Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

தஞ்சாவூர்: பண்ணைத் தோட்டத்தை மிரட்டி வாங்கிய வழக்கு... சசிகலா அண்ணனுக்கு பிடிவாரன்ட்! -நடந்தது என்ன?

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவரின் பண்ணைத் தோட்டத்தை மிரட்டி வாங்கிய வழக்கில், சசிகலாவின் மூத்த அண்ணனும், டி.டி.வி.தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேர் மீது திருவையாறு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா

தஞ்சாவூர், மேலவஸ்தாசாவடியில் வசித்துவருபவர் சுந்தரவதனம். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன், டி.டி.வி தினகரனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சுந்தரவதனத்தின் மீது நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறபித்திருப்பது சசிகலா குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் தெற்கு வீதிப் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்திவருபவர் மனோகரன். இவருடைய மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மனோகரன், தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள அம்மன்பேட்டை, ஆற்காடு கிராமத்தில் 4.84 ஏக்கர் பரப்பில் நிலம் வாங்கி அதில் பண்ணைத் தோட்டம் அமைத்து விவசாயம் செய்துவந்தார்.

சசிகலா கணவர் நடராஜனுடன் சுந்தரவதனம்

இந்தநிலையில் பசுமையான அந்தப் பண்ணைத் தோட்டத்தை சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், `நான் வாங்கிக்கொள்கிறேன்’ என்று விலைக்குக் கேட்டதாகக் கூறப்படுகிறது. மனோகரன், `பண்ணைத் தோட்டத்தை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியிருக்கிறார். ஆனால் சுந்தரவதனம், குறிப்பிட்ட அந்தப் பண்ணைத் தோட்டத்தைக் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்ததுடன், மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து பயந்துபோன மனோகரன், தஞ்சையின் பிரபலமான டிம்பர் டிப்போவின் உரிமையாளரான முருகராஜிடம் இடத்தை விற்க முடிவு செய்ததுடன், ரூ. 65 லட்சத்துக்கு விலை பேசி அட்வான்ஸாக ரூ.15 லட்சம் பெற்றிருக்கிறார். மேலும், நம்பிகையின் பெயரில் அசல் பத்திரங்களையும் கொடுத்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மனோகரன்

இந்தத் தகவல் சுந்தரவதனத்துக்குத் தெரியவர, உடனே டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜிடம் பேசி, பத்திரத்தை வாங்கியிருக்கிறார். மேலும், அந்த இடத்தைத் தங்களுக்கு விற்க வேண்டும் எனக் கூறி மனோகரன், அவர் மனைவி வளர்மதி மற்றும் குடும்பத்தினரை 2008-ம் ஆண்டு காரில் கடத்தி சென்று மிரட்டியிருக்கிறார்.

இதனால் பயந்துபோன மனோகரன், தனது நிலத்தை சுந்தரவதனத்துக்கு தஞ்சாவூர், கரந்தை பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். அதன் பிறகே அனைவரையும் விடுவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மனோகரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் புகாரை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சுந்தரவதனம்

இதையடுத்து 6.10.2015-ம் ஆண்டு, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் தனது இடத்தை மிரட்டி வாங்கிக்கொண்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார் மனோகரன். அதை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து திருவையாறு நீதிமன்றத்தில் விசாரிக்கவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

பின்னர் சுந்தரவதனம் உள்லிட்டவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், கடந்த 1.2.2019 நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதன் பிறகு இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், வழக்கில் யாரும் ஆஜராகாததால் கடந்த மாதம் 3-ம் தேதி நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவதனம், ராஜேஸ்வரன், முருகராஜ், மதியழகன் முருகன், ராஜசேகர், சங்கர், ஜஸ்டின் ஆபிரகாம், சிவசங்கர் தர்மலிங்கம், மோகன் குமார் உள்ளிட்ட 11 பேர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்ததுடன், வழக்கை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீதி

அப்போதும் சுந்தரவதனம் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜாராகவில்லை. இதையடுத்து போலீஸார், 11 பேரும் தலைமரைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து அக்டோபர் 10-ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்திருக்கிறார். இந்தநிலையில் இந்த வழக்கில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தால் பாதிக்கப்பட்ட மனோகரனுக்கு ஆதரவாக அறப்போர் இயக்கத்தினர் களமிறங்கியதுடன், இந்தத் தகவலை ஊடகங்களுக்கும் தெரிவித்தனர்.

மனோகரன் தரப்பில் கூறுகையில், ``சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தால் நாங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. எங்களை மிரட்டி இடத்தை எழுதி வாங்கி, பத்திரம் செய்து கொண்டார். இதனால் பொருளாதாரரீதியாகவும் பல கஷ்டங்களை சந்தித்ததுடன், தொடர்ந்து மன உளைச்சலையும் அனுபவித்துவருகிறோம். நிச்சயம் அதற்கான நீதி கிடைக்கும்” என நம்புவதாகத் தெரிவித்தனர்.

சுந்தரவதனம்

சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகவிருக்கிறார் என்று பேசப்பட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தினகரன் தனி விமானத்தின் மூலம் டெல்லி சென்றதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சசிகலாவின் அண்ணனும், டி.டி.வி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/arrest-warrant-issued-against-sasikala-brother-sundaravadhanam-in-land-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக