கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அகில். பால் வெட்டும் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள். அதில் இளைய மகனான 12 வயதான அபினேஷ் கடையாலுமூடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களாக காய்ச்சலால் அவதிபட்டவரை பெற்றோர் கடையாலுமூட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ம் தேதி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர் லூக்கா என்பவர் சிகிட்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவர் ஊசி போட்டுள்ளர். பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஊசி போட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டதால் கடந்த 31-ம் தேதி மறுபடியும் சிறுவன் அபினேஷை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர் மீண்டும் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இரவு முழுவதும் தூங்காமல் வலியால் துடித்த அபினேஷ் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். கடந்த 1-ம் தேதி காலையில் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். மருத்துவமனையில் குளூக்கோஸ் ட்ரிப் போட்டுள்ளனர். அப்போது சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது.
இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி மருத்துவர் கூறியுள்ளார். பெற்றோர் உடனடியாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்று சேரும் முன்னரே சிறுவன் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்தால் உண்மை வெளியாகும். அதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். சிறுவனின் மரணம் மர்மச்சாவு என போலீஸார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவர் லூக்கா என்பவர் மீது கடையாலுமூடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுவன் அபினேஷின் உறவினர்கள் கூறுகையில், ``அபினேசின் தந்தை புருஷோத்தமன் சலவைத் தொழில் செய்துவருகிறார். புருஷோத்தமன் வாய்பேச முடியாதவர். சிறுவனுக்கு காய்ச்சல் என்றது அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார். இந்த டாக்டர் ஊசி போட்டிருக்கிறார். தவறாக ஊசிபோட்டதால் சிறுவன் மரணமடைந்துவிட்டார். தலைமறைவாக உள்ள மருத்துவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/student-died-after-treatment-for-fever-relatives-protest-against-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக