Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

வேகமெடுக்கும் `கொரோனா இரண்டாம் அலை'... என்ன செய்யப்போகிறது இந்தியா?

கடந்த ஆண்டு சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்திலிருக்கும் கடல் உணவுச் சந்தையில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், இன்று உலகின் 190-க்கும் அதிகமான நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளும், வளர்ந்த நாடுகளும் இந்த கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துவருகின்றன.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் அமல்படுத்தியிருந்தன. கொரோனா வைரஸின் தாக்கத்தில் முடங்கியிருந்த உலகம், தற்போது மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இந்தத் தளர்வுகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைவிட, பொருளாதார மந்தநிலையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்பதுதான்.

எனவே, தொற்று பாதிப்பு குறைந்த பல்வேறு நாடுகளும் பல தளர்வுகளை அறிவித்தன. அதன் காரணமாக, மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பினார்கள். ஆனால், குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் சில நாடுகளில் இந்த முறை ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, முதலில் ஏற்பட்டதைவிட மிக அதிகமாக இருப்பதுதான் வேதனை.

இரண்டாம் அலை

கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, புதிய பாதிப்புகளும் தொற்றுப் பரவலும் கட்டுக்குள் இருக்கும் நேரத்தில், மீண்டும் இந்த வைரஸின் தாக்கம் முன்பைவிட அதிவேகமாகப் பரவுவதை `இரண்டாம் அலை’ என்கிறார்கள்.

இரண்டாம் அலை

தொடக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மிகச் சிறப்பாகக் கையாளுவதாக அதிகம் பாராட்டப்பட்டது சிங்கப்பூர். வைரஸ் தாக்கம் குறையவும், அந்த நாடு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்தநிலையில், அப்படி வழங்கப்பட்ட தளர்வுகள், சிங்கப்பூருக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்கின. கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நாடெங்கும் மீண்டும் வேகமெடுத்துப் பரவ ஆரம்பித்தது. சிங்கப்பூர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேபோல, தென் கொரியாவும், கொரோனாவின் கடுமையான இரண்டாம் அலையை எதிர்கொண்டது.

Also Read: கொரோனா சீசன் 2... எப்படி சமாளிக்கிறது இத்தாலி பள்ளிகள்? - நேரடி ரிப்போர்ட் #MyVikatan

தற்போது இங்கிலாந்து, இரண்டாம் அலையில் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் தவித்துவருகிறது. அங்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கின்றன. தளர்வுகள் வழங்கப்பட்ட சில நாள்களிலேயே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். `இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது’ என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் ஒருநாளில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 400 வரை குறைந்திருந்த நிலையில், தற்போது புதிதாகப் பதிவாகும் தொற்றின் எண்ணிக்கை 5,000-ஐ நெருங்கி வருகிறது.

கனடாவின் மத்திய மாகாணங்களில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கியூபெக் மாகாணத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகிவிட்டதாக அந்த மாகாணத்தின் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அங்கு 100-லிருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 600-ஐ நெருங்கியிருக்கிறது. மேலும் ரஷ்யா, இஸ்ரேல், மெக்ஸிகோ, இந்தோனேஷியா, ஈரான், உக்ரைன் போன்ற நாடுகளில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

Also Read: கொரோனாவுக்குப் பின்னும் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்... எப்படி கையாளப்போகிறது அரசு?

தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது ஈக்வடார். இங்கிருக்கும் மிகப்பெரிய நகரங்களில் குவயாக்வில் (Guayaquil) நகரமும் ஒன்று. இந்த நகரின் மொத்த மக்கள்தொகை 20 லட்சம். இந்த நகரத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க, உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. தொடர்ந்து, அங்கு நிலைமை மோசமடையத் தொடங்கியது. கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் உடல்களைச் சாலையோரங்களில் வீசப்படும் நிகழ்வுகளும், ஆங்காங்கே அழுகிய நிலையில் பல உடல்கள் காணப்படுவது போன்ற தகவல்கள் வெளியாகி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படி, கொரோனா தொற்றால் அரங்கேறிய கொடூரங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை எண்ணிலடங்கா சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன. இன்னும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

என்ன செய்யப்போகிறது இந்தியா?

தற்போதைய நிலையில் உலக அளவில் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (71,49,316) முதலிடத்தில் இருக்கிறது. தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 350-ஐ ஒட்டியே இருந்தாலும். இதுவரை, அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,06,906. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பட்டியலில் இருப்பது இந்தியாதான். இன்றுவரை 57,65,744 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 91,435 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 75,000-க்கும் அதிகமாக இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைந்து காணப்படுவது சற்று ஆறுதலான விஷயம்.

கோவிட்-19 கொரோனா வைரஸ்

இந்தியாவில் மார்ச் மாதம் ஊரடங்கை அமல்படுத்தும்போது, நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பே கிட்டத்தட்ட 500-க்கும் குறைவு. அன்று இந்தியாவின் பாதிப்பு நிலைமை வேறு; இன்று இந்தியாவின் பாதிப்பு நிலைமை வேறு. ஆரம்பகட்டத்தில் இந்தியாவின் பெருநகரங்களில் மட்டும் அதிகம் பரவியிருந்த கொரோனா தொற்று, இன்று இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை பரவியிருக்கிறது. தற்போது இந்தியாவில் மக்கள் பொதுமுடக்கத்திலிருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்தபாடாக இல்லை. மக்கள் அரசின் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லையென்றால், இந்தியா மிக விரைவில் இரண்டாம் அலையை நிச்சயம் சந்திக்க நேரிடும்.

உதாரணமாக, தலைநகர் டெல்லியில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 550 வரை குறைந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பினர். தற்போது, டெல்லியில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியிருக்கிறது. அந்த மாநில முதல்வர் இரண்டாம் அலை உருவாகியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்தியாவில் இரண்டாம் அலை உருவாகியிருக்கிறது என்று அறிவித்த முதல் மாநிலமாக டெல்லி இருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்தின் நிலை என்ன?

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 7,000-க்கும் அதிகமாகச் சென்ற புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 5,000-6,000 என்ற நிலையில் இருக்கிறது. முன்பு தமிழகத்தின் மொத்த பாதிப்பில் பெரும்பகுதி சென்னையைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில்தான் இருந்தது. தற்போது, சென்னையில் பாதிப்பு முன்பைவிடக் குறைந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கோவையில் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது.

கொரோனா பரிசோதனை

இன்றைக்கு தமிழகத்தில் நாளொன்றுக்கு 85,000-க்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனை மேற்கொள்வோரில் ஆறு சதவிகிதம் பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 24.09.2020 அன்றைய கணக்குப்படி கொரோனா தொற்றால் 5,63,691 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 9,076 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 5,08,210 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் 1,42,000 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

``இரண்டாம் அலை ஏற்படாது என்ற நம்பிக்கையில்தான் பணியாற்றி வருகிறோம். வந்தாலும் எதிர்கொள்ளத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன. பாதிப்புகளின் எண்ணிக்கை 6,000 என்ன... 10,000 கூடப் போகலாம், நமது இலக்கு இறப்புகளைக் கட்டுப்படுத்துவதுதான். நாம் ஒரு போரில் இருக்கிறோம். இந்தப் போரில் முக்கிய ஆயுதம் முகக்கவசம்தான். மக்கள் அனைவரும் மூன்று வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து அரசின் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால், கொரோனாவை மூன்றே வாரங்களில் விரட்டியடிக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஜூனியர் விகடனுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Also Read: டெல்லி: `கொரோனா வைரஸின் இரண்டாம் அலை; பாதிப்பில் புதிய உச்சம்!’ - அரவிந்த் கெஜ்ரிவால்

`ஸ்பானிஷ் ஃப்ளு’ கற்றுக்கொடுத்த பாடம்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பே இந்தியாவை ஸ்பானிஷ் ஃப்ளு, எபோலா, சார்ஸ், மெர்ஸ் போன்ற பல்வேறு நோய்க்கிருமிகள் தாக்கியிருக்கின்றன. ஸ்பானிஷ் காய்ச்சல் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றது. உலகை உலுக்கிச் சென்ற நோய்த் தொற்றுகளில் ஸ்பானிஷ் ஃப்ளுவின் தாக்கம் மிகக் கொடூரமானது. 1918-ம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ஃப்ளுவால் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டார்கள். ஐந்து கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள். இதில், இந்தியாவில் மட்டும் 1.6 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரோனா

100 ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை மருத்துவ வசதி இல்லாத காலகட்டத்திலேயே ஸ்பானிஷ் ஃப்ளுவிலிருந்து மீண்டிருக்கிறது இந்தியா. இன்று இந்தியா மருத்துவத்துறையில் மாபெரும் வளர்ச்சியடைந்திருக்கிறது. அதிலும், தமிழகம் மருத்துவத்துறையில் அபரிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. எப்படி பொதுமக்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியால் ஸ்பானிஷ் ஃப்ளுவை விரட்டியடித்தோமோ அதேபோல, இன்றும் மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, அனைவரும் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியைச் சரியாகப் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் இரண்டாம் அலை ஏற்படுவதிலிருந்து மட்டுமல்ல... இந்த கொரோனா சூழலிலிருந்தே விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பிவிடலாம்.

இன்னோர் அலை இந்தியாவில் ஏற்படுவதும், ஏற்படாமல் போவதும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமல்ல... நம் ஒவொருவரின் கையிலும்தான்தான் இருக்கிறது என்பதை நினைவில்கொள்வோம்!



source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-second-wave-what-is-india-going-to-do

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக