேர பெளலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். அவரே தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடிக்கிறார் எனும்போது தோனி இந்த முறையும் அமைதியாகவே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். இந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள். எங்கிடியைப்போலவே சாவ்லா வீசிய 8வது ஓவரிலும் இதுதான் நடந்தது. ஏற்கெனவே சிக்ஸரும், பவுண்டரியுமாக சாம்சன் அடித்துக்கொண்டிருந்தபோது நோ பால் போட்டார் சாவ்லா. ஃப்ரீ ஹிட் சிக்ஸர். இந்த ஓவரில் 28 ரன்கள். ஃப்ரீ ஹிட் சிக்ஸர்கள் இல்லையென்றாலே சென்னை நேற்றைய மேட்ச்சில் வெற்றிபெற்றிருக்கும்.
பேட்டிங் ஆர்டர் என்ன?!
அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கெய்க்வாட் அணிக்குள் வந்திருக்கிறார். இவர் 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கலாம், அல்லது 2 டவுன் பேட்ஸ்மேனாக இறங்கலாம். ஆனால், 2 டவுன் பேட்ஸ்மேனாக சாம் கரண் இறக்கிவிடப்பட்டார். பின்ச் ஹிட்டராக அல்லது சில ஓவர்கள் மட்டுமே இருக்கிறது என்பதற்காக பவர் ஹிட்டர்களை பேட்டிங் ஆர்டரில் மேலே கொண்டுவரலாம் என்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், 217 ரன்கள் சேஸ் செய்யவேண்டியிருக்கும் சூழலில், 8வது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழும்போது ஒரு முழுமையான பேட்ஸ்மேன்தான் அங்கே வந்திருக்கவேண்டும். சில பந்துகள் நிதானித்து ஆடவிட்டு, ரன்ரேட்டை கூட்டும் சீனியர் பேட்ஸ்மேன்கள்தான் அங்கே வேண்டும். ஆனால், தோனி சாம் கரண், அடுத்து கெய்க்வாட், அதற்கடுத்து கேதர் ஜாதவ் என அனுபவம் இல்லாத வீரர்களை ஆங்கர் இன்னிங்ஸ் ஆட பிட்சுக்குள் அனுப்பிக்கொண்டேயிருந்தது அணியின் பேட்டிங் வீரியத்தை அப்படியே குறைத்துவிட்டது. டுப்ளெஸ்ஸி ஒருபக்கம் நின்று அப்பாவியாக வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார்.
Also Read: சாவ்லா, எங்கிடி... இவ்ளோ நாள் எங்கய்யா இருந்தீங்க? #RRvCSK
தோனியின் பொசிஷன் என்ன?!
தோனி 400 ரன்களுக்கு மேல் அடித்த 2018 ஐபிஎல் சீசனில் பெரும்பாலான போட்டிகளில் ஐந்தாவது பேட்ஸ்மேனாகத்தான் களமிறங்கினார். கடந்த ஆண்டும் பெரும்பாலான போட்டிகளில் 5-வது இடத்தில்தான் களமிறங்கினார். ஆனால், இந்த 2020 ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிரானப்போட்டியில் தோனி ஏழாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தான் கேப்டனாக களத்தில் இருந்து, அணியை மீட்டெடுக்க வேண்டிய நேரத்தில் தன்னுடைய வருகையைத் தானே ஒத்திவைத்துக்கொண்டேபோனது ஒரு தலைவனுக்கு அழகல்ல. 'நான் இருக்கிறேன்' என அணியின் மற்ற வீரர்களுக்கு நம்பிக்கையளித்திருக்கவேண்டிய நேரத்தில் தோனி களமிறங்காதது வெற்றி/தோல்விகளைத்தாண்டி தோனி பயப்படுகிறாரோ என்கிற எண்ணத்தைத்தான் அணிக்கும், எதிர் அணி வீரர்களுக்கும் கொடுக்கும். இது சென்னையை பேராபத்தில் கொண்டுபோய் விடும்.
சென்னைக்கு இரண்டு போட்டிகள்தான் முடிந்திருக்கிறது என்றாலும், உடனுக்குடன் தவறுகளைத் திருத்திக்கொண்டால் மட்டுமே இந்த சீசனில் சென்னை கோப்பையை வெல்லமுடியும். ஏனென்றால் இங்கே சேப்பாக்கம், ஹோம் கிரவுண்ட் சாதகங்கள் எல்லாம் இல்லை. அபிதாபி, ஷார்ஜா, துபாய் என ஒவ்வொரு பிட்ச்சுக்கும் ஏற்றபடி வியூகங்களை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஸ்பின் ஏரியாவில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது. இங்கே கோட்டைவிட்டால் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறாது!
source https://sports.vikatan.com/ipl/five-mistakes-dhoni-did-in-rajasthan-royals-vs-chennai-super-kings-match
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக