Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

ஆர்.டி.ஐ: `ஆங்கிலத்தில் தகவல் கேட்டால், இந்தியில் பதிலளிக்கிறார்கள்!’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் தகவல் கேட்டு விண்ணப்பித்தால், இந்தியில் பதில் தருவதாக ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள்.

ஆர்.டி.ஐ.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மத்திய, மாநில அரசு அலுவலகங்களிருந்து தகவல்கள் கேட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்டால் அதே மொழிகளில் பதிலளிப்பது நடைமுறையில் உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் பதில் அளிப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் மத்திய அரசு அலுவலகங்களில் கேள்விகளை இணையதளம் வழியாக கேட்கும் வசதியும் உள்ளது.

கடந்த வருடம் ஆர்.டி.ஐ மூலம் மத்திய அரசின் நீராற்றல் துறையிடம் தகவல் கேட்ட தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனுக்கு இந்தியல் பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் மத்திய அரசுத் துறையில் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, "கடந்த 10 ஆண்டுகளில் ரயில் மோதி எத்தனை யானைகள் நம் நாட்டில் இறந்துள்ளது என்பதை மண்டல வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் ரயில்வே வாரியத்திடம் தகவல் கோரியிருந்தேன். அதில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைகளுக்கு முரணாக வட மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான ரயில்வே அலுவலகங்கள் இந்தியில் பதிலளித்துள்ளன.

பாண்டியராஜா

நான் ரயில்வே வாரியத்திடம் கேட்ட கேள்விகளை உடனே தென்னக ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களுக்கு பகிர்ந்தளித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு பதில் அளிக்கும்படி ரயில்வே வாரியம் கூறியிருந்தது.

ஆங்கிலத்தில் கேள்வி கேட்டிருந்ததால் தென் மாநிலங்களைச் சார்ந்த அனைத்து ரயில்வே அலுவலங்களிலிருந்து வந்த பதில்கள் ஆங்கிலத்தில் இருந்தன. ஆனால், பிரதமர் மோடியின் தொகுதியிலுள்ள வாரணாசி ரயில்வே கோட்டம், நாட்டின் தலைநகரம் டெல்லி ரயில்வே கோட்டம், பிலாஸ்பூர் கோட்டம் ஆகியவை நடைமுறைக்கு முரணாக இந்தியில் பதில் அளித்திருந்தனர். இது விதிகளுக்கு முற்றிலும் முரணானது. தகவல்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் தாருங்கள் என்று மேலதிகாரிகளுக்கு அப்பீல் செய்துள்ளேன்" என்றார்.

மத்திய அரசு தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தியை திணிப்பதாக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்புவதாக கூறுகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். சில தினங்களுக்கு முன் கோவிட் தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மொழிகள் இடம்பெற்றிருந்த நிலையில் தமிழ் இடம்பெறாதது தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மொழி

அதுபோல் தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஆங்கிலத்தில் கோரிக்கை மனுக்களை அனுப்பினால் மத்திய அமைச்சக அதிகாரிகள் இந்தியில் பதில் அளிக்கிகின்றனர் என்று தமிழக எம்பிக்கள் புகார் எழுப்பிய நிலையில், தற்போது இந்தப்புகார் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/social-activities-condemned-answer-in-hindi-for-rti-questions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக