Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

``எங்களை விட்டுச்செல்ல எப்படி மனம் வந்தது பாலசுப்ரமணியம்?" - எஸ்.பி.பி நினைவுகள் பகிரும் எஸ்.ஜானகி

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு, ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் பணியாற்றிய திரைக்கலைஞர்களும் மீள முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஓர் இசை நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்ட பாடகி எஸ்.ஜானகி, அதில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாலசுப்ரமணியத்தின் திறமையைப் பாராட்டி ஊக்கம் கொடுத்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பின்னர், இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். அவை தினந்தோறும் நம் செவிகளைக் குளிர்விக்கின்றன. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவால் அதிர்ச்சியிலும் வேதனையிலும் தவிக்கும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, அவரின் மறைவு குறித்து நம்மிடம் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

``ஆந்திராவில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போது சிறுவனாக இருந்த பாலசுப்ரமணியம் மிகத் திறமையாகப் பாடினார். அவரைப் பாராட்டி, `பெரிய பாடகராக உயர்வாய்' என வாழ்த்தினேன். அதுபோலவே திறமையால் பின்னணிப் பாடகராக உயர்ந்தார். எதிர்பாராத ஆச்சர்யமாக நாங்கள் இருவரும் இணைந்து ஏராளமான சினிமா பாடல்களைப் பாடினோம். அந்தப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

ஜானகி

1980, 90-களில் ஒரே நாளில் பல பாடல்களை இணைந்து பாடினோம். அந்தக் காலத்தில் நாங்கள் சந்திக்காத நாள்கள் மிகக் குறைவே. அப்போதெல்லாம் காமெடி செய்து ஒலிப்பதிவு கூடத்தைக் கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் மீண்டும் கிடைக்காத பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும் நான் நடுவராகக் கலந்துகொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வார்.

பாலசுப்ரமணியம் உயிரிழந்த தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அழுகையை அடக்க முடியவில்லை. எங்களையெல்லாம் விட்டுச்செல்ல எப்படி மனம் வந்தது பாலசுப்ரமணியம்? நாம் இணைந்து பணியாற்றிய காலம் மீண்டும் கிடைக்குமா? அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" - என்று கண்ணீருடன் கூறினார் எஸ்.ஜானகி.



source https://cinema.vikatan.com/music/s-janaki-shares-her-memories-of-s-p-balasubrahmanyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக