ஆரோக்கியத்தையும் ஃபிட்னஸ்ஸையும் ஊக்கப்படுத்தும் `ஃபிட்னஸ் இந்தியா டயலாக்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் மாடலும் நடிகருமான மிலிந்த் சோமன் ஆகியோருடன் நேற்று உரையாடினார். தனக்கு 55 வயது என்று சொன்ன மிலிந்த் சோமனிடம், `உங்களுக்கு நிஜமாகவே அத்தனை வயதாகிறதா?' என ஆச்சர்யப்பட்டார் மோடி.
``நிறைய பேர் என்னிடம் அப்படித்தான் கேட்கிறார்கள். என் அம்மாவுக்கு 81 வயது. நான் அந்த வயதை எட்டும்போது அவரைப் போலவே ஆரோக்கியத்துடன் இருக்க ஆசைப்படுகிறேன். அம்மாதான் என் இன்ஸ்பிரேஷன் என்று அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வேன்'' என்றார் மிலிந்த்.
மிலிந்த் சோமனின் அம்மா புஷ் அப்ஸ் செய்யும் வீடியோவை யாரோ தனக்கு அனுப்பியதாகவும் அதைப் பல முறை பார்த்து வியந்ததாகவும் அந்த உரையாடலில் மோடி குறிப்பிட்டிருந்தார்.
சேலையுடன் மராத்தானில் ஓடி, வைரலான உஷா சோமனை அவள் விகடன் இதழுக்காக 2017-ம் வருடம் பிரத்யேகப் பேட்டி எடுத்திருந்தோம். அப்போது அவரது வயது 78. இன்று 81 வயதை எட்டிய பிறகும் உஷாவிடம் அந்த எனர்ஜியும் உற்சாகமும் குறையாதது பேராச்சர்யம்.
அப்போது உஷா சோமன் பகிர்ந்துகொண்ட ஃபிட்னஸ் ரகசியம் இங்கே...
உஷா சோமன்.... பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமனின் அம்மாவாகப் பலருக்கும் பரிச்சயமானவர். சமீபகாலமாக அதைத் தாண்டிய இன்னோர் அடையாளத்துடன் கவனம் ஈர்க்கிறார் உஷா.
`தி கிரேட் இந்தியா ரன்' ஓட்டத்தில் மகன் மிலிந்த் சோமனுடன், உஷா சோமனும் சேர்ந்து ஓடிய செய்தியும் படங்களும் வைரலான பிறகே, உஷாவின் ஃபிட்னஸ் வரலாறு வெளியே தெரிய வந்திருக்கிறது.
தேடிப் பிடித்துத் தொடர்பு கொண்டால், அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார் உஷா சோமன்.
``மும்பையில ஒரு காலேஜ்ல பயோகெமிஸ்ட்ரி புரஃபஸரா இருந்து ரிட்டயர் ஆனேன். வேலை பார்த்திட்டிருந்தவரைக்கும் வேலை, குடும்பம், குழந்தைங்கனு நான் எக்கச்சக்க பிசி. அப்பல்லாம் வாக்கிங் போறதைத் தவிர ஃபிட்னஸ் பத்தி நினைச்சதுகூட இல்லை. 25 வருஷங்களா வாக்கிங் போயிட்டிருக்கேன்.
ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, எனக்கு ஃபிசிக்கல் ஆக்டிவிட்டி எதுவும் இல்லையோனு தோணுச்சு. ஃபிட்னஸ் விஷயத்துல என்னை மிலிந்த்தான் என்கரேஜ் பண்ணினான். மிலிந்த் `பிங்க்கத்தான்' ஆரம்பிச்சபோது அதுல நான் வாக் பண்ணினேன். அப்புறம் ட்ரெக்கிங்ல ஈடுபாடு வந்தது. அதையும் டிரை பண்ணிப் பார்க்கலாம்னு நினைச்சேன்...'' - சொல்லும்போது குழந்தையைப் போலக் குதூகலிக்கிறார் மிஸஸ் சோமன்.
``ட்ரெக்கிங் பண்றபோது கிடைக்கிற அனுபவம் அலாதியானது. மலைகளோட உயரத்துக்கு மனதின் உற்சாகமும் உயர்வதை உணரலாம். எனக்கு இயற்கை ரொம்பவே பிடிக்கும்.
முதல் முறை ட்ரெக்கிங் போகும்போது இது நம்மால முடியுமாங்கிற சின்ன தயக்கம் இருந்தது. ஆனா, இப்போ வருஷத்துக்கு ஒருமுறை ட்ரெக்கிங் போறதைப் பழக்கப்படுத்திக்கிட்டேன். ட்ரெக்கிங்ல ஆர்வம் உள்ளவங்களை என்கரேஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போகிற அட்வென்ச்சர் கம்பெனி மூலமா ட்ரெக்கிங் போறேன்.
3rd July 2020. Celebrating 81 amazing years in the best way happy birthday Aai pic.twitter.com/fZy9GMRVZM
— Milind Usha Soman (@milindrunning) July 5, 2020
14,000 அடி உயரமுள்ள தபோவன்தான் நான் ட்ரெக்கிங் பண்ணின முதல் இடம். அடுத்த வருஷம் எவரெஸ்ட் பேஸ் கேம்ப், அதுக்கடுத்த வருஷம் அன்னப்பூர்ணா பேஸ் கேம்ப், அப்புறம் கிளிமஞ்சாரோ வரைக்கும் போனேன். ட்ரெக்கிங் பண்ணும்போது கிடைக்கிற எனர்ஜி வேற லெவல்... ட்ரெக்கிங்கும் கிட்டத்தட்ட வாக்கிங் மாதிரிதான்.
ஆனா ட்ரெக்கிங்ல சமதளத்துல நடக்க மாட்டோம். கடல்களையும் பாறைகளையும் தாண்டி நடக்க வேண்டியிருக்கும். இன்னிக்கு வாக்கிங் மாதிரியே, ட்ரெக்கிங்கும் என்னோட ஃபேவரைட் விஷயமா மாறியிருக்கு...'' என்பவரின் எனர்ஜி லெவல் மிரட்டுகிறது.
ரிட்டயர்மென்ட் என்பது அத்தனை வருடங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்கு மட்டுமல்ல, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வாழ்க்கைக்குமானதுதான். உழைப்புடன் உடற்பயிற்சி போன்றவற்றுக்கும் ஓய்வு கொடுக்க நினைப்பவர்களுக்கு மத்தியில் 60 ப்ளஸில் ஆக்டிவ்வாக மாறியது பற்றி உஷா என்ன நினைக்கிறார்?
``ட்ரெக்கிங் பத்திக் கேள்விப்பட்டபோது ரொம்ப உற்சாகமா இருந்தது. மலைகளோட படங்களைப் பார்த்தேன். அந்த இயற்கை அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. உடனே கிளம்பிடலாமானு நினைக்க வச்சது. அதுவரைக்கும் எனக்கு ட்ரெக்கிங் பத்தி எதுவும் தெரியாது. எனக்கு அப்போ வயசு 60 ப்ளஸ்.
என்கூட ட்ரெக்கிங் பண்ணப்போறவங்களுக்கு என்ன வயசு, எப்படிப்பட்ட பின்னணியிலேருந்து வரப்போறாங்கனு எந்த ஐடியாவும் இல்லை. அவங்களே என்னைக் கூட்டிட்டுப் போகத் தயாரா இருந்தபோது எனக்கென்ன தயக்கம்? நான் ட்ரெக்கிங் போகிற க்ரூப்ல இப்பவும் நான்தான் வயதில் மூத்தவள். எனக்கு அதைப் பத்தியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை.
சட்டுனு மாறும் வானிலையையும், மாறிக்கிட்டே இருக்கிற மலைகளோட உயரங்களையும், கடந்து போகிற பாதையில உள்ள தாவரங்களையும் விலங்குகளையும், பறவைகளோட சத்தங்களையும் ரசிச்சபடி நடக்கும்போது வேற எந்தச் சிந்தனையுமே தோணாது. உலகமே மறந்துடும்...'' உஷாவின் விவரிப்பில் நமக்கும் அந்த ஆர்வம் பற்றிக்கொள்கிறது.
உஷாவின் இந்த உற்சாகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அவரின் மகனும் மகள்களும்.
``எனக்கு நாலு பசங்க. மிலிந்த் தவிர எனக்கு நேத்ரா, நேதா, அனுபமானு மூணு மகள்கள். என் கணவர் சோமன் 1996-ல தவறிட்டார். நானும் என் நாலு குழந்தைங்களும் நல்ல ஃபிரெண்ட்ஸ். குறிப்பா, நானும் என் மகள்களும் ஒரே மாதிரி சிந்தனை உள்ளவங்க. எல்லாருக்கும் கல்யாணமாகி செட்டிலாயிட்டாங்க.
வாக்கிங் போறது எனக்கும் என் மகள்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆக்ஸ்ஃபாம்னு ஒரு புராஜெக்ட். ஒவ்வொரு வருஷமும் அவங்க ஒரு நிகழ்ச்சி நடத்தறாங்க. 48 மணி நேரத்துல 100 கிலோமீட்டர் தூரம் நடக்கணும். அது குழுவா சேர்ந்து நடக்கற புரோகிராம்.
நானும் என் மூணு மகள்களும் அதுல கலந்துப்போம். நேரமிருக்கும்போது மிலிந்தும் எங்கக்கூட சேர்ந்துப்பான். இன்னிக்கு நீங்க என்னைத் தேடிப் பிடிச்சுப் பேசறதுக்கும், மீடியாவுல என் பெயர் பிரபலமானதுக்கும் காரணமே என் மகன்தான். வயசைப் பொருட்படுத்தாம புதுசு புதுசான விஷயங்களை முயற்சி பண்ணுன்னு என்னை என்கரேஜ் பண்றவன் அவன்தான்...'' மீண்டும் மீண்டும் மகன் புகழ் பேசுபவர், மகனுடன் ஓடி வைரலான அந்த போட்டோ பற்றியும் விளக்குகிறார்.
``மிலிந்த் `தி கிரேட் இந்தியா ரன்'ல ஓடிட்டிருந்தான். அவன் அந்தமான்லேருந்து வந்துக்கிட்டிருந்தான். மகாராஷ்டிரா பார்டர்ல வந்திட்டிருந்தபோது நான் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பதான் மழை பெய்த ஈரத்தோடு, சுத்தமா, அழகா இருந்த சாலை என்னைக் கவர்ந்தது. நானும் என் மகனோடு சேர்த்து ஓட ஆரம்பிச்சிட்டேன். அப்ப நான் சேலை கட்டிக்கிட்டிருந்தேன். காரை ஓரமா நிறுத்திட்டு, செருப்பைக் கழற்றி வீசிட்டு, வெறும் கால்களோடு ஓட ஆரம்பிச்சேன்... அந்த போட்டோ மீடியாவுல பரவி என்னைப் பிரபலமாக்கிடுச்சு...'' என்பவரின் வார்த்தைகளில் கூச்சம்!
ஓய்வுக்காலத்தை சாபமாக நினைக்கிற சீனியர் சிட்டிசன்களே அதிகம். உஷாவுக்கோ அது வரம் என்கிறார். எப்படி?
``நான் நிறைய படிக்கிறேன். படங்கள் பார்ப்பேன். டிராவல் பண்றேன். வேலைக்குப் போயிட்டிருந்தபோது இருந்ததைவிட அதிக உற்சாகத்தோட இருக்கேன். பிஸியா இருக்கேன்.
ரிட்டயர்மென்ட் வரப்போகுதுங்கிற யதார்த்தத்தை முன்கூட்டியே ஏத்துக்கணும். அத்தனை வருஷங்கள் வேலைக்குப் போயிட்டு, திடீர்னு ஒருநாள் அந்தப் பரபரப்பு இல்லாம வீட்டுக்குள்ள இருக்கப்போறோம்கிற எதார்த்தத்தை நிறைய பேரால ஏத்துக்க முடியறதில்லை. ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, தாம் யாருக்கும் உபயோகமில்லாமப் போயிடுவோமோனு நினைக்கிறாங்க.
என்னைக் கேட்டா ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை அப்படி நெகட்டிவ்வா பார்க்க வேண்டியதில்லைனுதான் சொல்வேன். வேலைக்குப் போயிட்டிருக்கும்போது பண்ண முடியாத எத்தனையோ விஷயங்களில், பொழுதுபோக்குகளில் ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, முழுமூச்சா ஈடுபடலாம். உங்க மனசையும் நேரத்தையும் செலுத்தற மாதிரியான விஷயங்கள் அவசியம். `இத்தனை வயசுக்குப் பிறகு, என்ன செய்ய முடியும்?'னு நினைக்க வேண்டாம். ஒரு விஷயத்தை முயற்சியே பண்ணாம, அது முடியுமா, முடியாதாங்கிற முடிவுக்கு வர்றது சரியா இருக்காது.
It's never too late.
— Milind Usha Soman (@milindrunning) May 12, 2019
Usha Soman, my mother.
80 years young.#mothersday #love #mom #momgoals #fitwomen4fitfamilies #fitness #fitnessmotivation #healthylifestyle #fitterin2019 #livetoinspire make every day mother's day!!!!! pic.twitter.com/7aPS0cWxlR
Also Read: அப்பப்போ சிக்ஸ் பேக், அடிக்கடி சைக்ளிங் - ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ் சொல்லும் நடிகர் நகுல்
ஒரு ரகசியம் சொல்லவா? இளமைங்கிறது வயசு சம்பந்தப்பட்டது இல்லை. மனசு சம்பந்தப்பட்டது. நீங்க இளமையா இருக்கிறதா உங்க மனசு நம்பணும். அதுதான் முக்கியம்.
நாளையைப் பத்திக் கவலைப்படாதீங்க. அது நிச்சயமில்லாதது. இன்னிக்கு... இந்த நிமிஷம்தான் நிஜமானது. அந்த நிஜப்பொழுதை ரசிச்சு வாழப் பழகுங்க...''
சந்தோஷ வாழ்க்கைக்கான சீக்ரெட்ஸ் சொல்பவரிடம் அந்தக் கேள்வியையும் தவிர்க்க முடியாமல் கேட்டோம்.
ஹவ் ஓல்டு ஆர் யூ மேடம்?
``78 இயர்ஸ் ஓல்டு'' எனப் பதில் வந்தது.
இப்போது 81-லும் உற்சாகம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் உஷா.
source https://www.vikatan.com/health/fitness/milind-somans-mother-usha-soman-shares-her-fitness-secrets
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக