Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

`ஆர்.டி.ஐ-யில் என்னைப் பற்றிய தகவல்களை வழங்கக் கூடாது!’- கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்திருந்தது. அவர் சிறையிலடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் அடிப்படையில் சசிகலா விடுதலையாவார் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

பரப்பன அக்ரஹாரா சிறை

பா.ஜ.க நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரியின் ட்வீட்டால் கடந்த மாதம் இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், சசிகலா செப்டம்பர் இறுதியில் விடுதலையாவார் என அவருடைய வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் சமீபத்தில் கூறியிருந்தார். அதேபோல், பெங்களூருவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சசிகலா விடுதலை குறித்து கர்நாடக சிறைத்துறைக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளர் லதா பதிலளித்திருந்தார். அதில், தண்டனைக் கைதி எண் 9234 சசிகலா 2021-ம் ஆண்டு, ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அபராதத் தொகையான ரூ.10 கோடியை சசிகலா செலுத்தத் தவறும்பட்சத்தில், 2022-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை நிர்வாகம் பதிலளித்திருந்தது.

Also Read: `விடுதலைக்கான விலையும்... விவகாரப் பின்னணியும்!' - சதுரங்க ஆட்டத்தில் சசிகலா

இந்தநிலையில், சசிகலா விடுதலை மற்றும் தண்டனைக் காலம் குறித்து கூடுதல் தகவல்களை நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இது தொடர்பான தகவல்களை அளிக்க பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை நிர்வாகம் தற்போது மறுப்புத் தெரிவித்திருக்கிறது. தனது தண்டனைக் காலம் மற்றும் விடுதலையாகும் நாள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல்களை மூன்றாவது நபருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியிருப்பதை இதற்குக் காரணமாக சிறை நிர்வாகம் குறிப்பிட்டிருக்கிறது.

சசிகலா

இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளருக்கு சசிகலா எழுதிய கடிதமும் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் சசிகலா, ``எனது விடுதலை மற்றும் தண்டனை விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்டு பல்வேறு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக அறிகிறேன். விளம்பரம் தேடுவது, அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் இது போன்று தகவல்கள் கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர். சட்டரீதியாக நான் விடுதலை செய்யப்படும் உரிமையைத் தடுக்கும் நோக்கிலும் சிலர் அவ்வாறு தகவல்களைக் கேட்கின்றனர்.

Also Read: சசிகலா ரிலீஸ்: `ஒரு வருடமாக எந்த பதிலும் சரியாக கிடைக்கலை!' - பெங்களூரு நரசிம்மமூர்த்தி

தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அடிப்படை உரிமையாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எனது தண்டனைக் காலம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து மூன்றாவது நபருக்குத் தகவல் அளிப்பது எனது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு உரிமையை மீறுவதாகும்.

சசிகலா கடிதம்

எனவே, எனது தண்டனைக் காலம், விடுதலையாகும் நாள் உள்ளிட்ட மற்ற விவரங்களை மூன்றாவது நபருக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்'' என்று சசிகலா வலியுறுத்தியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/sasikala-objects-sharing-details-about-her-release-under-rti

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக