இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக, ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு, கடந்த ஜூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கிஷோர் ஜெகநாத் சாவந்த் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், தன்னை நாட்டின் குடியரசுத் தலைவராக நியமிக்கவேண்டி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது பேசுபொருளாகியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலரின் மனுமீது, நீதிபதிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறனர்.
முதலில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியதோடு, உலகின் அனைத்து குழப்பமான சூழ்நிலைகளுக்கும் தான் பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, ``இதுவொரு அற்பமான மனு. அதோடு, நீதிமன்றத்தின் செயல்முறையை இது தவறாகப் பயன்படுத்துகிறது. மேலும், எந்தவொரு பொறுப்புணர்ச்சியும் இல்லாமல், மிக உயர்ந்த அரசியல் சாசனப் பதவிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. இவை பதிவிலிருந்து நீக்கப்பட்டது" எனக் கூறியது. அதோடு, இனிவரும் காலங்களில் இந்தப் பிரச்னை தொடர்பான அவரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
source https://www.vikatan.com/news/judiciary/environmentalist-filed-plea-in-the-supreme-court-for-to-be-appointed-the-president-of-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக