Ad

சனி, 19 செப்டம்பர், 2020

பாம்பன்: 400 கிலோ மஞ்சள்; 750 கிலோ கடல் அட்டை - படகு பழுதானதால் சிக்கிய கடத்தல்காரர்கள்!

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட அரிய வகை கடல் அட்டை மூட்டைகள் மற்றும் விரலி மஞ்சள் மூட்டைகள் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸாரிடம் சிக்கிய கடத்தல் மஞ்சள் - கடல் அட்டை.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நடந்துவந்த போதைப் பொருள் கடத்தல் கடந்த சில நாள்களாக சமையலுக்கு பயன்படும் மஞ்சள் கடத்தலாக மாறியுள்ளது. இலங்கையில் நிலவும் மஞ்சள் தட்டுப்பாடு மற்றும் அதன் அதிகபட்ச விலை ஆகியன இந்த கடத்தலுக்குக் காரணங்களாக உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் துபாயில் இருந்து அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 33,000 கிலோ மஞ்சள், மன்னார் கடல் பகுதியில் நின்ற படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 305 கிலோ மஞ்சள் மற்றும் இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பகுதியில் ஆயிரம் கிலோ கடத்தல் மஞ்சள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிடிபட்ட நாட்டுப்படகு

இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு தனுஷ்கோடி வழியாக நாட்டுப்படகு ஒன்று சென்றுள்ளது. நேற்று மாலை பாம்பன் குந்துகால் பகுதியில் சென்ற அந்த படகின் எஞ்சினில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், படகினை தொடர்ந்து இயக்க முடியாமல் அந்த படகில் இருந்தவர்கள் தத்தளித்தனர்.

Also Read: கோவை: உள்ளாடைகளில் 6 பாக்கெட்கள்... `Paste form’ முறையில் தங்கம் கடத்தல்! - சிக்கிய தம்பதி

இந்நேரத்தில் குந்துகால் கடல் பகுதியில் ரோந்து சென்ற தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் நடுக்கடலில் தனியாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகைப் பார்த்துள்ளனர். அவர்கள் அந்த படகின் அருகில் சென்று சோதனை செய்த போது, அந்த படகினுள் சமையலுக்கு பயன்படுத்தும் 400 கிலோ விரலி மஞ்சள் மூட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட 750 கிலோ அரிய வகை கடல் அட்டை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படகுடன் அவற்றை பறிமுதல் செய்த மெரைன் போலீஸார், படகில் இருந்த கடத்தல்காரர்கள் மூன்று பேரையும் கைது செய்து கரைக்குக் கொண்டுவந்தனர்.

மஞ்சள் - கடல் அட்டையுடன் போலீஸார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மலையாண்டி, திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் பாலத்தின் ஆகியோர் என தெரியவந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடி என்பவரது பதிவு எண் இல்லாத நாட்டுப்படகில் மஞ்சள் மற்றும் கடல் அட்டை மூடைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. ரூ 50 லட்சம் மதிப்புள்ள இவற்றை இலங்கையில் கொடுத்துவிட்டு இதற்கு மாற்றாக தங்கம் கடத்திவர அவர்கள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/pamban-marine-police-arrests-3-for-trying-to-smuggle-300-kg-turmeric-to-sl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக