Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

#CSKvDC தோனியிடம் இந்த 5 மாற்றங்களை எதிர்பார்க்கலாமா? #Preview #Prediction

ஓரே வாரத்துக்குள் இன்று தனது மூன்றாவது போட்டியில் டெல்லியுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியடைந்தது சென்னை. ராஜஸ்தான் போட்டியில் சென்னையின் பெளலிங், பேட்டிங் (200 ரன்கள் அடித்திருந்தாலும்) என இரண்டு ஏரியாவுமே வீக்காக இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மும்பைக்கு எதிராக பல வியூகங்களோடு விளையாடிய தோனி, ராஜஸ்தானை பெரிதாக எடுத்துக்கொள்ளாததே தோல்விக்குக் காரணம். டெல்லி கேப்பிடல்ஸ் சூப்பர் ஓவரில் பஞ்சாபை வென்றப்பிறகு தனது இரண்டாவது போட்டியில் மோதுகிறது. #CSKvDC போட்டியில் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும், தோனியிடம் எதிர்பார்க்க வேண்டிய 5 மாற்றங்கள் என்னென்ன?!

#CSK

டெல்லி கேப்பிடல்ஸ் சென்னைக்கு எதிராக கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு சென்னைக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்விதான். ஆனால், இந்த முறை பல மாற்றங்களோடு களமிறங்கியிருக்கும் டெல்லியை கைப்பிள்ளை கணக்காக தோனி டீல் செய்யமுடியாது. பல மாற்றங்களை அவர் அணிக்குள் செய்தாகவேண்டும்.

1. ருத்துராஜ் ஜெய்க்வாட் @ 1 டவுன்

மஹாராஷ்டிராவின் 1 டவுன் பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட். இன்னும் சர்வதேசப்போட்டிகள் எதிலும் ஆடாத 23 வயதான ருத்துராஜ் கடந்த ரஞ்சி சீசனில் 2 சதங்கள் உள்பட சில முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். இவரைத்தான் அணியின் எதிர்காலமாக நினைக்கிறார் தோனி. ஆனால், ராஜஸ்தானுக்கு எதிரானப்போட்டியில் இவரை 2 டவுன் பேட்ஸ்மேனாக இறக்கினார். கிரீஸுக்கு வந்த முதல் பந்தையே கிரீஸைவிட்டு வெளியே வந்து அடிக்கமுயன்று அவுட் ஆனார் ருத்துராஜ். முதல் இன்னிங்ஸ் பதற்றம் அவரை இப்படி விளையாடவைத்திருக்கலாம். அதனால், அவரை 1 டவுனில் இறக்கி, தொடர்ந்து தோனி வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அம்பதி ராயுடு

2. ராயுடுவுக்கு பதில் யார்?

கையில் காயம் ஏற்பட்டிருப்பதால் இன்றும் அம்பதி ராயுடு விளையாடமாட்டார் என்றே தெரிகிறது. அம்பதி ராயுடுவுக்கு பதில் சென்னை அணியில் விளையாட சரியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே இல்லை. ஷேன் வாட்சன், டுப்ளெஸ்ஸி, முரளி விஜய், ருத்துராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் என அம்பதி இல்லாமல் அணியில் 6 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் இருக்கிறார்கள். இதில் முரளி விஜய் சுத்தமாக ஃபார்மில் இல்லை. கேதர் ஜாதவும் பரிதாப நிலையில்தான் இருக்கிறார். உண்மையை சொல்லவேண்டுமென்றால் இவர்கள் இருவரையுமே சிஎஸ்கே இந்த ஆண்டு அணியில் தக்கவைத்திருக்கக்கூடாது. இப்போது இவர்கள் இருவரும் அணிக்கு பலமாக இருப்பதைவிட சுமையாகவே இருக்கிறார்கள்.

தோனி எப்போதுமே ரிஸ்க் எடுப்பவர் என்பதால் இன்று கேதர் ஜாதவுக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான சென்னை வீரர் ஜெகதீசனை முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்தடுத்த சீசன்களுக்கு இளம் அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் தோனி, ஜெகதீசனுக்குத் தயங்காமல் வாய்ப்பளிக்கலாம். ஐபிஎல் உடன் தமிழ்நாடு பிரிமீயர் லீகை ஒப்பிடக்கூடாது என்றாலும், தொடர்ந்து சிறப்பாக டிஎன்பில் போட்டிகளில் விளையாடிவருகிறார் ஜெகதீசன். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக பல முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். அதோடு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஞ்சி கோப்பை சாம்பியன்ஸான செளராஷ்டிராவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 183 ரன்கள் அடித்தார் ஜெகதீசன். ரஞ்சியில் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜெகதீசன். டி20 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அதனால் முரளி விஜய்யின் இடம் அல்லது கேதரின் இடம் என இரண்டு இடங்களிலுமே தோனி இவரை முயற்சி செய்து பார்க்கலாம்.

இம்ரான் தாஹிர்

3. இம்ரான் தாஹிர் இன்... எங்கிடி அவுட்!

ஐபிஎல்-ல் ஸ்பின்னர்கள் மேட்ச் வின்னர்களாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று பஞ்சாப் வெர்சஸ் பெங்களூரு மேட்ச்சில் முருகன் அஷ்வின், ரவி பிஷ்னாய் என இந்த இரண்டு லெக் ஸ்பின் கூக்ளி பெளலர்கள்தான் ஆறு விக்கெட்டுகளை எடுத்தார்கள். சஹாலும் கூக்ளியில்தான் மயாங்க் அகர்வாலை வீழ்த்தினார். சென்னை வெர்சஸ் டெல்லி போட்டியும் நேற்று நடந்த அதே துபாய் மைதானத்தில்தான் நடக்க இருக்கிறது. அதனால் தோனி தயங்காமல் எங்கிடிக்கு பதிலாக இம்ரான் தாஹிரை அணிக்குள் கொண்டுவரலாம். லெக் ஸ்பின்னர்களான தாஹிர், சாவ்லாவோடு தோனி இன்று விளையாடலாம். ரிஷப் பன்ட் உள்ளிட்ட டெல்லியின் மிடில் ஆர்டர் பேட்டிங் லைன் அப்பை சமாளிக்க ஸ்பின்னர்களே சரியாக இருப்பார்கள்.

4. ரவீந்திர ஜடேஜாவை என்ன செய்யலாம்?!

பேட்டிங், பெளலிங் என கடந்த இரண்டு போட்டிகளிலுமே ஜடேஜா பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால், ஃபீல்டிங்கில் 10-20 ரன்களை தடுக்கக்கூடிய வீரராக இருக்கிறார் ஜடேஜா. பெளலிங்கிலும் ஓவருக்கு 10 ரன்கள் வரை கொடுத்தாலும் 4 ஓவர்கள் முழுமையாக வீசக்கூடிய வீரர் என்பதால் ஜடேஜா இன்றும் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கலாம். ஏனென்றால் ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரர் சிஎஸ்கே ஸ்குவாடில் இல்லை. ஹர்பஜனுக்கு பதிலாக புதிய வீரரை எடுக்க இருக்கும் சிஎஸ்கே ஜடேஜாவை மனதில்வைத்தும் அந்தத் தேர்வை செய்யலாம். ஜடேஜா இன்று ஃபார்முக்கு வந்தால் மட்டுமே 2020 சீசனில் அவரின் இடம் உறுதியாக இருக்கும்.

தோனி - ஜடேஜா

5. டாஸ் எப்படி?!

முதல் போட்டியில் மும்பையை சேஸ் செய்து சென்னை வென்றப்பிறகு எல்லா அணி கேப்டன்களுமே தோனியின் முடிவையே பின்பற்றினார்கள். டியூ காரணமாக சேஸ் செய்கிறோம் என்று சொல்லி அடுத்தடுத்து அறிவித்த கேப்டன்களுக்கு அதிர்ச்சிகள்தான் காத்திருந்தது. முதல் போட்டிக்குப் பிறகு நடந்த அத்தனைப் போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் ஆடிய அணிகளே வெற்றிபெற்றிருக்கின்றன. நேற்றும் துபாயில் முதலில் ஆடித்தான் பஞ்சாப் 206 ரன்கள் அடித்தது. அதனால் இன்று டாஸ் வென்றால் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்யலாம்.

Also Read: ஈ சாலா கப் நமீதாதானா... இப்ப என்னப் பண்ணுறது சொல்லு கோலி, சொல்லு கோலி! #KXIPvRCB

ஃபேன்டஸி லெவன்?!

ஷேன் வாட்சன் திடீரென இன்று அடிக்கலாம் அல்லது சில ரன்களிலேயே அவுட் ஆகி வெளியேறலாம். அதனால் அவர் ரிஸ்க். அவரை அணிக்குள் எடுக்காமலேயே இருக்கலாம். விக்கெட் கீப்பர்களில் தோனியா, ரிஷப் பன்ட்டா என்றால் ரிஷப் பன்ட்டே நல்ல சாய்ஸ். டெல்லி அணியில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்களை சமாளிக்கக்கூடிய ஆஃப் ஸ்பின்னர் சென்னை அணியில் இல்லை என்பதால் ரிஷப் பன்ட் இன்று சில சம்பவங்கள் செய்யலாம்.

ஸ்ரேயாஸ் ஐயர் 

பேட்ஸ்மேன்களைப் பொருத்தவரை டெல்லியில் தவான், ஷ்ரேயாஸ் ஐயரை அணிக்குள் எடுக்கலாம். சென்னை பேட்ஸ்மேன்களில் டுப்ளெஸ்ஸி, ருத்துராஜ் கெய்க்வாடை எடுக்கலாம். ஆல் ரவுண்டர்களில் ஸ்டாய்னிஸ், சாம் கரண் நல்ல சாய்ஸ். பெளலர்களில் தாஹிர், அஷ்வின், ரபடா, சஹாரை எடுக்கலாம். இன்று தவான் கேப்டனுக்கு நல்ல சாய்ஸ். துணை கேப்டனாக சாம் கரணை எடுக்கலாம். டாஸுக்குப் பிறகான ப்ளேயிங் லெவனைப் பொறுத்து உங்கள் அணியைத் தேர்வு செய்யவும்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-chennai-super-kings-vs-delhi-capitals-preview-and-prediction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக