Ad

புதன், 23 செப்டம்பர், 2020

`ஏற்றுக்கொள்ளவே முடியாது!’- காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைத்த துருக்கிக்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தானின் நட்புநாடான துருக்கி, ஐ.நா-வில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது. ஐ.நா அவையின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது அவை நடந்து வருகிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றிவருகிறார்கள். அந்தவகையில் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

எர்டோகன் - இம்ரான் கான்

அவர், தனது பேச்சில் காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்டது இந்தியாவை கோபப்படுத்தியிருக்கிறது. எர்டோகன் பேசுகையில், ``தெற்காசியாவில் அமைதிநிலவ காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் மற்றும் உடன்படிக்கைகளைப் பின்பற்றி அதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று துருக்கியும் விரும்புகிறது. காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்'' என்று பேசியிருந்தார்.

கடந்த ஓராண்டாகவே காஷ்மீர் பிரச்னையை, துருக்கி பல்வேறு தளங்களில் பேசிவருகிறது. அதற்கு ஒவ்வொரு முறையும் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் துருக்கி அதிபர் எர்டோகனின் சமீபத்திய பேச்சுக்கு ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் திருமூர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் திருமூர்த்தி, ``இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறிய கருத்துகளைக் கேட்டோம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அவர்கள் தலையிடுகிறார்கள். இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக்கொள்ள வேண்டும். அதை மதிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also Read: `இந்தத் தொடரை நிச்சயம் பாருங்கள்!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் திடீர் `துருக்கி’ பாசம்

இதேபோல், ஐ.நா-வின் 46-வது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்ட பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளுக்கு (OIC) இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.

மோடி மற்றும் எர்டோகன்

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பதில் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், ஜனநாயக நடைமுறைகள் குறித்த புரிதலை அந்த நாடுகள் அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா காட்டமாக விமர்சித்திருந்தது.



source https://www.vikatan.com/government-and-politics/international/india-slams-turkey-over-kashmir-remarks-at-un

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக