சென்னை மயிலாப்பூர், லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. ``நான் பெட்டிக் கடை நடத்திவருகிறேன். ரேணுகா என்பவரின் கணவர் வீரப்பன் இறந்தபிறகு அவரை 35 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன். ரேணுகாவுக்கு பழனி (38). செந்தில்குமார் (36) என இரண்டு மகன் உள்ளனர். பழனி, மரியாள் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம். பழனியின் மனைவி மரியாளுக்கும் செந்தில்குமாருக்கும் தவறான நட்பு இருந்தது. அதனால் மனவருத்தத்தில் இருந்த செந்தில்குமாரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். பழனிக்கும் செந்தில்குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும். பழனியின் மனைவி மரியாள், கோபித்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகும் மரியாளுக்கும் செந்தில்குமாருக்கும் பழக்கம் தொடர்ந்துள்ளது.
30.8.2020-ல் பழனிக்கும் செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பழனியை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள மரியாள், தகாத வார்த்தைகளால் திட்டியதோடு செருப்பால் அடித்துள்ளார். அதனால், பழனிக்கு செந்தில்குமார் மீதான கோபம் அதிகமானது. `என்றைக்கு இருந்தாலும் செந்தில்குமாரை கொல்லாமல் விடமாட்டேன்' என்று பழனி கூறிவந்தார். இந்தச் சமயத்தில் கடந்த 1-ம் தேதி இரவு 11.15 மணியளவில் நான் கடையை மூடி விட்டு வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்தேன்.
செந்தில்குமார் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது பெரிய கல்லை தூக்கிக் கொண்டு ஓடி வந்த பழனி, வீட்டுக்குள் சென்று அதைச் செந்தில்குமாரின் தலையில் போட்டுவிட்டான். செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு நான் வீட்டுக்குள் சென்றேன். அப்போது செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்துபோனான். என்னைத் தள்ளிவிட்டு பழனி, ஓடி விட்டான். கொலைக்குப் பயன்படுத்திய பெரிய கல், செந்தில்குமாரின் தலை அருகிலேயே கிடந்தது. உடனடியாக நான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தேன். செந்தில்குமாரைக் கொலை செய்த பழனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் தலைமறைவாக இருந்த பழனியை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பழனி, போலீஸாரிடம் `எனக்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தீ விபத்தில் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனை தனக்குச் சாதகமாக செந்தில்குமார் பயன்படுத்திக் கொண்டார். காதலித்து திருமணம் செய்த என் மனைவி மரியாளும் எனக்கு துரோகம் செய்துவிட்டாள். சில தினங்களுக்கு முன் என் தம்பி கண்முன்னால் என்னுடைய மனைவி என்னை அசிங்கமாக திட்டியதோடு செருப்பால் அடித்தாள். அதனால்தான் தம்பி என்றுகூட பாராமல் செந்தில்குமாரை கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார்.
Also Read: சென்னை: `நான்தான் ஹவுஸ் ஓனர்’ - வாடகைக்குக் குடியிருந்தவர்கள் அதிர்ச்சி... மூவரால் ஏமாந்த 100 பேர்
இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமார், ஆட்டோ டிரைவராக உள்ளார். அவருக்கும் அண்ணன் மனைவி மரியாளுக்கும் ஏற்பட்ட தவறான நட்பே, இந்தக் கொலைக்கு முக்கிய காரணம். மரியாளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். பழனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். பிரேத பரிசோதனைக்குப்பிறகு செந்தில்குமாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பழனியும் ஆட்டோ ஓட்டிவருகிறார். விசாரணையில் இன்னொரு முக்கிய தகவல் கிடைத்தது. செந்தில்குமாரும், மரியாளும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பழனிக்கு அனுப்பி அவரை வெறுப்பேற்ற வைத்துள்ளனர். அதுவும் பழனிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.
அண்ணியுடன் ஏற்பட்ட தவறான நட்பால், ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/auto-driver-murdered-his-brother-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக