Ad

சனி, 26 செப்டம்பர், 2020

நினைவில் கொள்ளுங்கள் தோனி & சிஎஸ்கே... நாம் போராட வேண்டியது எதிர் டீமுடன்! #CSKvDC

இந்த எட்டு அணிகளும் ஐ.பி.எல் கோப்பைக்காக போராடுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள் சி.எஸ்.கே. நாம் எதிர் டீமுடன் போராட வேண்டும். சொந்த டீமுடன் அல்ல!

நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல்-ன் ஏழாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கொரோனாவுக்கு முந்தைய பண்டைய காலத்தில், டாஸ் வென்றாலே மேட்ச் வென்றதுபோல சந்தோஷத்தில் சீனியை வாயில்போட்டு, சீனிவெடி கொளுத்திய ரசிகர்கள், இப்போது டாஸ் என்றாலே பதறுகிறார்கள். பாவம் சென்னை ரசிகர்கள். சரி, டாஸ்தான் சென்னைக்கு சாதகமாக அமையாமல் ஜெயித்துவிட்டார்கள். முதல் பேட்டிங் எடுத்தாவது அதை நிவர்த்தி செய்வார்கள் எனப் பார்த்தால், `மாட்டேன்டா. அதுலேயேதான்டா கால வெப்பேன்' என பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார் தோனி. சென்னை அணியில் எங்கிடிக்கு பதிலாக ஹேஸல்வுட், டெல்லி அணியில் அஷ்வின் மற்றும் மோகித் சர்மாவுக்கு பதிலாக அமித் மிஸ்ரா மற்றும் ஆவேஷ்கான் இணைந்தனர்.

ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா

வருங்கால பூஸ்ட் விளம்பரத்தின் நடிகர் என நாடே நம்பிக்கை கொண்டிருக்கும் ப்ரித்வி ஷாவும், இடது கை துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவானும் டெல்லியின் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். சென்னை சூப்பர் ஸ்விங் தீபக் சஹார், முதல் ஓவரை வீசினார். சஹார் வீசிய ஓவரில் `டமார்' என இரண்டு பவுண்டரிகளைக் கொளுத்தினார் ஷா. கவர் - பாயின்ட் திசையில் ஒன்றும், கவர் - பாயின்ட் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் கேப்பில் ஒன்றுமாக பந்து விரைந்தது. அடுத்த ஓவர் வீச வந்தார், கடைக்குட்டி சிங்கம் சாம் கரன். ஒரு லெக் பை, ஒரு சிங்கிள் என இரண்டே ரன்கள். 3-வது ஓவரை வீசவந்தது ஹேஸல்வுட்! அவரும் பொறுப்பாக வீசி, 4 ரன்களை மட்டுமே விட்டுத்தந்தார்.

4-வது ஓவரில், ஷார்ட் ஃபைன் திசையில் ஒன்றும், மிட்-ஆஃப் திசையில் ஒன்றுமாக இரண்டு பவுண்டரிகளை ஷாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார் சாம் கரண். ஸ்ரூவ்வ்வ்! பொறுப்பு பொண்ணுசாமி ஹேசல்வுட், மீண்டும் பொறுப்பாக ஒரு ஓவரை முடித்து, 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 6வது ஓவரை வீசிய சாஹரும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து, பவர்பிளேவை சீறும் சிறப்பாக முடித்துவைத்தார். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி அணி. இப்படியாக, சென்னை கொடுத்த ஓப்பனிங் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது!

#CSKvDC

பவர்பிளே முடிந்ததும், பந்தை வைத்து டீ ஆற்றிக்கொண்டிருந்தார் வெண்பொங்கல் வெரைட்டி ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா. பிரித்வி ஷா விரட்டிய 2 பவுண்டரிகள் உட்பட, 13 ரன்கள் அந்த ஓவரில். சாவ்லாவுக்கு கம்பெனி கொடுக்க கத்தியை சுழற்றிவந்தார் ஜடேஜா. அதுவரை, களத்தில் நின்றுகொண்டு வேறேதோ சிந்தனையில் இருந்த தவானுக்கு நினைவு திரும்பியது. ஜடேஜா வீசிய முதல் பந்தை, `பளார்' என சிக்ஸருக்கு அறைந்தார். கூடவே, ஒரு பவுண்டரியும்!

சிஎஸ்கே ஸ்பின்னர்கள் மறுபடியும் வேலையைக் காட்ட துவங்கினார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில், ஒன்பது ஸ்பின்னர்களைக் கொண்ட ஒரு அணி, ஸ்பின் செய்தாலும் ஜெயிக்கலாம். செய்யவில்லை என்றாலும் ஜெயிக்கலாம். எப்படி வேணா ஜெயிக்கலாம். கண்டுக்காதீங்க என ஜோசியம் எல்லாம் சொன்னார்கள். அதை நினைத்து வயிறு எரிந்த சமயம், இன்னும் இரண்டு பவுண்டரிகளை கொடுத்திருந்தார் சாவ்லா. `அப்போ நாங்கனாப்ல யாரு' என தவானுக்கு ஒரு பவுண்டரியும், ஷாவுக்கு ஒரு சிக்ஸரும் கொடுத்து குஷிபடுத்தினார் ஜட்டு. 10வது ஓவர் முடிவில், விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

கடைசியில், நிகழ மறுத்த அந்த அற்புதம் நிகழ்ந்துவிட்டது. தவானுக்கு ஒரு பவுண்டரியை மட்டுமே கடைசியாக பரிசளித்துவிட்டு, பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் சாவ்லா! பன்ட் உள்ளே வந்தார். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில், இன்னொரு பவுண்டரியை விளாசினார் ஷா. `ஹூஹும் இது சரிபட்டு வராது. நம்ம டீமோட மிஸ்ட்ரி ஸ்பின்னரை இறக்கிவிட வேண்டியதுதான்' என திட்டம் தீட்டிய தோனி, அணியின் ஒரே மிஸ்டரி ஸ்பின்னரான மிஸ்டர். பியூஷ் சாவ்லாவை பந்து வீச அழைத்தார். அவரும், ஷாவின் விக்கெட்டை கழற்றி கொக்கானி காட்டினார். 43 பந்துகளில் 64 ரன்களை அள்ளிப்போட்டு கிளம்பினார் பிரித்வி ஷா!

பியூஸ் சாவ்லா

சாம் கரண், ஜடேஜா என இரண்டு நம்பிக்கையான ஆல்-ரவுண்டர்கள் இருக்கும்போதும் ஐந்து பெளலர்களை வைத்துதான் விளையாடுவேன் என அடம்பிடிக்கும் சென்னை அணியைப் பார்த்து `எதுக்க்க்கு...' என நொந்துப்போனார்கள் சென்னையர்கள். பந்துபோட மீண்டும் ஜடேஜாவே வந்தார். மீண்டும் ஒரு பவுண்டரியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். அடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள், பந்தைக் கையில் எடுத்தார்கள். சஹாரும் சாம் கரணும் வீசிய அடுத்த மூன்று ஓவர்களில், பன்ட் ஒரு பவுண்டரியும், ஸ்ரேயாஸ் ஒரு பவுண்டரியும் விளாசினார்கள். எந்த பந்தையும் டாட் ஆக்காமல், சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ஓடி ஓடி உழைத்தார்கள்.

ஹேஸல்வுட் வீசிய 18வது ஓவரில், கவர் திசையில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் பன்ட். `கடைசி இரண்டு ஓவர்ல வெளுத்து வாங்கிருவோம்' என வெயிட் செய்துகொண்டிருந்த ஸ்ரேயாஸை, அடிக்கவிடாமல் சாம் கரண் வெறுப்பேற்ற, கடுப்பாகி அவுட்டானார் ஸ்ரேயாஸ். வைடு அவுட் சைடு வீசிய பந்து, கொஞ்சம் ஸ்விங்காக, திக் எட்ஜாகி தோனியிடம் கேட்ச் ஆனது. அட்டகாசமான கேட்ச்!

ஹேஸல்வுட் வீசிய இறுதி ஒவரில், பன்ட் ஒரு பவுண்டரி, ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி, லெக் பைஸில் ஹேஸல்வுட் ஒரு பவுண்டரி என மூன்று பவுண்டரிகள் கிட்ட, 175/3 என இன்னிங்ஸை நிறைவு செய்தது டெல்லி அணி. 25 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, அணிக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார் பன்ட். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் அடிக்கக்கூடிய இலக்கை, "அடிக்கமாட்டேனே... நீ என்ன பண்ணுவ" எனும் மனநிலையோடு விரட்டத் துவங்கியது சிஎஸ்கே.

#CSKvDC

இன்றைய தேதிக்கு, ஒரு பேங்க் ஃபார்மைக் கொடுத்து நிரப்ப சொன்னால் கூட நிரப்ப முடியாத அளவுக்கு, முரட்டு ஃபார்ம்-அவுட்டில் இருக்கிறார் முரளி விஜய். `ஏழாம் அறிவு' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் பழைய டி.என்.ஏக்களை உசுப்பி விட்டாலன்றி வேறு வழியில்லை என தெரிகிறது. அவரும் வாட்சனும் சென்னையின் இன்னிங்ஸைத் துவங்கினார்கள். ரபாடா வீசிய முதல் ஓவரில், முதல் ஐந்து பந்துகளை டாட் பந்துகளாக்கி, கடைசி பந்தில் ஒரு டபுள்ஸ் தட்டினார் முரளி. அப்படியே, அக்‌ஷர் படேல் வீசிய 2வது ஒவரில், 1 பவுண்டரியும் விரட்டினார். அடடே!

3-வது ஓவராக ஒரு முரட்டு ஒவரை வீசினார் நார்ட்டியா. வாட்சனுக்கு ஒரு கேட்ச் டிராப் உட்பட, ஒரே ஒரு ரன் மட்டுமே வந்தது. கடைசியாகத்தான் வந்தார் ஆவேஷ் கான். இவரையும் விட்டால், அடுத்து யார் பந்தையும் அடிக்கமுடியாது என தெரிந்துக்கொண்டு வாட்டூ, அடிப்பதற்கு வாட்டமாக வந்த ஆவேஷ் கான் பந்துகளை பவுண்டரிக்கு ஒன்றும், சிக்ஸருக்கு ஒன்றுமாக பறக்கவிட்டார். அம்மாம்பெரிய யானைக்கும், தம்மாத்தூண்டு எறும்பு மாதிரி ஒரு பலவீனம் இருக்கும் என்பதுபோல, வாட்சனின் பெரும் பலவீனமான அக்‌ஷர் படேலை மீண்டும் கூட்டிவந்தார் ஸ்ரேயாஸ். வந்த காரியமும் சிறப்பாக முடிந்தது. டீப் மிட் விக்கெட்டில் செவனேனு நின்றுக்கொண்டிருந்த ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் வாட்சன். சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஃபாஃப் டூப்ளெஸ்ஸி களமிறங்கினார். நார்ட்டியா பந்தில், ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி.

ஒரு பவுண்டரியை அடித்துவிட்ட டூப்ளெஸ்ஸி, `செவல, தாவுடா தாவு' என முரளி விஜய்யை அழைத்தும் `எங்க தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்டா' என உருட்டிக்கொண்டிருந்தார் விஜய். கடைசியில், பெரிய கம்பாக எடுத்து காம்பவுண்ட் சுவரைத் தாண்ட நினைத்து செவலையாக, பேட்டை ஒரு சுற்று சுற்றி கேட்ச் கொடுத்து கிளம்பினார். பவர் ப்ளேயின் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது சென்னை அணி.

முரளி விஜய்

அடுத்த ஐந்து ஓவர்களையும் அமித் மற்றும் அக்‌ஷர் படேல் வீசினர். அதில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. கோயில் நவகிரகம் சுற்றுபவர்கள், கணக்கு வைக்க பூசிய கரிக் கோடுகளைப் போல 1 மட்டுமே டைம்லைன் முழுக்க நிரம்பியிருந்தது. 4, 6 எல்லாம் இல்லவே இல்லை. இந்த ஐந்து ஓவர்களில், ருத்துராஜ் வேறு ரன்-அவுட் ஆகியிருந்தார். மீண்டும் வந்தார் ஆவேஷ் கான், ஒரே ஒரு பவுண்டரி கிடைத்தது. அதிர்ச்சியாக, அந்த ஓவரில் டூப்ளெஸ்ஸிக்கு ஒரு கேட்ச் டிராப்பும் ஆனது.

ஒரு பக்கம் தேவையான ரன்-ரேட் ஏறிக்கொண்டே போனதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், 50 ஓவர் மேட்ச் போல ஆடிக்கொண்டிருந்தார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். ஃபாஃப் டூப்ளெஸ்ஸி, பாவம் டூப்ளெஸ்ஸி! அவரும் எவ்வளவுதான் போராடுவார். ஐபிஎல் கப் லட்சியம், ஆரஞ்சு கேப் நிச்சயம் என மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

Dhoni

நார்க்கியா வீசிய 16வது ஓவரில், கேதார் ஜாதவும் அவுட். தோனி உள்ளே வருவதற்கும், ஆவேஷ் கான் அடுத்த ஓவர் போடுவதற்கும் டைமிங் சரியாக இருந்தது. இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் தல! புரிகிறது, என்ன செய்ய? ஆவேஷ் கானும் 4 ஓவர்களுக்கு மேல் வீச முடியாதே. ப்ச்... 18வது ஓவரில் டூப்ளெஸ்ஸியும், ரபாடாவிடம் தன் விக்கெட்டைக் கொடுத்தார். 18வது ஓவரின் முடிவில், 12 பந்துகளுக்கு 55 ரன்கள் தேவை என்கிற நிலை. ஈ.ஏ. கிரிக்கெட்டில் கூட 5வது லெவலில் வைத்து விளையாடினால் சிரமமான இலக்குதான்.

ரபாடா வீசிய இன்னிங்ஸின் இறுதி ஓவரில், தோனியும் ஜடேஜாவும் தங்கள் விக்கெட்களைத் தாரை வார்த்துக் கொடுத்து, அமைதியாக கிளம்பிவிட்டார்கள். 131/7 என சென்னை அணி ஆட்டத்தை முடிக்க, 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

ஸ்ரேயாஸ்
'சின்ன தல ரெய்னா கேட்டேன். டர்பனேட்டர் பாஜி கேட்டேன். சாம்பியன் டிஜே பிராவோ கேட்டேன். பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் கேட்டேன். பாகுபலி அம்பத்தி ராயுடு கேட்டேன். பென்ச்சில் இருந்த ஜெகதீசன் கேட்டேன். இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை. இதிலே எதுவும் நடக்கவில்லை...' என சென்னை ரசிகர்கள்தாம் சோகத்தில் இருந்தனர்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-chennai-super-kings-vs-delhi-capitals-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக