Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

மாடித்தோட்டம்: சிறந்த வளர்ப்பு பைகளை நீங்களே அமைக்கலாம்... எப்படி?

விவசாயத்துக்கு முக்கியமான தேவை நல்ல விளைநிலம். அதுபோல மாடித்தோட்டத்துக்கு `மாடித்தோட்ட தொட்டி தயாரிப்பு' முக்கியமான ஒன்று. விளைநிலத்தில் சத்துக்கள் எளிதில் கிடைத்துவிடும். ஆனால், மாடித்தோட்டத்தில் நாம்தான் அனைத்து சத்துக்களையும் கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவாகவே மாடித்தோட்டம் வைக்கலாம் என்று எண்ணம் தோன்றியது முதல் `இந்தக் காய்கறி வைக்கலாம், அந்தக் கீரை வைக்கலாம்' என மனம் நினைக்கத் தோன்றும். இவற்றையெல்லாம்விட, நாம் காய்கறிகள் வளர்க்கத் தேவையான தொட்டியைத் தயாரிப்பது பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முதலில் மாடித்தோட்டம் வைத்துவிட்டுச் சரியாக வரவில்லை என்றால் அத்துடன் மாடித்தோட்டம் எண்ணத்தைக் கைவிடும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பயிருக்குத் தேவையான சத்துகள் கிடைக்காததால்தான் செடிகள் சரியாக வளரவில்லை என்று அவர்கள் நினைப்பதில்லை. தொட்டிதானே என்று சாதாரணமாக நினைக்கலாம்.

தொட்டிக் கலவை

எந்த ஒரு செயலுக்கும் ஒரு வரைமுறை உண்டு. அதுபோல மாடித்தோட்டத்துக்குத் தொட்டி அமைப்பதிலும் ஒரு முறை இருக்கிறது, நேர்த்தி இருக்கிறது. இவையெல்லாம் எனக்கு எதற்கு, அதற்குத்தான் மாடித்தோட்டம் அமைக்கும் நபர்கள் இருக்கிறார்களே, நாம் ஏன் இதற்காகக் கவலைப்பட வேண்டும் எனவும்கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால், 3,000 முதல் 4,000 ரூபாய் கொடுத்து மாடித்தோட்டம் அமைப்பதைவிட, எளிய முறையில், குறைந்த செலவில் இருந்த இடத்திலிருந்தே மாடித்தோட்ட தொட்டியை உருவாக்கிக்கொள்ளலாம். அதேபோல ஒரு செடியை அதன் தொட்டி தயாரிப்பிலிருந்து நாம் கவனம் செலுத்தி, அந்தச் செடி நன்றாக வளர்ந்தால், அதில் காய்கள் காய்த்தால்... அதில் கிடைக்கும் ஆனந்தம் ரெடிமேடாகக் கிடைக்கும் தோட்டத்தில் கிடைக்காது. அதேபோல அவர்கள் என்ன மாதிரியான மண் கலவையை வைத்திருக்கிறார்கள், அது இயற்கை உரமா, செயற்கை உரமா என்பதும் நமக்குத் தெரியாது. அதனால் மாடித்தோட்ட உற்பத்திக்கு மாடித்தோட்ட தொட்டி தயாரிப்பு மிக முக்கியம்.

மாடித்தோட்ட தொட்டி தயாரிப்பது எப்படி?

முதலில் மாடித்தோட்டம் அமைப்பவர்களாக இருந்தால் வீட்டில் உள்ள பழைய பெயிண்ட் வாளிகள், பெரிய அளவிலான டப்பாக்களையே தொட்டியாகப் பயன்படுத்தலாம். அல்லது கொஞ்சம் செலவு செய்து தார்ப்பாலின் மாடித்தோட்ட பைகள், சிமென்ட் மற்றும் மண் தொட்டி ஆகியவற்றை வாங்கி தொட்டி அமைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். மண் தொட்டி, சிமென்ட் தொட்டி ஆகியவை கனமாக இருப்பதால் மாடித் தளம் அதிக பாரத்தைத் தாங்குவதாக இருக்கும். அதனால் இவற்றைப் பெரும்பாலானோர் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானோர் மாடித்தோட்ட பைகளையே பயன்படுத்துகின்றனர். மாடித்தோட்ட பைகளை எளிதில் நகர்த்திக் கொள்ளலாம். இதுபோக தேவைக்கேற்ப பையின் உயரத்தை அதிகமாகவோ, குறைவாகவோ வைத்துக்கொள்ளலாம். தரமான தார்பாலின் பைகள் 5 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.

தயாரான தொட்டி

கடைகளில் கிடைக்கும் ஒரு தேங்காய் நார் கட்டியை வாங்கி ஒரு தளத்தில் சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ள வேண்டும். (அது கிடைக்காவிடில் கரும்புச் சக்கை, மரத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கலாம்) அதில் தண்ணீர் ஊற்றும்போது 5 மடங்கு விரிவடைந்து தேங்காய் நார்கள் பொலபொலப்பாகும். இந்தத் தேங்காய் நார் தண்ணீரை அதிகமாக உறிஞ்சி தேக்கி வைத்துக்கொள்ளும். மிக வறட்சியான காலங்களில் இது கைகொடுக்கும். அதேபோலச் செடிகளின் வேர்கள் தொட்டிக்குள் இறங்குவதற்கும் தேங்காய் நார்கள் உதவி செய்யும். தேங்காய் நார் ஒரு கிலோ அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சமமாகச் செம்மண், எரு இரண்டையும் தேங்காய் நாரோடு சேர்த்துக் கலக்க வேண்டும். செம்மண் வேர் பிடிப்புத் தன்மையை உறுதி செய்யும். எரு பயிருக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும். இந்த மூன்றையும் நன்றாகக் கலக்க வேண்டும். அதனுடன் ஒரு கிலோ மண்புழு உரம் சேர்த்து மறுபடியும் கலந்துவிடலாம். இறுதியாக இத்துடன் அசோஸ்பைரில்லம் சிறிதளவு சேர்த்து மீண்டும் கலக்கலாம். இவை அனைத்தும் கலந்த கலவை பார்க்கக் கறுப்பு நிறத்தில் இருக்கும். விரும்பினால் இதனுடன் வேப்பம் புண்ணாக்கை சேர்த்துக்கொள்ளலாம். இல்லையெனில் வேப்பம்புண்ணாக்கைத் தண்ணீருடன் கலந்து விடலாம்.

நாம் தொட்டி தயாரிப்பதற்கு மூன்று மாதத்துக்கு முன்னர் வீட்டுக் காய்கறிக் கழிவுகள், மட்கிய இலைகள் ஆகியவற்றைத் தேங்காய் நாரோடு சேர்த்து மூன்று மாதம் சேகரிக்க வேண்டும். இது கம்போஸ்ட் உரமாக மாடியில் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் தயாரித்திருக்கும் கலவையைத் தார்பாலின் பையிலோ, வாளியிலோ கால்வாசி நிரப்பிக் கொள்ளலாம். கம்போஸ்ட் கழிவுகளைக் கொஞ்சம் எடுத்து ஒரு அடுக்காகப் போடலாம். அதன் மேல் மீண்டும் இந்தக் கலவையை நிரப்பலாம். இப்போது தொட்டி தயார். மண் கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்க வேண்டாம். அதிகபட்சமாக 7 முதல் 10 நாள்களில் நாம் தயார் செய்த தொட்டியில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் பிறகு, அதில் எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.

தொட்டியில் கீரைகள் மாதிரியான விதைகள் தூவும்போது தண்ணீரை ஊற்றாமல், தெளித்துவிட வேண்டும். தொட்டி தயாரித்த ஆரம்பத்தில் தண்ணீரை கைகளால் தெளிப்பது நல்லது. பூவாளி இருந்தால் அதைப் பயன்படுத்தியும் தண்ணீரை விடலாம். மாடித்தோட்ட தொட்டியை நிழல் விழாத பகுதியில் வைக்கலாம். பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்காமல் பலகையிலோ, தார்ப்பாலின் ஷீட் விரித்தோ வைக்கலாம். பைகளைத் தயார் செய்தவுடன் விதைப்பு அல்லது நடவை மேற்கொள்ளக் கூடாது. பைகளை அடர்த்தியாக நெருக்கி வைக்கவும் கூடாது. தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறச் சிறிய துவாரம் அமைக்கலாம். தொட்டிக்கு அளவு, வடிவம் என எதுவும் கிடையாது.

இவ்வாறு தயாராகும் தொட்டியில் விளையும் காய்கறிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.



source https://www.vikatan.com/news/agriculture/how-to-prepare-good-grow-bags-for-terrace-gardening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக