வேலூர் மாவட்டம், அல்லேரி மலைப்பகுதியில், சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான்கு நாள்களுக்கு முன்பு அணைக்கட்டு போலீஸார் சென்றனர். அவர்கள்மீது சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த 30 பேர் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவத்தில், படுகாயமடைந்த 2 போலீஸ்காரர்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, எஸ்.பி பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் எஸ்.பி-க்கள், டி.எஸ்.பி-க்கள் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் 5 பிரிவுகளாகப் பிரிந்து சாராயக் கும்பலைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
அல்லேரி மலையில் முகாம் அமைத்தும் பைனாகுலர், ஹெலிகேம் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சாராயக் கும்பலும், அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களும் போலீஸாருக்குப் பயந்து ஊரையே காலி செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார்கள். மலையில் உள்ள வீடுகளில் ஒருவர்கூட இல்லை. இதனிடையே, தேடுதல் வேட்டையின்போது போலீஸாரை எச்சரிக்கும்விதமாக சாராய கும்பல் மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபடி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
Also Read: சென்னை: `போலீஸ் வருது; ஓடிடு மருமகனே' - விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலை!
பிரச்னையின் வீரியத்தை உணர்ந்தாலும், சாராயக் கும்பல் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டறிய முடியாமல் போலீஸார் திணறிவருகிறார்கள். அதேசமயம், இந்த விவகாரத்தில் போலீஸார் உண்மைச் சம்பவத்தை மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுசம்பந்தமாக, வேலூர் காவல்துறை தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், குடும்பத்தினர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தாக்குதல் நடத்திய சாராய கும்பல் சரண்டராகும் முடிவுக்கு வந்துள்ளது.
அதன்படி, முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட சாராயக் கும்பலைச் சேர்ந்த கணேசனும், அவரது உறவினர் துரைசாமியும் வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு முன்னிலையில் நேற்று இரவு சரணடைந்தனர். அவர்களை கைதுசெய்த போலீஸார் மற்றவர்களைப் பிடிக்கவும் அணைக்கட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதனிடையே, சாராயக் கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் கலக்கமடைந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/two-surrendered-in-vellore-over-attack-on-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக