கெமர் ரூஜ் ஆட்சியின் தலைமை சிறை அதிகாரியை இருந்தவர் கைங் குயெக் ஈவ். இவர், தோழர் டச் என்று எல்லோராலும் அறியப்பட்டவர். கம்போடியா நாட்டின் இனப் படுகொலையின் போது, 14,000-க்கும் அதிகமான மரணங்கள் இவர் மேற்பார்வையில்தான் நடந்தது. மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த டச் (77), கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று அதிகாலை 00.52 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கெமர் ரூஜ்ஜின் கம்போடியப் படுகொலை!
1800-ம் ஆண்டின் பிற்பாதியில் இருந்து பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த கம்போடியா, மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 1953-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரமும் அந்த நாட்டு மக்களுக்கு நீண்டநாள் நிலைக்கவில்லை. 1965-ம் ஆண்டு வியட்நாம் போரின்போது, அமெரிக்கப் படைகள் கம்போடியாவில் குவிக்கப்பட்டன. அமெரிக்காவின் ஆதிக்கம் கம்போடியாவில் தொடங்கியது. அதற்குப் பிறகு, கம்போடியாவின் கெமர் ரூஜ் படை, அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் நாட்டைக் கொண்டு வந்தது.
1975 தொடங்கி 1979-ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் கம்போடியாவில் கெமர் ரூஜ் படை ஆட்சி செய்தது வந்தது. இந்த ஆட்சியின் தலைமைப் பொறுப்பைப் 'போல் பாட்' என்பவர் வகித்துவந்தார். இந்த ஐந்தாண்டுகளில் மட்டும், மரணதண்டனை, நோய், பட்டினி, மற்றும் அதிக பணிச்சுமையின் காரணமாக மட்டுமே சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில், கொல்லப்பட்டவர்களில் பலர் அறிஞர்கள், பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் கெமர் ரூஜ் ஆட்சிக்கு எதிர் புரட்சியாளர்களாகக் கருதப்பட்டவர்கள்.
யார் இந்த போல்பாட்?
கம்போடியா நாட்டிலுள்ள, சலோத் சார் இடத்தில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் போல்பாட். சீனாவில் நிகழ்ந்த கம்யூனிஸ்ட் புரட்சியைப் போலவே கம்போடியாவிலும் உருவாக்க நினைத்து கெமர் ரூஜ் என்ற அமைப்பை உருவாக்கினார். கிராமத்து இளைஞர்களை ஒன்று சேர்ந்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியையும் வழங்கி கொரில்லாப் படையை உருவாக்கினார். அவரால் உருவாக்கப்பட்ட இந்தப்படை, 1975-ம் ஆண்டு தலைநகர் புனாம் பென்யைக் கைப்பற்றியது.
அமெரிக்க ஆதிக்கத்தால் சோர்வடைந்திருந்த கம்போடிய மக்கள், போல்பாட்டை தங்களைக் காக்க வந்த ரட்சகனாகவே அப்போது பார்த்தனர். அந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கெமர் ரூஜ் கம்போடியாவை முற்றிலும் விவசாய சமுதாயமாக மாற்ற நினைத்தது. நகரத்திலிருந்த அனைவரும் உடனடியாக கிராமங்களுக்குச் சென்று விவசாயம் பார்க்க உத்தரவிடப்பட்டனர். இந்த உத்தரவைப் புறக்கணித்த மற்றும் மீறிய அனைவருமே கொல்லப்பட்டார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், என்று படித்த, பதவியிலிருந்த அனைவருமே வயல்வெளிகளில் துப்பாக்கி முனையில் விவசாயம் பார்க்கக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரமாகச் சென்று கெமர் ரூஜ் படையினர் இந்த நிகழ்வை அரங்கேற்றினர். மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை, தங்கள் வீடுகளை விட்டு கிராமங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். மருத்துவமனைகள் இடிக்கப்பட்டன, பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன. வங்கிகள் இடித்து நொறுக்கப்பட்டன. நாட்டின் பணம் மற்றும் நாணயம் எரிக்கப்பட்டது.
கெமர் ரூஜ் படை, நகரத்திற்கு வெளியே கொலை செய்வதற்கென்றே கொலைக் களம் (Killing Field) ஒன்றை உருவாக்கி வைத்திருந்தது. அதில் பலர் அவர்களுக்கான குழிகளை அவர்களே தோண்ட வற்புறுத்தப்பட்டார்கள். மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டனர். தற்போது அந்தப் பகுதியைத் தோண்டியதில் பல்லாயிரக்கணக்கான மண்டை ஓடுகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில், கம்போடியா நாடு வெளியுலகத் தொடர்பை முற்றிலுமாக இழந்திருந்தது. 1979-ம் ஆண்டின் பிற்பாதியில், வியட்நாம் படையெடுப்பில் கெமர் ரூஜ் படை தோற்கடிக்கப்பட்டது. கெமர் ரூஜ்ஜின் தலைவர் போல்பாட், தாய்லாந்து அருகிலிருந்த அடர் காடுகளுக்குத் தப்பித்துச் சென்றுவிட்டார். பின்னர் 1998-ம் ஆண்டு உயிரிழந்தார். .
யார் இந்த தோழர் டச்?
1940-ம் ஆண்டு பிறந்த டச், பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தலைவர்களுடன் நெருக்கமாக்கியது. வியட்நாம் போரின் போது, தலைவர் போல் பாட் கீழ் கெமர் ரூஜ் கம்யூனிச கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்தார். 1975-ம் ஆண்டு கெமர் ரூஜ் அதிகாரத்தைக் கைப்பற்றியதும், டச் டுவோல் ஸ்லெங்கின் இயக்குநரானார். அதோடு, பிரதான மரணதண்டனை மற்றும் பாதுகாப்புத் தலைவரானார்.
டுவோல் ஸ்லெங்கில் இருந்த ஒரு பள்ளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இந்தச் சிறைச்சாலை எஸ்-21 என்று குறிப்பிடப்பட்டது. இந்தச் சிறைச்சாலை கெமர் ரூஜ் ஆட்சியின் கொடூரத்தின் அடையாளமாக விளங்கியது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 14,000-க்கும் மேற்பட்டவர்கள், இந்தச் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு, அடித்துக் கொடுமைப் படுத்திக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவருமே தாங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர். எஸ் -21 சிறைச்சாலை கெமர் ரூஜ்ஜின் சித்திரவதைத் தளமாக விளங்கியது. இந்த சித்திரவதைப் படுகொலைகள் என அனைத்துமே டச்சின் மேற்பார்வையில்தான் நடந்தது.
1979-ம் ஆண்டு, நாட்டின் ஆட்சி மாறியதும் டச், மூத்த கெமர் ரூஜ் உறுப்பினர்களுடன் நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களுக்குத் தப்பி ஓடினர். பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறு பெயரில் வாழ்ந்து வந்த டச் அடையாளம் காணப்பட்டு. 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
2006-ம் ஆண்டு ஐ.நா ஆதரவுடைய சிறப்பு நீதிமன்றம் , மூத்த கெமர் ரூஜ் தலைவர்கள் மற்றும் கொடூரமான செயல்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது வழக்குத் தொடர உருவாக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஐ.நா சபைக்கும், கம்போடியாவுக்கும் இடையில் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 2009-ம் ஆண்டு நீதிமன்றம், தன் பணியைத் தொடங்கியது.
Also Read: மே 17... வரலாற்றில் அழிக்கமுடியாத ஓர் இனப்படுகொலை!
தோழர் டச், ஆட்சியின் மாநிலத் தலைவர் கியூ சம்பன் மற்றும் போல் பாட்டின் இரண்டாவது கட்டளைத் தளபதி நூன் சே மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2010-ம் ஆண்டு, படுகொலை, சித்திரவதை மற்றும் மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்களில். தோழர் டச்சை குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 30 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை வழங்கியது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த டச்சுக்கு 2012-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த டச், உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
நீதிமன்ற விசாரணையின்போது 'தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடமும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டார். போல் பாட் மிருகத்தனமான ஆட்சி வீழ்ச்சியடைந்து பல ஆண்டுகள் கழித்து, 2018-ம் ஆண்டு கெமர் ரூஜ் இனப்படுகொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1979-ம் ஆண்டு கண்டறியப்பட்ட டுவோல் ஸ்லெங்கின் சிறைச்சாலையானது, கெமர் ரூஜ் ஆட்சியின் கொடூரங்களையும் அட்டூழியங்களையும் ஆவணப்படுத்தும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இன்றும் அங்கு தரையில் உள்ள ரத்தக்கறை, இரும்பு கட்டில்கள், சித்திரவதைக் கருவிகள். தூக்கிலிடப்பட்டவர்களின் புகைப்படங்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றளவும் அந்த சிறைச்சாலைகளில் இறந்தவர்களின் ஓலம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. டச்சின் இறப்புக்குப் பிறகாவது, இறந்தவர்களின் ஆத்மா நிம்மதி அடையும் என்று நம்புவோம்.
source https://www.vikatan.com/government-and-politics/international/cambodian-genocide-khmer-rouge-prison-chief-comrade-duch-dies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக