ஒரேயொரு அறிவிப்பில் கல்லூரி மாணவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவராக மாறிவிட்டார் தமிழக முதல்வர். இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்ற பருவத் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
அறிவிப்பு வெளியானதில் இருந்து சமூக ஊடகங்கள் முழுவதும் மீம்களாலும் விவாதங்களாலும் நிறைந்தது. மாணவர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒரு பருவத்தில் தேர்ச்சிப் பெறாத பாடங்களை அடுத்த பருவத்தில் மீண்டும் எழுதுவதற்கான வாய்ப்பே அரியர் தேர்வுகள் எனப்படுகிறது. இப்படியான அரியர் தேர்வுகள் கலை, அறிவியல், பொறியியல், சட்டம் என எல்லா படிப்புகளிலும் பொதுவானதே. வருடக்கணக்கில் அரியர் தேர்வுகள் எழுதும் மாணவர்களும் உண்டு.
அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வுக்கட்டணம் செலுத்தி இருந்தால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகின்றனர் என்ற பொருளில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு என்பது முறையான பார்வையல்ல எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் பேசியதில் இருந்து...
பேராசிரியர் இரவிக்குமார்:
"அரியர் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்திருப்பது மிக மிக சரியான முடிவு என்றே நினைக்கிறேன். இன்றைய சூழலில் தேர்வுகள் நடத்துவது இயலாத காரியம். மாணவர்கள் தேர்வுகள் குறித்த அச்சத்தின் காரணமாக மன உளைச்சலில் இருக்கும் நிலையில், இப்படியான அறிவிப்புகள் வரவேற்க வேண்டியது. தேர்வுகளைத் தாண்டி யோசிப்பதுதான் இந்த நூற்றாண்டின் கல்வியில் ஏற்படும் மிகப்பெரிய மாறுதல்.
இதனால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது என்பதெல்லாம் சரியான குற்றச்சாட்டு இல்லை. இந்தியா போன்ற நாட்டில் படிப்புக்கும் வேலைக்கும் ஏன் படிப்புக்கும் அறிவுக்குமே தொடர்பு கிடையாது. மாணவர்களின் உயிரைவிட தேர்வுகள் முக்கியமானவை இல்லை.
அரசியல் ரீதியான பார்வை இந்த முடிவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அதைத்தாண்டி மாணவர்களின் நலன் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆன்லைன் வழியாக மாணவர்களை எழுத வைப்பது என்பது சமமான வாய்ப்பாக எல்லா மாணவர்களுக்கும் அமையாது. கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் தேர்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது."
பேராசிரியர் அ.கருணானந்தம்:
"இது அவசரக் கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றே கருதுகிறேன். கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களின் உயர்மட்டக் குழுக்கள், எதிர்கட்சிகள் என எல்லோரிடமும் கலந்தாலோசித்து இதன் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது நிர்வாகப் பிரச்னையோ கட்சிப் பிரச்னையோ அல்ல. சமூகப் பிரச்னையாக பார்க்கப்பட வேண்டும். கட்டணம் செலுத்திய அனைவருக்கும் விலக்கு என்பது ஒருதலைபட்சமான முடிவு. தேர்வுகளுக்கான அட்டவணை எதுவும் போடப்படாத சூழலில் அனைத்து மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பொருளாதாரச் சிக்கல்களை எளிய மக்கள் எதிர்கொள்ளும் நேரத்தில், எவ்வாறு மாணவர்களால் தேர்வுக் கட்டணம் செலுத்தியிருக்க இயலும். இன்னும் சொல்லப் போனால், அரசு தேர்வுக் கட்டணத்தில் இருந்தே விலக்கு கொடுத்திருக்க வேண்டும்."
இந்த அறிவிப்பு குறித்து மாணவர்களிடம் பேசினோம். இறுதி வருடம் வணிகவியல் பயிலும் மாணவரிடம் பேசும் போது, “எனக்கு மொத்தம் 17 அரியர்ஸ் இருந்தது. இறுதி பருவத் தேர்வு என்பதால் எல்லாவற்றிக்கும் சேர்த்தே கட்டணம் செலுத்தி இருந்தேன். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தப்போவதாக சொல்கிறார்கள். அதற்கு படித்து பாஸ் ஆவதே இப்போதைக்கு குறிக்கோள். நான் இந்த வருடமே பட்டம் பெறுவதற்கு இந்த அறிவிப்புதான் காரணம்” என உற்சாகமாக பதிலளித்தார்.
Also Read: ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!
மதிப்பெண் வழங்கும் முறையாக 70 சதவிகிதம் அக மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்ணும் 30 சதவீதம் முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பேராசிரியர்கள் சிலர் இந்த முறைக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளனர். அகமதிப்பீட்டில் பெரும்பாலும் முழு மதிப்பெண்களே வழங்கப்படும் நிலையில் எல்லோருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் போட வேண்டியிருக்கும். ஆகையால் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க ஆலோசிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.
இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர்த்து மற்ற பருவத் தேர்வுகளுக்கு மட்டுமே விலக்கு எனும்போது இறுதி பருவத் தேர்வுகளில் அரியர் இருந்தால் அவர்கள் அந்தத் தேர்வை எழுதியே பட்டம் பெற வேண்டியிருக்கும்.
எப்போது தேர்வுகள் என்பது குறித்து தெரியாதபோது மாணவர்கள் பலர் கட்டணத்தைத் தவிர்க்கவே செய்திருப்பார்கள். அப்படித் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் இப்போது கட்டணம் செலுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/education/college-professors-opinion-regarding-arrears-clearance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக