Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

`ஊரடங்கில் புதிய எண்ணெய்க் கிணறு!’- ஓ.என்.ஜி.சிக்கு எதிராகக் கொதிக்கும் சூழல் ஆர்வலர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி குத்தாலத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டும் பணியை, ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓ.என்.ஜி.சி -

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத்தெருவில் கடந்த 2 மாதங்களாக ஓ.என்.ஜி.சி.நிறுவனம் புதிதாக எண்ணெய்க் கிணறு தோண்டும் பணியைச் செய்து வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.``குத்தாலத்தில் புதிதாக எண்ணெய்க் கிணறு தோண்டும் பணி கடந்த 2 மாத காலமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. புதிய கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. எந்தவிதமான அரசு அனுமதியும் வாங்கவில்லை. 2017- ல் 110 கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கேட்டதில் குத்தாலம், பந்தநல்லூர், காளி, மாதானம் ஆகிய ஊர்களும் அடங்கும். ஆனால், இந்த ஊர்களுக்கு சுற்றுச்சூழல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசும் அனுமதி அளிக்கவில்லை. 2020 பிப்ரவரி மாதம் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. `காவிரிப்படுகையில் ஷேல், மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி கிடையாது' என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் எண்ணெய் எடுப்பதற்குத் திட்டம் போட்டு விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும், அந்த திட்டம் தொடர அனுமதி கிடையாது என்று தெளிவாகச் சொல்லியுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி -

அரசு அனுமதி வாங்காத ஓ.என்.ஜி.சி.நிறுவனம் எந்த தைரியத்தில் இந்த திட்டத்தை குத்தாலத்தில் துவங்கியுள்ளனர் என்று தெரியவில்லை. ஓ.என்.ஜி.சி. தமிழக அரசை ஒரு பொருட்டாக கருதவில்லை; மதிக்கவில்லை. இதுபோன்ற அத்துமீறலை தடுக்க, நாங்கள் நடத்திய போராட்டத்தில் 14 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். குத்தாலம் எண்ணெய்க் கிணறு அமைப்பதை நிறுத்த, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அளித்த மனு மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இதைத் தடுக்க பொதுமக்கள் கொதித்தெழுந்து போகத்தான் செய்வார்கள், அப்படிப்போனால், அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு. ஊரெல்லாம் கொரோனா முடக்கிப்போட்டுள்ள இந்த நேரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அத்துமீறலை தடுக்காத தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார். டெல்டா பகுதியில் செயல்படும் பல்வேறு அமைப்புகளும் ஓ.என்.ஜி.சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/environmental-activists-condemn-ongc-over-new-oil-well-digging-in-lock-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக