Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

``ராஜமெளலியின் `RRR' படத்துல நான் வில்லனா?!'' - நிதின் சத்யா

``நடிகர் எப்போ தயாரிப்பாளர் ஆனார்?"

``எங்க வீட்டுல யாருமே சினிமாவை பின்னணியா கொண்டவங்க கிடையாது. லண்டன்ல எம்.பி.ஏ முடிச்சிட்டு இந்தியா வந்தேன். படிச்சது பிஸினஸ் மார்க்கெட்டிங். ஆனா, சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டு முதல்ல நடிக்க வந்தேன். இருந்தும், எனக்கு புரொடக்ஷன்ஸ் பக்கம் எப்போதும் ஆர்வம் அதிகம். நான் நடிச்ச படங்கள்லகூட புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் ஏதாவது இருக்கானு பார்த்து செஞ்சிக்கிட்டு இருப்பேன். எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா `ஆர்.கே.நகர்' படத்துல வேலை பார்த்திருக்கேன். அப்புறம், நானே புரொடியூசரா படங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன். `ஜருகண்டி' படத்துக்குப் பிறகு இப்போ `லாக்கப்' தயாரிச்சிட்டேன். என்னோட வளர்ச்சி அடுத்த லெவலுக்கு போகணும்னு நினைச்சு இறங்கினதுதான் புரொடியூசர். அதே மாதிரி ஒரு நாலு பேர் வாய்ப்பு கொடுத்தனால சினிமாவுக்கு நடிகனா வந்தேன். நம்ம மத்தவங்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்னு தோணுச்சு. இந்த விஷயத்துகாக ரெடியானதுதான் என்னோட புரொடக்‌ஷன்ஸ் கம்பெனி. புதுசா வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறேன். ஏன்னா, அப்போதான் தெரிஞ்சோ தெரியாமலோ வரலாற்றுல நாளைக்கு என் பேரும் இருக்கும். இந்த ஒரு நப்பாசைல தொடங்கி இப்போ குதிரை மேல சவாரி பண்ணிட்டு ஓடிக்கிட்டு இருக்கேன். எப்போவுமே என்னோட நண்பர்கள் வட்டாரம் எனக்கு பெரிய பலம். `ஜருகண்டி' படத்துல ஜெய் ஹீரோவா நடிச்சிக் கொடுத்தான். `லாக்கப்' படத்துல வைபவ் மற்றும் வெங்கட்பிரபு நடிச்சிருக்காங்க. அதே மாதிரி ஃபேமிலி பெம்பர்ஸும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க.''

``சின்ன பட்ஜெட் படங்கள்ல இருந்து தொடங்கலாம்ன்றது உங்க திட்டமா?"

நிதின் சத்யா, வைபவ், வாணி போஜன்

``பட்ஜெட் எப்பவும் ஒரு விஷயமே இல்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் கன்டென்ட் நல்லாயிருக்கணும். `இந்தயொரு கதைக்கு ஓப்பனிங் ஷாட்ல 5 பேர் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறாங்க'னு கதைக்கு தேவைப்பட்டுச்சுனா கண்டிப்பா பண்ணுவேன். கதை, கதையம்சம், கதை சார்ந்த விஷயங்கள் இதுதான் முக்கியம். நல்ல கதை மற்றும் தரமான படமா என்பதைத்தான் முதல்ல பார்ப்பேன். பேன் இந்தியா மற்றும் இன்டர்நேஷனல் அளவுக்கு தரமான படங்கள் எடுக்கணும்னு ஆசைப்படுறேன். கிராபிக்ஸ் அனிமேஷன்ஸ், கிட்ஸ் படங்கள்னு வித்தியாசமான ஜானர் படங்களும் முயற்சி பண்ணணும்னு ஆசைப்படுறேன்.''

`` `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' வாய்ப்பு எப்படி வந்தது?"

``சினிமாவுல என்னோட கரியர் நல்லாவே ஆரம்பமாச்சு. எங்கேயாவது ஆடிஷன் நடந்தா கலந்துக்குவேன். இப்படியிருந்தப்போ `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தோட ஆடிஷனுக்கும் போயிருந்தேன். இந்தப் படத்துல நான் பண்ணுன ரோல் வேறொரு முகம் தெரிந்த பெரிய நடிகர் நடிக்குறதா இருந்தது. ஆனா, பி.ஆர்.ஓ நிகில், `இந்த ரோல் நிதின் பண்ணட்டும்'னு பேசி வாங்கிக் கொடுத்தார். `ஆழ்வார்ப்பேட்ட ஆண்டவா' பாட்டோட ஷூட்டிங் நாலு நாள் நடந்தது. நாலு நாளும் கமல் சார்கூட இருந்தது பெரிய சந்தோஷமா இருந்தது. இது நடந்தப்போ சினிமாவுக்கு கடைக்குட்டி நான். முக்கியமா, டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு நடன இயக்குநரா முதல் பாட்டு இது. அதனால, மறக்க முடியாத நினைவான படமிது. கமல் சாரும் ரொம்ப கம்ஃபர்ட் ஸோன்ல என்னை வெச்சிருந்தார்.''

`` `சத்தம் போடாதே' படத்துல கொடூரமான வில்லனா நடிச்சிருந்தும் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள் தொடர்ந்து நடிக்காதது ஏன்?"

சத்தம் போடாதே

``சில படங்கள் அமையுறது பொறுத்து, நாம எந்தத் திசையை நோக்கி போறோம்கிறது தீர்மானிக்கப்படும். இந்தப் படம் முடிஞ்சவுடனே ஹீரோவுக்கான நிறைய வாய்ப்புகள் வந்தது. சில தரமான படங்கள் வந்தது. சிலது பெரிய தோல்வியும் அடைஞ்சது. இருந்தும், சினிமால கத்துக்கணும்னு எல்லா ரோல்லயும் நடிக்க ஆரம்பிச்சேன். வில்லன், ஹீரோ, கேரக்டர் ஆர்டிஸ்ட், காமெடினு எல்லாமே ட்ரை பண்ணிட்டேன். இருந்தும், `சத்தம் போடாதே' மாதிரியான தரமான கதாபாத்திரம் இன்னும் எனக்கு அமையல. சொல்லபோனா இந்தப் படத்துக்காக வசந்த் சார் கதை எழுதிட்டு இருந்தப்போ வாய்ப்பு கேட்டேன். அவருக்கும் கதைக்கு புது வில்லன் தேவைப்பட்டார். `ஆசை' படத்துல பிரகாஷ்ராஜ் அறிமுகப்படுத்துன மாதிரியே என்னையும் அறிமுகம்படுத்தணும்னு நினைச்சார். எப்படி நடிக்கணும், லைட் எங்கே வாங்கணும், ரியாக்‌ஷன் எப்படி கொடுக்கணும், டப்பிங்ல எப்படி பேசணும்னு எதுவும் தெரியாம பண்ண படமிது. எல்லாத்தையும் வசந்த் சார்தான் சொல்லிக் கொடுத்தார். அதே மாதிரி படத்துல பிரித்விராஜ் மற்றும் பத்மபிரியானு ரெண்டு நல்லா நடிக்க தெரிஞ்ச ஆர்டிஸ்ட் இருந்தும்கூட வசந்த் சாரின் ஆளுமை அதிகமா இருக்கும். ஆனா, இவங்க ரெண்டு ஆர்டிஸ்ட்டும் எனக்கு நல்லா நடிக்க ஒத்துழைச்சாங்க. தட்டிக்கொடுத்து வேலை வாங்குனாங்க.''

``ராஜமெளலியின் `RRR' படத்துல நீங்க வில்லனா நடிக்கிறீங்கனு ஒரு தகவல் ஓடுதே?"

``யார், இதை கிளப்பி விட்டாங்கனு தெரியல. எனக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்ல. ஆனா, ராஜமெளலி சார் வாய்ப்பு கொடுத்தா நான் அதுல நடிக்க ஓடிருவேன். அதுல எந்த சந்தேகமும் இல்ல.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-nithin-sathya-speaks-about-his-production-company-and-cinema-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக