Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

புதுக்கோட்டை: வாடிக்கையாளர் தவறவிட்ட தங்கசெயின்! - கைதியின் நேர்மைக்கு குவியும் பாராட்டு

சம்பவம் 1: 

புதுக்கோட்டை சிறைத்துறை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளி அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் தண்டனைக் கைதிகள் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். பெட்ரோல் நிரப்புவது, கேஷியர், ஏர் செக்கர் என அனைத்திலும் தண்டனைக் கைதிகள் தான் பணியாளர்களாக இருக்கின்றனர். இங்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

தங்க செயின்

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை அருகே அடப்பன்வயலைச் சேர்ந்த சரவணன் என்ற வாடிக்கையாளர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்குப் பங்கிற்கு வந்துள்ளார். பெட்ரோல் நிரப்பிவிட்டுச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.65ஆயிரம் மதிப்பிலான தங்கச் செயின் கழன்று கீழே விழுந்துள்ளது. சரவணனும் அதனைக் கவனிக்காமல் சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் அப்போது, பணியிலிருந்த தண்டைக் கைதி கிறிஸ்து ஆரோக்கியராஜ் கீழே விழுந்த கிடந்தச் செயினை கையில் எடுத்துப் பார்த்துள்ளார்.

தங்க செயின் போலத் தெரிந்ததால், உடனே அதனைப் பத்திரமாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார். ஆரோக்கியராஜின் நேர்மையைப் பாராட்டிய சிறைத்துறை அதிகாரிகள், செயினை விட்டுச்சென்ற நபர் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்தனர். இதற்கிடையே, தங்கச் செயினைத் தேடி பெட்ரோல் பங்கிற்கு வந்த சரவணன், பணியாளர்களிடம் இதுபற்றி கேட்க," கீழே விழுந்துகிடந்த செயின் ஒன்றை சிறைத்துறை அதிகாரிகள் பத்திரமாக வைத்துள்ளனர். உரிய அடையாளங்களைக் கூறி, வாங்கிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளனர்.

நிம்மதிப் பெருமூச்சு விட்ட சரவணன், அடையாளங்களைக் கூறி செயினைப் பெற்றுச்சென்றுள்ளார். சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ருக்மிணி பிரியதர்ஷினி செயினை அடையாளங்களைப் பெற்று உரியவரிடம் ஒப்படைத்தார். அதோடு, கிறிஸ்து ஆரோக்கியராஜின் நேர்மையைப் பாராட்டினார். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் தவறவிட்ட ரூ.1.74லட்சத்தை நேர்மையுடன் இங்கு பணிபுரியும் மற்றொரு பணியாளர் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 2:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சக்தி(31), கீரமங்கலம்-பட்டுக்கோட்டை சாலை வழியாகச் சென்றுள்ளார். அப்போது, கட்டைப்பை ஒன்று சாலையில் கிடந்துள்ளது. சாலையில் கிடந்த அந்தக் கட்டப்பையைச் சக்தி பிரித்துப் பார்த்துள்ளார். அதில், தங்க நகைகள்,வெள்ளிக்கொலுசு, செல்போன் ஆகியவையும் இருந்துள்ளது. உடனே, அந்தப் பையை அப்படியே எடுத்துக்கொண்டு, கீரமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

கட்டப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

அங்குள்ள போலீஸாரிடம் பையைக் கொடுத்த சக்தி, உரியவரிடம் அந்தப் பையை ஒப்படைக்கும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து, பையில் இருந்த செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்ட போலீஸார் இது யாருடைய பை என்பதை உறுதி செய்து அவர்களின் முகவரியைப் பெற்றனர். விசாரணையில், பையைத் தவறவிட்டது, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-சசிகலா தம்பதி என்பவது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வழியாக பனசக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பை எதிர்பாராதவிதமாகச் சாலையில் கழன்று விழுந்துள்ளது. அந்தப்பையில், 3 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளிக்கொலுசு, செல்போன் உள்ளிட்டவை இருந்துள்ளது. உறவினர்களுக்குச் செய்முறை செய்வதற்காக நகைகளை எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர்களது உறவினர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்ட போலீஸார், காவல் நிலையம் வரவழைத்து கட்டைப்பையிலிருந்த விபரங்களைக் கேட்டுக்கொண்டனர்.

அனைத்து விபரங்களையும் சரியாகச் சொன்னபிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் பையை ஒப்படைத்தனர். நகை, செல்போன் இருந்த கட்டைப் பை காணாமல் போன சில மணி நேரங்களிலேயே, உரியவரிடம் கீரமங்கலம் போலீஸார் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் கீழே விழுந்து கிடந்தது நகை என்று தெரிந்தும் நாணயத்தோடு நடந்துகொண்ட சக்தியிடம் செயலை போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.



source https://www.vikatan.com/news/general-news/customer-missed-gold-chain-prisoner-honestly-handed-over

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக