Doctor Vikatan: நான் எப்போதும் சர்க்கரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். இனிப்பு அதிகமாக எடுத்துக் கொள்கிறேன். என்னால் அந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு சர்க்கரைநோய் வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?
-Uma undefined, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
உங்களுடைய வயது என்ன என்று நீங்கள் குறிப்பிடவில்லை. வயதைக் குறிப்பிட்டிருந்தால் உங்கள் கேள்விக்கான பதிலை இன்னும் விரிவாகச் சொல்ல முடியும். சர்க்கரையும், இனிப்புகளும் அதிகம் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என்று சொல்வோம்.
நம் உடலானது நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை மற்றும் உணவுகளுக்குத் தேவையான இன்சுலினை சுரக்காமல் எதிர்நிலை ஏற்படும் வாய்ப்பையே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்கிறோம். இதன் விளைவாக பின்னாளில் உடல்பருமன் பாதிப்பு வரலாம். பெண்ணாக இருந்தால் ஹார்மோன் பாதிப்புகளும் வரலாம். சர்க்கரைநோய் வரும் ஆபத்தும் நிச்சயம் உண்டு.
இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரைநோய் வரும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையும் இனிப்புகளையும் எடுத்துக்கொள்ளும்போது அதன் விளைவாக சர்க்கரைநோய் பாதிக்கும்.
சர்க்கரை மற்றும் இனிப்பு சாப்பிடும் வழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்... குறைந்தபட்சம் நீங்கள் உண்ணும் உணவுகளின் கலோரிகளை எரிப்பதற்கான நடவடிக்கைகளிலாவது இறங்க வேண்டும்.
தினமும் வாக்கிங் செல்வது, ஏரோபிக்ஸ் போன்ற ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது போன்றவை மிக முக்கியம். மன உறுதி இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியும். முயற்சி செய்யுங்கள். நீரிழிவு வந்துவிட்டால் உங்களால் எப்போதுமே இனிப்பு சாப்பிட முடியாது. எனவே அது வருவதற்கு முன்பே இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டால், எப்போதாவது ஆசைப்படும்போதாவது சாப்பிட முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-canot-control-eating-sweets-can-you-get-diabetes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக