Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

வீட்டில் எப்போதும் 20 பேர்; குழப்பிய 2 அறிக்கைகள்! - தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக வெளியான இருவேறு அறிக்கைகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளள. ` விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டில் எப்போதும் 20 பேர் இருப்பார்கள். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அலட்சியமாக இருந்ததன் விளைவு இது' எனக் குமுறுகின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

தலைமைக்கழக அறிக்கை

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவ்வப்போது பரிசோதனைக்காகச் செல்வது விஜயகாந்தின் வழக்கம். சர்க்கரை குறைபாடு உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்காக அவருக்குத் தொடர் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், கடந்த 22-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் `பாசிட்டிவ்' எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, `தலைமைக் கழகம்' என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், ` வழக்கமாக ஆறு மாதத்துக்கு ஒருமுறை கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் மருத்துவமனைக்குச் சென்ற கேப்டனுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், அது உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டது.

Also Read: `லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது!’ - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக

இந்த அறிக்கை வெளியான சில மணிநேரங்களில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ` செப்டம்பர் 22 அன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.

மியாட் மருத்துவமனை அறிக்கை

` ஒரேநேரத்தில் இரண்டு முரண்பாடான அறிக்கைகள் ஏன்?" என தே.மு.தி.க மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர், `` மியாட் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியின் மாவட்ட நிர்வாகிகளுக்கே இதுகுறித்து தகவல் தெரியவில்லை. வாரம் ஒருமுறை சர்க்கரை குறைபாடுக்கு சிகிச்சை எடுப்பதற்காக அவர் மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அப்படி 22-ம் தேதி செல்லும்போதுதான் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. அதைப் பற்றி வெளியில் சொல்வதைக்கூட பிரேமலதா தரப்பினர் விரும்பவில்லை. ஒருகட்டத்தில் தொண்டர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அறிக்கை வெளியிட்டார். அதுவும் அந்த அறிக்கையை யார் வெளியிட்டார்கள் எனவும் தெரியவில்லை. மியாட் தரப்பில் இருந்து அறிக்கை வெளியான பிறகே நிலைமையை உணர முடிந்தது" என விவரித்தவர்கள்.

`` சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துக் கொண்டு கேப்டன் வந்த பிறகும், கேப்டன் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெளியில் கசியவிடாமல் குடும்பத்தினர் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உடல்நிலையை வெளியே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் 2 பணிப்பெண்கள், 2 டிரைவர்கள், உதவியாளர்கள் என 10 பேர் இருக்கின்றனர். வீட்டில் உள்ள நாய்ப் பண்ணையில் ஏராளமான நாய்களை வளர்க்கின்றனர். இதனைக் கவனித்துக் கொள்வதற்கு 2 பேர் உள்ளனர். இவர்களைத் தவிர, விஜயகாந்த் மகனின் நண்பர்கள் என எப்போதும் 10 பேர் இருப்பார்கள். இவர்கள் எல்லாம் வெளியில் சுற்றிக் கொண்டே இருப்பவர்கள். கடந்த சில வருடங்களாகவே உடல் உபாதைகள் காரணமாக விஜயகாந்த் பெரிதாக வெளியில் வருவதில்லை.

பிரேமலதா

அவருக்குத் தேவையான உதவிகளைக்கூட உதவியாளர்கள்தான் செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு அவரைக் கவனித்திருக்க வேண்டும். அதில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாகவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட அன்றே, வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. ` 2 நாள்களுக்கு யாரும் வேலைக்கு வர வேண்டாம்' எனக் கூறிவிட்டார் பிரேமலதா. அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கும் முன்பே, `குணமாகிவிட்டார்' என தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டதுதான் வேதனையைத் தருகிறது" என்றார் ஆதங்கத்துடன்.

இதுதொடர்பாக, தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம். `` எந்தக் குழப்பமும் இல்லை. அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. அதில் இருந்து குணமாகிவிட்டார். மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார். அதைத்தான் அறிக்கையில் கூறியிருந்தோம். கேப்டன் செய்த புண்ணியமான காரியங்களே அவரைக் குணப்படுத்தும். கடவுளின் அருளால் விரைவில் வீடு திரும்புவார்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/dmdk-chief-vijaykanth-tested-corona-positive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக