Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அரியலூர்: `உங்களுக்கு இந்தி தெரியுமா?!’ - லோன் கேட்டு சென்ற மருத்துவரை அதிரவைத்த வங்கி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர் லோன் கேட்டு சென்ற நிலையில், வங்கி மேலாளர், `உனக்கு ஹிந்தி தெரியுமா?’ என கேட்க, `தெரியாது’ என கூறியதால் `லோன் கிடையாது’ என அந்த டாக்டரை திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பேங்க்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளார். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தபள்ளம். அப்பகுதியில் பல்வேறு இடங்களில் டாக்டர் பாலசுப்ரமணியனுக்கு சொந்த நிலம், வீடு உள்ளிட்டவை உள்ளது. மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்து அதற்கான ஆவணங்களை தயார் செய்து எடுத்து கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு லோன் கேட்டு கடந்த வாரம் சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த மேலாளர் உங்களுக்கு இந்தி தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியன் எனக்கு இந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என கூறிய நிலையில் உங்களுக்கு லோன் கிடையாது என திருப்பி அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

டாக்டர் வீடு

இது குறித்து டாக்டர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம், ``ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள எனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான மொத்த மதிப்பீடு உள்ளிட்டவற்றை தயார் செய்து எடுத்து கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் லோன் கேட்பதற்காக சென்றேன்.

பேங்கில் பணியிலிருந்த மேலாளரிடம் நான் என்னிடம் இருந்த ஆவணங்களை காண்பித்தேன். அதனை அவர் வாங்கி பார்க்காமலேயே, `டூ யூ நோ ஹிந்தி?’ என ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு நான் எனக்கு இந்தி தெரியாது. ஆனால் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் கூறினேன். அதற்கு அவர், `ஐ யம் பிரம் மகராஷ்டிரா. எனக்கு தமிழ் தெரியாது ஒன்லி ஹிந்தி மட்டுமே தெரியும். லாங்வேஜ் பிராபளம்’ என ஆங்கிலத்தில் கூறினார்.

லோன் கேட்டு சென்ற டாக்டர் பாலசுப்ராணியன்

`நான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன்’ என கூறி மீண்டும் என்னிடம் இருந்த ஆவணங்களான பேங்க் பாஸ்புக் உள்ளிட்டவற்றை காண்பித்தேன். ஆனால் அந்த மேலாளர் என்னிடம் இந்தி குறித்தே பேசி கொண்டிருந்ததுடன் `லோன் கொடுக்க முடியாது’ என கூறி திருப்பி அனுப்பிவிட்டார். எனக்கு அந்த மேலாளர் லோன் கொடுக்காமல் போனதில் எந்த பிரச்னையும் இல்லை. நான் தமிழ் என்று தெரிந்ததுமே என்னை உட்கார சொல்வதற்கு கூட அந்த அதிகாரிக்கு மனம் இல்லை. அவருக்கு தான் தமிழ் தெரியாது பேங்கில் இருந்த ஒருவருக்கு கூடவா தமிழ் தெரியாது. அவர்களையாவது என்னிடம் பேச வைத்திருகலாம். அதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலைக்கு வந்திருக்கும் அவர் இந்தியை பற்றி ஏன் பேச வேண்டும் என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.

இந்தி தெரியாது என்பதை காரணம் காட்டி என் அடிப்படை உரிமையான லோன் கொடுப்பதை மறுத்தது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் சம்மந்தபட்ட பேங்க் மேலாளரிடம் மான நஷ்ட ஈடு கேட்டு என்னுடைய வழக்கறிஞர் சிவராமகிருஷணன் மூலமாக நோட்டிஸ் அனுப்பியுள்ளேன். மேலும் நீதிமன்றத்திற்கும் செல்ல இருக்கிறேன்.

அந்த மேலாளர் நடந்து கொண்ட விதம் ஒரு வேளை எனக்கு இந்தி தெரிந்திருந்தால் லோன் கொடுத்திருப்பார் என்பதை தான் உணர்த்தியது. நான் அவரிடம் நஷ்ட ஈடு வாங்க வேண்டும் என்பதற்காக நோட்டீஸ் அனுப்பவில்லை. இராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரம் மண்ணில் இருந்து கொண்டு இந்தி தெரியாது என்பதால் என்னவென்று கூட விசாரிக்காமல் கடன் கிடையாது என திருப்பி அனுப்பிவிட்டார்.

இப்பகுதியில் விவசாய தொழிலாளர்கள் நிறைந்ததுள்ளனர். ஒரு டாக்டரான என்னிடமே பேங்க் மேலாளர் இப்படி நடந்து கொண்டார் என்றால் விவசாய தொழிலாளர்கள் மற்றும் படிக்காத ஏழை மக்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை நினைக்கும் போதே மனம் பதை பதைக்கிறது.எனவே அந்த மேலாளருக்கு பாடம் புகட்டி தமிழ் மற்றும் தமிழகின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நோட்டிஸ் அனுப்பினேன்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வங்கி தரப்பில் பேச முயன்றோம். ஆனால் அவர்கள் `இது தொடர்பாக நாங்கள் பேச முடியாது’ என மறுத்து விட்டனர். வங்கி தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளித்தால், அதனை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/news/general-news/in-ariyalur-doctor-says-his-loan-was-rejected-just-because-he-dont-know-hindi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக