Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

சென்னை: முதல் திருட்டு... பயத்தில் மதுஅருந்திய இன்ஜினீயர் - திருடச் சென்ற வீட்டில் உறக்கம்

சென்னை, மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53). இவர், பிசினஸ் செய்துவருகிறார். வீட்டில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதால், அதைச் சரிசெய்ய பிளம்பரை வரவழைத்தார் பிரபாகரன். பிளம்பரும் பிரபாகரனும் வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்றனர். அப்போது, மொட்டைமாடியில் இளைஞர் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதை பிரபாகரன் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இன்ஜினீயர் முத்தழகன்

அந்த இளைஞரைப் பிடிக்க பிரபாகரனும் பிளம்பரும் முயன்றனர். அவர்கள் வரும் சத்தம் கேட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அவரை பிரபாகரன் விடாமல் துரத்தினார். வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டி இருந்ததால், இளைஞரால் தப்பிச் செல்ல முடியவில்லை. வீட்டுக்குள் வசமாகச் சிக்கிக்கொண்ட இளைஞரை பிரபாகரனும் பிளம்பரும் சேர்ந்து மடக்கிப்பிடித்தனர். பிறகு, அந்த இளைஞரிடம் `யார் நீ?’ என்று விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞர், முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இளைஞர் மீது சந்தேகமடைந்த பிரபாகரன், மதுரவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீஸார் வந்தனர். இளைஞரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் முத்தழகன் (23) என்பதும், கொளத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இன்ஜினீயர் முத்தழகன்

இன்ஜினீயரிங் படித்த முத்தழகனுக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்துவந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஏற்கெனவே கல்விக்காக வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல், முத்தழகனும் அவரின் குடும்பத்தினரும் தவித்தனர். வறுமையில் தவித்த முத்தழகனின் குடும்பத்தினருக்கு கொரோனா ஊரடங்கு மேலும் சிரமத்தைக் கொடுத்தது. வருமானமின்றி தவித்த முத்தழகன், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்.

Also Read: சென்னை: 48 நாள்களில் 1,193 திருட்டு செல்போன்கள் மீட்பு!

உணவு டெலிவரி செய்யச் செல்லும் இடங்களில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்ட முத்தழகன், ஒரு வீட்டில் நள்ளிரவில் திருடலாம் எனத் திட்டமிட்டார். முதல் திருட்டு என்பதால், பயத்தைப் போக்கிக்கொள்ள மதுஅருந்தினார். பின்னர் போதையில் அடையாளம்பட்டு பகுதிக்கு பைக்கில் சென்றார். வீட்டினருகே பைக்கை நிறுத்திவிட்டு, காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றிருக்கிறார். வீட்டின் கதவுப் பூட்டை உடைக்க முடியாததால், முத்தழகன் மாடிப்பகுதிக்குச் சென்றிருக்கிறார். கதவைத் திறந்த பிறகு கொள்ளையடிக்கலாம் எனக் கருதிய முத்தழகன், போதையில் மொட்டைமாடியிலேயே தூங்கிவிட்டார்.

மதுரவாயல் காவல் நிலையம்

கணணயர்ந்து நன்றாகத் தூங்கியிருக்கிறார். காலையில் கண்விழித்த முத்தழகன், வீட்டில் ஆள்நடமாட்டம் இருந்ததால் கீழே சென்றால் மாட்டிக்கொள்வோம் என அங்கேயே பதுங்கியிருந்திருக்கிறார். கொளுத்தும் வெயிலில் சாப்பிடாமல் அங்கேயே பட்டினியாக இருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் வீட்டின் உரிமையாளர் பிளம்பருடன் மொட்டைமாடிக்கு வந்தபோது அவர் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. முத்தழகனை போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,`` நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முத்தழகன், கடன் வாங்கி இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்திருக்கிறார். அவரின் சகோதரிகளுக்குத் திருமணம் செய்துவைக்க உதவியும் செய்திருக்கிறார். முத்தழகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தச் சமயத்தில்தான் கொரோனாவால் வேலை இல்லை. கடன் தொல்லையால் சிரமப்பட்ட முத்தழகன், தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார். அப்போதுதான் உணவு டெலிவரிக்காக மதுரவாயல் பகுதிக்குச் சென்றபோது பிரபாகரனின் வீடு தனியாக இருப்பதைப் பார்த்த முத்தழகன், அங்கு திருடினால் கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்.

கைது

Also Read: சென்னை: `ஒரு வங்கியில் திருட்டு; இன்னொரு வங்கியில் பேக் மீட்பு' - பணத்துடன் எஸ்கேப் ஆன இளைஞர்

திருட்டுத் தொழிலில் அனுபவம் இல்லாததால், கையில் ஸ்பானரை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அதைவைத்து பூட்டை உடைக்க முடியாததால், மாடிக்குச் சென்று தூங்கிவிட்டார். முத்தழகனின் நிலைமையைப் பார்க்கும்போது பரிதாபமாக இக்கிறது. இருப்பினும், அவர் செய்த குற்றத்துக்காக அவரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-engineer-over-theft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக