Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

50:50 மாணவர்களுக்கே அனுமதி - இறுதிப் பருவத் தேர்வை நடத்த விரையும் அண்ணா பல்கலைக்கழகம்!

உலக மக்களை அனுதினமும் வாட்டி வதைத்துவருகிறது கொரோனா. இந்த வைரஸ் தொற்றின் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மாதக்கணக்கில் தொடர்ந்த ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதனால் வழக்கமான விஷயங்கள் பல மாற்றம் கண்டன. அதில் ஒன்று, மாணவர்களின் தேர்வு.

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வுகள் மற்றும் பருவத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பெரும் தொற்றின் காரணமாக பொதுத் தேர்வுகளும்,கல்லூரி பருவத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. `பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 15-ல் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது எழுந்த எதிர்ப்பலையால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டன.

கல்லூரி

பல்கலைக்கழக மானியக்குழுவால் (UGC) அமைக்கப்பட்ட நிபுணர்குழு சமர்ப்பித்த திருத்தி அமைக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதிப் பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தி முடிக்க யுஜிசி கடந்த ஜூலை 6-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

``கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் இயங்காதபோது தேர்வு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்றும், ``கல்லூரிகள் கொரோனா பரிசோதனை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் இருப்பதால் அங்கு தேர்வு நடத்தப்படும்போது மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என்றும் கூறி இதை எதிர்த்து மாணவர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில்,23.07.2020 அன்று `கலை அறிவியல்,பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பப் படிப்பு மாணவர்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளைத் தவிர, இந்தப் பருவத்துக்கான மற்ற தேர்வுகளை ரத்து செய்வதாக’ முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ``இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர்த்து, பிற பருவத் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண் வழங்கப்படும். இது தொலைதூரக் கல்வி மற்றும் அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலும் பொருந்தும்" என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அரியர் மாணவர்கள், `அரியர் மாணவர்களின் அரசே, தமிழகத்தின் நிரந்தர முதல்வரே, மாணவர்களின் மனித கடவுளே, மாணவர்களின் பாகுபலியே...’ போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பேனர்களையும், போஸ்டர்களையும் ஆங்காங்கே ஒட்டிவருகின்றனர்.

பேனர்

மாணவர்களின் வழக்கு விசாரணையின்போது, இறுதி ஆண்டு பருவத் தேர்வை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது யுஜிசி. இந்தநிலையில்,கடந்த மாதம் 28-ம் தேதி மாணவர்களின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,``தேர்வு நடத்தத் தடை விதிக்க முடியாது. தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கக் கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக் கூடாது"என்று தீர்ப்பளித்ததோடு, மாணவர்கள் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, `இறுதிப் பருவத் தேர்வுகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியது.

Also Read: `23 அரியர் க்ளியர்' மாணவரின் சிலாகிப்பும், கல்வியில் அரசியலும்!

தமிழகத்திலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ``உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஆகியோரின் இறுதிப் பருவத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். இறுதியாண்டுத் தேர்வு, மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்பது உறுதியான நிலையில், தற்போது அதற்கான பணிகளும் சூடுபிடித்து மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் அதன் உறுப்பு கல்லூரிகளிடம் சில தகவல்களை ஒரே நாளில் அளிக்கும்படி கேட்டு, நேற்று செய்தி அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் அன்பழகன்

செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், அதை இந்த மாதத்துக்குள் நடத்தி முடிப்பதற்காக அதன் உறுப்பு கல்லூரிகளிடம், ``முந்தைய காலகட்டத்தில் 25 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு தேர்வு அறையில், ஆலோசகர்களின் அறிவுரைப்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக பாதியாகக் குறைத்து, 50 சதவிகித மாணவர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு அறைக்கு 12 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான வசதிகள் உள்ளனவா..? இறுதிப் பருவத் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், தங்கள் கல்லூரி கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகின்றனவா..? அப்படி வருவதாயின் அக்கல்லூரிகள் விலக்கப்பட வேண்டும். தனித்து இயங்கும் Business schools- க்கு இந்த உத்தரவு இல்லை" என்று அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு தகவல்களை அனுப்பியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

அதோடு, நேற்று மாலை 3:30 மணிக்குள் எக்ஸெல் வடிவத்தில் தகவல்களை விரைந்து அனுப்பும்படியும், எக்காரணம் கொண்டும் கால தாமதம் கூடாது எனவும் கெடுபிடியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளும் உரிய தகவல்களை அவரவர் மண்டல அலுவலகத்துக்கு நேற்று மாலை 3:30 மணிக்குள் அனுப்பியிருக்கின்றனவாம். மண்டலத்திலிருந்து திரட்டப்பட்ட அனைத்துத் தகவல்களும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. விரைவில் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில்.



source https://www.vikatan.com/government-and-politics/education/anna-university-gears-up-for-conducting-final-semester-exams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக