கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மறைவைத் தொடர்ந்து அவரது ஏழாவது நாள் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை மெளன ஊர்வலம் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற இந்த மௌன ஊர்வலத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ், தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட நுற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து வசந்தகுமார் உருவப் படத்துக்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் வசந்தகுமாரின் மகன்கள் விஜய் வசந்த் மற்றும் வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விஜய் வசந்த், தனது தந்தை வசந்தகுமார் போன்று கட்சியின் மூவர்ணத் துண்டை தோளில் போட்டபடி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அவரது தம்பி வினோத்குமார் கட்சித் துண்டு எதுவும் இல்லாமல் சாதாரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வசந்தகுமார் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிறகு விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``எங்கள் தந்தை வசந்தகுமார் உழைப்பால் உயர்ந்தவர். அவருடைய உழைப்பை முன் உதாரணமாகக் கொண்டு நாங்கள் அவர் செய்த மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வோம். அவர், தனது தொகுதிக்காக பல்வேறு பணித் திட்டங்களை செய்ய நினைத்து இருந்தார். அவருடைய மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்பாவுடைய ஆர்வலர்களும், நலன் விரும்பிகளும், தொண்டர்களும் அப்பாவுக்கு அப்புறம் எங்களை சொல்லியிருக்கிறார்கள். எங்கள் தரப்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கல. இது கட்சி எங்களுக்குக் கொடுத்த பொறுப்பு. அதை அப்பா சிறப்பா செஞ்சாங்க. கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதுபடிதான் நாங்க செயல்படுவோம். திடீர்னு, `விஜய் வசந்த் நீங்க என்ன முடிவு எடுக்கப்போறீங்க'ன்னு கேட்டா, நாங்க எந்த முடிவும் எடுக்கல. குடும்பத்தோட ஆலோசித்து முடிவு எடுப்போம்.
நான் கட்சிப்பணி செய்யணும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் அவங்களோட கருத்துக்களை வெளிப்படுத்துறாங்க. எதுவாக இருந்தாலும் குடும்பத்தினரிடம் பேசிதான் முடிவு எடுப்பேன். ஏன்னா எங்களுக்கு இது ஒரு பெரிய இழப்பு. இந்த இழப்பில் இருந்து மீண்டுவர கொஞ்சம் நேரம் எடுக்கும். அப்பா இங்கயே இருந்து மக்களுக்காக தொண்டுகளைச் செய்திருக்கிறார். அப்பா விட்டுச் சென்ற சேவைகளை, தொண்டுகளை தொடர்ந்து செய்வோம்" என்றார். வரும் தேர்தலில் கட்சி வாய்ப்பு கொடுத்தால் எம்.பி வேட்பாளராக போட்டியிடுவீர்களா எனக் கேட்டதற்கு, முதலில் ஆமாம் என்றவர், சட்டென சுதாரித்துக்கொண்டு, ``அதையும் குடும்பத்தினரிடம் பேசி முடிவெடுப்போம்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/vasanthakumars-son-vijay-vasanth-speaks-about-various-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக