Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

``நீ ஏன் என்கூட சேர்ந்து நடிக்கிறன்னு, எஸ்.பி.பி சார் கேட்டுக்கிட்டே இருந்தார்!''- ராதிகா

எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து, அவருடன் 'கேளடி கண்மணி' படத்தில் சேர்ந்து நடித்த நடிகை ராதிகாவிடம் பேசினேன்.

''விஜய் சேதுபதி, டாப்ஸி படத்தோட ஷூட்டிங்காக ஜெய்பூர்ல இருக்கேன். எஸ்.பி.பி சாரோட உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டதுல இருந்தே மனசு கேக்கல. நேத்து அஜ்மீருக்கு ட்ரெயின்ல மூணு மணி நேரம் டிராவல் பண்ணோம். அப்போ முழுக்க முழுக்க சாரோட பாடல்கள் பற்றிதான் பேசிட்டு போனோம். கொஞ்ச நேரத்துல எஸ்.பி.பி சார் சீரியஸா இருக்கார்னு செய்தி வந்திருச்சு. எப்படியாவது பொழைச்சிருவார்னு நினைச்சேன். ஆனா, இப்படி நடந்திருச்சு. இந்த செய்தியை கேட்டதில் இருந்தே ரொம்ப வருத்தமா இருக்கு. பெரிய லெஜண்ட் அவர். கடவுள் அவருக்கு கொடுத்த வரப்பிரசாதம் அவருடைய குரல். இன்னைக்கு இவர் இல்லனாகூட இவரோட குரல் எப்போவும் நம்மகூட இருக்கும்.

ராதிகா சரத்குமார்

அவர்கூட 'கேளடி கண்மணி' படத்துல வேலைப் பார்த்ததை ரொம்ப பெரிய விஷயமா நினைக்குறேன். எஸ்.பி.பி சார் செமையா ஜோக் அடிப்பார். ரொம்ப ஜாலியான மனிதர். அவரையே கிண்டல் பண்ணிக்குவார். இந்தப் படத்துல நான் கமிட்டானப்போ, 'ராதிகா என்கூட நடிப்பீங்க'னு நம்பவே இல்ல. 'என்கூட நிஜமாவே நடிக்கப் போறீயானு' கேட்டுக்கிட்டே இருந்தார். 'நல்ல கதை சார். உங்களுக்கு என்ன சார் பிரச்னை'னு கேட்டேன். 'Why you want to act with me'னு திரும்பவும் கேட்டார். படத்துல என்னோட பேர் சாரதா டீச்சர். இந்தப் பெயரை சொல்லி என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பார்.

முக்கியமா, 'மண்ணில் இந்த காதலின்றி' பாட்டை மகாபலிபுரத்துலதான் எடுத்தோம். ஸ்பாட்ல, 'எப்படி சார், இப்படி மூச்சு விடமா பாடுறீங்கனு' ஆச்சர்யமா கேட்டேன். 'எனக்கே தெரியலனு' சொன்னார். இவர்கூட இருந்த நேரங்கள் ஜாலியா இருந்தது. நம்மகூட எஸ்.பி.பி சார் இல்லைனாலும், அவரோட பாடல்கள் மூலமா இருந்துக்கிட்டே இருப்பார்.

எஸ்.பி.பி

பெரிய மனிதருடைய இறுதி சடங்குல கலந்துக்க முடியலைனு நினைக்குறப்போ ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த நேரத்துல ஜெய்ப்பூர் ஷூட்டிங்ல மாட்டிக்கிட்டோம்னு வருத்தப்படுறேன். ரொம்ப சங்கடமா ஃபீல் பண்றேன். இறுதிசடங்குல சரத்குமார் சார் கலந்துக்குறேன்னு சொல்லியிருக்கார். இதுவரைக்கும் என்னோட மெசேஜூக்கு இருபது பேர் வரைக்கும் 'மண்ணில் இந்த காதலின்றி' பாட்டை அனுப்பிட்டாங்க. இவரோட இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, இந்தியாவுக்கே பேரிழப்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்னு எல்லா மொழிகளிலும் பாடியிருக்கார். 40,000 பாடல்கள் பாடுன மாமனிதர் எஸ்.பி.பி சார்.'' என்றார் ராதிகா சரத்குமார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-raadhika-sarathkumar-shares-s-p-balasubrahmanyam-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக