Ad

புதன், 23 செப்டம்பர், 2020

`பிஎம் கேர்' நிதி; வெளுத்து வாங்கிய எம்.பி மஹுவா மொய்த்ரா... பி.ஜே.பி-யின் பதில் என்ன?

கொரோனா தடுப்புப் பணிகளில் மக்களிடமிருந்து நிதிகளைப் பெற `பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியம் உருவாக்கப்பட்டது. இந்த நிதியத்தின் கணக்கு வழக்குகளுக்கு மத்திய தணிக்கையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அதோடு, இந்த நிதியத்துக்கு வரும் நிதிகளின் செலவு விவரங்களைப் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. `தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம்கூட செலவு விவரங்களைப் பெற முடியாது’ என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பிஎம் கேர்ஸ்

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. கடந்த சனிக்கிழமை வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில ஏற்பாடுகளின் தளர்வு மற்றும் திருத்தம்) சார்ந்த மசோதாமீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பிஎம் கேர்ஸ் நிதி குறித்துப் பேசினார்.

``பள்ளிக் குழந்தைகள் முதல் பலரும் ஆர்வமாக முன்வந்து பிஎம் கேர் நிதிக்கு நன்கொடை அளித்ததாக அமைச்சர் கூறினார். இதைக் கூறிய அமைச்சர், 38 பொதுத்துறை நிறுவனங்கள் பிஎம் கேர் நிதிக்கு 2,100 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததைச் சொல்லத் தவறிவிட்டார். இந்தத் தொகை, மொத்தம் வந்த நிதியில் 70 சதவிகிதம். இது பொதுமக்களின் பணம். இது எப்படி மத்திய தணிக்கைக்கு உட்படுத்தப்படாமல் இருக்கலாம்... பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சி.எஸ்.ஆர் நிதி அளவைவிட அதிகமான அளவு தொகையை பிஎம் கேர் நிதிக்கு நிதி வழங்கியிருக்கின்றன'' என்றும் மொய்த்ரா சுட்டிக்காட்டினார்.

மஹுவா மொய்த்ரா

மேலும் பேசிய அவர், `` `கோல் இந்தியா' நிறுவனம் பிஎம் கேர் நிதிக்கு 221 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த நிறுவனத்தின் 90 சதவிகிதப் பணிகள் நடைபெறும் மேற்குவங்கத்துக்கும் ஜார்க்கண்டுக்கும் இந்த நிறுவனம் நன்கொடை வழங்கவில்லை. ஒரு சிற்றரசர் பேரரசுக்குப் பரிசுகளை வழங்குவதுபோல மக்களின் பணத்தை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியிருக்கின்றன.

பல சீன நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டிருக்கிறது. உளவு பார்ப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜியோமி நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது. தற்போது ஆளும் மாநில அரசால் அண்மையில் தடைசெய்யப்பட்ட டிக்டாக் நிறுவனத்திடமிருந்து 30 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது. உலக அளவில் தடைசெய்யப்பட்ட, தகவல்களை சீன ராணுவத்திடம் வழங்குவதாகக் கூறப்படும் ஹூவாய் நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது. நம் எதிரியிடமிருந்து ஏன் பணம் பெற வேண்டும். அந்தப் பணத்தைத் திருப்பி கொடுக்காதது ஏன்?

மஹுவா மொய்த்ரா

இந்த நேரத்தில் இறக்கும் தறுவாயிலிருக்கும் எந்த இந்தியனும் நமது எதிரியின் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட வென்டிலெட்டர்களில் இருக்க ஆசைப்பட மாட்டார். 2,000 கோடியில் 50,000 வென்டிலெட்டர்கள் வாங்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். தயவுசெய்து இந்தச் சபையில் எத்தனை வென்டிலெட்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று கூறுங்கள். அது எந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டது, எந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுங்கள்.

`பிரதமர் தேசிய நிவாரண நிதி’ என்று ஏற்கெனவே ஒன்று இருக்கும்போது, `பிஎம் கேர்’ என்று புதிதாக ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை என்ன... பிரதமர்கள் வரலாம் போகலாம். ஆனால், முன்பிருந்த நிதியின் இருப்பு விவாதத்தில் வரவில்லை. ஒரு தனிநபரின் பெயரில் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற தேவை என்ன? இது ஜனநாயக நாடு. தேர்ந்தெடுக்கப்பட்ட யதேச்சதிகாரம் இல்லை. இதை இந்த ஆளும் மத்திய அரசுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.

பிரதமர் மோடி

அனைவராலும் நன்கு அறியப்பட்ட பிரதமரின் பெயரால் நிதியை வசூலிக்கிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அப்படியானால், இந்த நிதியம் அரசுக்குச் சொந்தமானது என்றுதான் மக்கள் நினைக்கக்கூடும். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இந்த நிதி விவரங்கள் குறித்த எந்தத் தகவலையும் பெற முடியாது என்று சொல்கிறீர்கள். வெளிப்படைத் தன்மையிலிருந்து ஏன் ஓடி ஒளிந்துகொள்ளப் பார்க்கிறீர்கள்?

நாட்டில் வளர்ச்சி குறித்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்தும் இந்த ஆளும் மத்திய அரசு தொடர்ந்து பொய்களைக் கூறி வருவதை நிறுத்த வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார் மஹுவா மொய்த்ரா.

Also Read: `ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள்... கங்கனாவுக்கு மட்டும் Y Plus?’-மஹூவா மொய்த்ரா எம்.பி காட்டம்

இதுகுறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது ``இந்த பிஎம் கேர், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு சிறப்பான நிதியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியத்தில் பிரதமர் மட்டுமல்ல, மற்ற அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அங்கம்வகிப்பார்கள். முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் இந்த நிதியத்துக்கு வரும் நன்கொடைகள் கணக்கு வைக்கப்பட்டு, வரவு செலவு விவரங்களைத் தணிக்கைக்கு உட்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் சுயவிருப்பதின்பேரிலோ, அவரின் தன்னிச்சையான அதிகாரத்திலோ இந்த நிதியம் செயல்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், ஒரு பேரிடர் காலத்தில் மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி இது போன்ற நன்கொடைகள் வசூல் செய்வது கடமை மற்றும் உரிமையும்கூட. அந்த வகையில் இந்த நிதியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியத்தில் எந்தவித முறைகேடும் இல்லை என்பதையும் தாண்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் நீதிமன்றம் இதில் தலையிட மறுத்திருக்கிறது.

வானதி சீனிவாசன்

இந்தப் பிரச்னைக்கு நாடாளுமன்றத்திலும் எங்கள் அரசு பதிலளித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் நன்கொடை அளித்திருக்கும் பணம், மக்களுக்காக மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. அரசு எந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டுமோ. அந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை இந்த நிதியத்தின் செயல்பாடுகளில் இருக்கிறது. இந்த பிஎம் கேர் நிதியத்தின் பணத்திலிருந்து ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும், கொரோனா தடுப்புப் பணிகளுக்காகவும் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த நிதி முழுவதுமே மக்களுக்காகத்தான் பயன்படப் போகிறதே தவிர, இந்தப் பணத்தை யாரும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடப் போவதில்லை. இந்த நிதியத்தின் செயல்பாடுகள் அனைத்துமே பொதுவெளியில்தான் இருக்கின்றன’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mahua-moitras-roaring-speech-about-pm-care-fund-what-was-bjps-response

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக