Ad

புதன், 2 செப்டம்பர், 2020

நெல்லை: கொரோனா முறைகேடு - ரூ.1 கோடி கேட்டு அரசு மருத்துவமனை மீது வழக்கு!

நெல்லை சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்தவர், சிவசுப்பிரமணியன். 35 வயதான அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்குக் கடந்த ஜூன் 6-ம் தேதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற சிவசுப்பிரமணியன்

அதனால், அவருக்கும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிவசுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த நிலையில், அவருக்கு மட்டும் கொரோனா இருப்பதாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால் ஜூன் 8-ம் தேதி அவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் அவரை இருசக்கர வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்து விட்டனர். அதன்படி சென்ற அவரை மூன்று மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Also Read: இரு டாக்டர்களுக்கு கொரோனா; தப்பாத ஆட்சியர் அலுவலகம்! -அதிர்ச்சிகொடுத்த நெல்லை நிலவரம்

ஆனால், கொரோனா சிகிச்சைக்கான வார்டில் படுக்கை வசதி இல்லாததால் அவரை தரையில் படுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், அவருக்கு சரிவர உணவும் கொடுக்காமல் எந்த சிகிச்சையும் அளிக்காமல் வைத்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மற்றொரு நோயாளி கொடுத்த உணவைச் சாப்பிட்டு மருத்துவமனையில் தங்கியிருந்துள்ளார்.

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ததாகச் சொல்லி 10-ம் தேதி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், தனக்கு உரிய சிகிச்சை எடுக்காமல் மீண்டும் வேலைக்குச் சென்றால் வேலை செய்யும் இடத்தில் மீண்டும் வேலை கொடுக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை அளித்த சான்றுடன் சிவசுப்பிரமணியன்

அத்துடன், தனக்கு ஒரு மாதச் சம்பளம் ரூ.6,000 மட்டுமே உள்ள நிலையில் சிரமப்பட வேண்டியதிருக்கும் எனத் தெரிவித்ததால், மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 2,000 ரூபாய் கொடுத்ததுடன், இ.எஸ்.ஐ மூலமாக விடுப்பு காலச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்து 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சிகிச்சை அளித்ததாக மருத்துவச் சீட்டு கொடுத்துள்ளனர்.

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து லாப நோக்கில் அரசு மருத்துவமனை உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதித்ததாக சிவசுப்பிரமணியன் குற்றம் சாட்டுகிறார்.

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், தன் வீட்டில் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வீட்டில் உள்ள 5 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் தெரிவிக்கிறார்.

அரசு மருத்துவமனையின் இந்த மோசடி குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தனக்கு 8-ம் தேதி பரிசோதனை செய்ததற்கான ஆவணம், வீட்டில் 8-ம் தேதி ஒட்டப்பட்ட நோட்டீஸ் மற்றும் மருத்துவமனையில் 3-ம் தேதி சேர்ந்ததாகக் கொடுக்கப்பட்ட மருத்துவச் சீட்டு ஆகியவற்றுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கறிஞர் பிரம்மா

அதில், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து மன உளைச்சலை ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/patient-sued-government-hospital-for-corona-treatment-irregularities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக