Ad

சனி, 26 செப்டம்பர், 2020

`அகமதாபாத் தமிழ்ப் பள்ளியை மூட முடிவு செய்த குஜராத் அரசு!' - பின்னணி என்ன?

குஜராத் மாநிலம், அகமதாபாத் மணி நகரில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் செயல்பட்டவந்த தமிழ் மேல்நிலைப்பள்ளியை, கொரோனா தொற்றையும் மாணவர்கள் எண்ணிக்கையையும் காரணம் காட்டி மூடுவதற்கான நடவடிக்கையை அம்மாநில கல்வித்துறை மேற்கொண்டிருக்கிறது. மாநில அரசின் உதவியோடு செயல்பட்டுவந்த இந்தப் பள்ளியில் பயின்றுவந்த மாணவர்களை, மாற்றுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்த மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்திவருவதாகத் தெரிகிறது. இது அங்கு வசிக்கும் தமிழர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் பள்ளியை மூடக் கூடாது என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குஜராத்திலுள்ள தமிழ் அமைப்புகளும் இவர்களுடன் களத்தில் இறங்கியுள்ளன.

அகமதாபாத் தமிழ்ப் பள்ளி

அங்கு மட்டுமல்லாமல், தமிழகத்திலும் இந்தச் செய்தி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிருக்கும் தமிழ் ஆர்வலர்கள் உடனடியாகத் தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்காகக் குரல் கொடுத்தனர். தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மணி நகரில் செயல்பட்டுவரும் தமிழ்ப் பள்ளியை மூடக் கூடாது எனவும், அது தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நிதியளிக்கத் தயார் எனவும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அகமதாபாத் தமிழ்ப்பள்ளி அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர் கதிரவனைத் தொடர்புகொண்டோம். நா தழுதழுக்க நம்மிடம் குஜராத் தமிழில் பேசத் தொடங்கிய அவர்,

``இந்தப் பள்ளியின் முழு வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்றால், 1920-ம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த தொழிற்புரட்சியின் (Industrial Revolution) போது சுமார் 20,000 தமிழர்கள் தமிழகத்திலிருந்து குஜராத்திலிருக்கும் அகமதாபாத்துக்குப் புலம்பெயர்ந்தார்கள். பிறகு இந்த இடம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறியது. இங்குள்ள ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ `தமிழ்க் கூட்டுறவு சங்கம்' உருவாக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகிப்பது இந்தச் சங்கத்தின் வேலை. இங்கிருக்கும் தமிழர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக எங்கள் முன்னோர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பிறகு 1936-ம் ஆண்டு முதல் `ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்யாலயம்' என்ற பெயரில் ஆரம்பப்பள்ளி நடைபெறத் தொடங்கியது. அப்போது 1 முதல் 7-ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படத் தொடங்கியது. பிறகு 1949-ம் ஆண்டு முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தினார். குஜராத்திலிருந்து மகாராஷ்டிரா தனி மாநிலமாகப் பிரிந்தபோது அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் இந்தப் பள்ளிக்கு நிதியளித்தது. 1970-ம் ஆண்டு அகமதாபாத் தமிழ் நலக் கல்வி அறக்கட்டளை இந்தப் பள்ளிக்கு அறங்காவலர்களை அமைத்துச் செயல்படுத்தத் தொடங்கியது.

1974-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படத் தொடங்கி, பின் 1976-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடக்கத் தொடங்கின. 2011-ம் ஆண்டு வரை இந்தப் பள்ளியில் 700 முதல் 900 வரை மாணவர்கள் படித்துவந்தனர். 30 கி.மீ தொலைவிலிருந்தும் இந்தப் பள்ளிக்கு வந்து மாணவர்கள் படித்தனர். பின்பு பள்ளி வளர்ச்சிக்கான நிதியை மாநில அரசு நிறுத்தியது. மெள்ள மெள்ள மாணவர் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, பள்ளியை மூடப்போவதாகக் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அது எங்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. இதை எதிர்த்து, இங்கிருக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கினோம். எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `பள்ளியை மூடக் கூடாது’ என குஜராத் முதல்வர் ரூபானிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்க அரசு ஆவண செய்ய வேண்டும்" என்றார் அவர்.

அகமதாபாத் தமிழ்ப் பள்ளி

இது குறித்து மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். ``தமிழ்ப் பள்ளியை மூடுவதை ஏற்க முடியாது. இவ்வளவு நாள் சிறப்பாக நடந்த தமிழ்ப் பள்ளியை தற்போது மூடுவது என்பதை ஏற்க முடியாது. மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் கூறுவதுபோல் தமிழக அரசே அதற்கான செலவை ஏற்று நடத்த வேண்டும். தொன்மையான தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்

இது குறித்து தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.``குறைந்தபட்சம் 36 குழந்தைகள் அந்தப் பள்ளியில் படிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. ஆனால், தற்போது 31 குழந்தைகள் மட்டுமே அங்கு படிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் வெறும் போராட்டம் மட்டும் நடத்தாமல், தங்கள் பிள்ளைகள் ஐந்து பேரை அங்கு சேர்த்தாலே போதும், பள்ளி சிறப்பாக இயங்கும்’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/what-is-the-reason-behind-closure-of-ahmedabad-tamil-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக