Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

`இது ஹாலிவுட் படம்தானே?' - விமானப்படை விளம்பர வீடியோவால் சிக்கிய சீன ராணுவம்

உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாகக் கருதப்படும் சீனாவின் பீப்புள்ஸ் லிபரேஷன் ஆர்மி (PLA), தனது விமானப்படை குறித்த வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. சீனாவின் மிகப்பிரலமான சமூக வலைதளமான வீபோ-வில் (Weibo) அந்த வீடியோ வைரலானது. 47.2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பரவலாகப் பார்க்கப்பட்ட அந்த வீடியோவில், ஹாலிவுட் படங்களின் காட்சிகள் சில இடம்பெற்றிருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.

சீனா வெளியிட்ட வீடியோ

சீன விமானப்படையின் சாகசங்களைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், தீவு ஒன்றின் படைத்தளத்தைக் குறிவைத்து அந்நாட்டுப் படைகள் தாக்கி அழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் நிலையில், அந்நாட்டுக்குச் சொந்தமான தியாகோ கார்ஸியா (Diego Garcia) படைத்தளத்தைப் போன்றதொரு தளம் சீன விமானப்படையால் தாக்கி அழிக்கப்படுவது போன்ற அந்தக் காட்சிகள்தான், தற்போது சீனாவுக்கு சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான டிரான்ஸ்பார்மர்ஸ்: ரிவென்ஞ் ஆஃப் ஃபாலென் (Transformers: Revenge of the fallen), தி ஹர்ட் லாக்கர் (The Hurt Locker) ஆகிய படங்களில் இடம்பெற்றிருந்த காட்சிகளை சீன விமானப்படை பயன்படுத்தியிருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்தனர். இதைக் குறிப்பிட்டு சீன ராணுவத்துக்கு அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சீனா வெளியிட்ட வீடியோ

`நமது படையின் திறனை அமெரிக்க படங்களின் காட்சிகளை எடிட் செய்துதான் உலகுக்குக் காட்ட வேண்டுமா?', `அமெரிக்க திரைப்படக் காட்சிகள் மூலம் நமது உள்நாட்டு விமானப்படைக்கு விளம்பரம் தேடுகிறோம். கேள்வி மட்டும் கேட்கக் கூடாது', `நம் படைகளுக்கு மரியாதை செய்யும் வகையிலான வீடியோவுக்கு நமது உள்நாட்டில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளை ஏன் பயன்படுத்தக் கூடாது' போன்ற கமெண்டுகளால் சமூக வலைதளங்களைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

Also Read: `Establishment 22' : சீனாவுக்குப் பதிலடி தந்த இந்திய ரகசியப் படை பற்றித் தெரியுமா?

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை, அமெரிக்காவுடன் மோதல் போக்கு உள்ளிட்டவைகளால் சர்வதேச அளவில் அழுத்தத்தைச் சந்த்தித்து வரும் சீனா, சொந்த நாட்டு மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே இந்த வீடியோவை வெளியிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதில் இடம்பெற்றிருந்த ஹாலிவுட் காட்சிகள், வேறுமாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்திவிட்டன என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/china-uses-hollywood-clips-to-promote-its-air-force

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக