ஜெயலலிதா 1991முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குத் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். சசிகலா, தமிழக அரசியலில் பேசப்படும் நபராக இருப்பதால் அவரது விடுதலை பற்றிய தகவல்கள் பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி ஆர்.டி.ஐ-யில் கேட்டகேள்விக்கு தனது தனிப்பட்ட தகவல்களை மூன்றாவது நபருக்குக் கொடுக்கக் கூடாதென்று சசிகலா, கடிதம் கொடுத்திருப்பதாகத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தியிடம் பேசினோம். ``நான் கடந்த 22.6.2020-ம் தேதி பெங்களூரு சிறைத்துறைக்கு சசிகலாவுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன்.
Also Read: `ஆர்.டி.ஐ-யில் என்னைப் பற்றிய தகவல்களை வழங்கக் கூடாது!’- கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்
அதற்கு பெங்களூரு சிறைத்துறை, `சசிகலா, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)J –ன் படி தன்னுடைய தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் பகிரக் கூடாது’ என்று தன் கைப்பட எழுதப்பட்ட கடிதம் கொடுத்திருக்கிறார். அதனால் உங்களுக்கு பதிலளிக்க முடியாது. என்று எழுதியிருப்பதோடு, சசிகலா சிறைத்துறைக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து எனக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இதன் மூலம் பெங்களூரு சிறைத்துறை சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நான் சசிகலாவின் வருமான வரி பற்றியோ, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு, கணவர், குழந்தைகள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்கவில்லை. `உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை அளித்திருக்கிறீர்கள்?' என்று கேட்டது எப்படி தனிப்பட்ட தகவலாகக் கருத முடியும்.
நான் கேட்டது தனிப்பட்ட தகவல் என்றால், சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த ரூபா, சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியதும் தனிப்பட்ட தகவல்தானே? சிறையில் இருக்கும் சசிகலாவைப் பற்றி 33 முறை பல தகவல்கள் கேட்டிருக்கிறேன். சிறைத் துறையும் பதிலளித்திருக்கிறது. ஆனால், தற்போது பொதுவான கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பது சிறைத்துறை மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/bengaluru-prison-administration-acting-in-the-favor-of-sasikala-alleges-rti-activist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக