தரத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் மோசமான பசுந்தேயிலையை வழங்கியதால், கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக அதள பாதாளத்தில் கிடந்த தமிழகத்தின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக மெல்ல புத்துயிர் பெற்று வருகிறது.
நீலகிரியிலும் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள்,100-க்கும் அதிகமான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
சமீபத்தில் பசுந்தேயிலைக்கு ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக, தரத்தில் குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தேயிலை தூள் உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை வாரியம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 119 தேயிலைத் தொழிற்சாலைகளில் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பல்வேறு குறைபாடுகளளுடன் 109 தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருவதைக் கண்டு அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, "இந்த ஆய்வில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யாதது, சுகாதார தரமின்மை, சட்டரீதியாக ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தாமை, உரிமத்திற்கு அதிகமான உற்பத்தி செய்ததது, இரும்பு துகள்களை அகற்றாதது, கழிவு விவரத்தினை தாக்கல் செய்யாததது, விவசாயிகளுக்கு விலை பகிர்வு அடிப்படையில் உரிய விலை செலுத்தாமை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேயிலை கழிவுகளை சேர்த்து வைத்தல் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக 109 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்சாலைகளிடம் இருந்து பதில்கள் கிடைக்க பெற்றதும், தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுபாட்டு ஆணை, தேயிலை கழிவு கட்டுபாட்டு ஆணை ஆகியவற்றின் படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/south-indian-tea-board-issuing-notice-for-109-tea-factory
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக