Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பொங்கல் பரிசு... தேர்தலுக்கு 'டோக்கன்' அட்வான்ஸா?! - எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?

தமிழகத்தில் உள்ள 2.6 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய தொகுப்புடன் 2,500 ரூபாயும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்காக 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது . இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொங்கல் பரிசு திட்டத்தை முதல்வர் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். வரும் ஜனவரி 04-ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்

இந்த அறிவிப்பு வெளியானதுமே, தமிழக எதிர்க்கட்சிகள், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ``கொரோனாவால் பாதிக்கப்பட்டு உணவு இன்றி, மருந்தும் இன்றி மக்கள் தவித்த நேரத்தில், குடும்ப அட்டைக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயும், அதிகபட்சமாக 7,500 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். பிறகு நிவர் புயல் பாதிப்புக்கு 5,000 ரூபாய், விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தேன். இரண்டையும் நிராகரித்து, அமைதி காத்தார் முதலமைச்சர். கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டைத் தாக்கி ஏறக்குறைய ஓராண்டு ஆகப் போகின்ற நேரத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி, “2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார். கொரோனா, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காலம் கடந்து இப்போது 2,500 ரூபாய் `பொங்கல் பரிசாவது’ கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், ``இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்து தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அ.தி.மு.க. நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக் கொள்ள முதலமைச்சர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க-வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும்.

அ.தி.மு.க-வினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் உடனடியாகத் தடுக்காவிட்டால், தி.மு.க சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

``அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கத் தமிழக அரசு தயார். அ.தி.மு.க அரசு மீது ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். பொங்கல் தொகுப்பு திட்டத்தைத் தடுக்க நினைக்கும் தி.மு.க-வின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, `` ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை அறிந்து 2,500 ரூபாய் சிறப்புத் தொகுப்பு திட்டத்தினை அறிவித்துள்ளேன். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதைப் பொறுக்க முடியாமல், எப்படியாவது இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்து பொய்யான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போதும் அதைத் தடுக்க நீதிமன்றம் சென்ற கட்சிதான் தி.மு.க. மக்களுக்கு நல்லது செய்வது தி.மு.க-வுக்குப் பிடிக்காது. இதை மக்கள் உணர வேண்டும்'' என்று பேசினார்.

கடலூர் மாவட்டத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' சுற்றுப்பயணத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலினிடம் இந்த பிரச்னை தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``இதைக் கொடுக்கச் சொன்னதே நாங்கள் தான். கொரோனா காலத்தில் குடும்ப அட்டைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். அப்போது நிதி இல்லை என்று கூறிவிட்டு. தற்போது தேர்தல் நெருங்குவதால் 2,500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார். கொடுக்கும் தொகையை நாங்கள் கூறியது போல 5,000 ரூபாயாக உயர்த்தி கொடுங்கள் என்றுதான் நாங்கள் இப்பொழுதும் தெரிவிக்கிறோம்" என்று பதிலளித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் டோக்கன் வழங்கப்படும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க தலைவர்களின் படங்கள் மற்றும் அ.தி.மு.க கட்சி சின்னம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த அந்த மனுவில், ``தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு டோக்கனில் அ.தி.மு.க தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அ.தி.மு.க-வினர் சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். இது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. இந்த டோக்கன்கள் ஆளுங்கட்சியினரால் வழங்கப்படுவதால் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையாது'' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் முறையிட்டார். அதைத் தொடர்ந்து அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Also Read: பொங்கல் பரிசு:`அப்போ பணம் இல்லை; இப்போ கடன் வாங்கித்தான் கொடுக்கிறோம்!’ - மாஃபா பாண்டியராஜன்

வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``ஒரு சில இடங்களில் ஆர்வ மிகுதியால் தலைவர்களின் படங்களோடு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலெல்லாம் முறையாகத் தான் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு தரப்பில் கொடுக்கப்படும் அதிகாரப்பூர்வமான டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும். அ.தி.மு.க தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் கொண்ட டோக்கன்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படாது. இதுகுறித்து விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும்” என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விரைவில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் தி.மு.க தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

சுற்றறிக்கை

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ``கடை நடத்தும் நிறுவனங்கள் வாயிலாக அச்சிடப்பட்ட டோக்கன்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள் டோக்கன்களை வீடுவீடாக சென்று விநியோகம் செய்யவேண்டும். பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணிகளை நியாயவிலைக்கடை பணியாளர்கள் மட்டுமே மேற்கொள்ளவேண்டும். வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது" என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-over-tamil-nadu-governments-pongal-gift-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக