கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் உழைப்பால் உயர்ந்தவர் என்று அனைவராலும் புகழப்படுகிறார். வசந்தகுமார் மாணவர்களிடமும், மக்களிடமும் காட்டிய அன்பு குறித்து அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை நம்மிடம் பேசினார்.
``வசந்தகுமார் எங்க ஊர்க்காரர் என்பதோட என்னோட நெருங்கிய நண்பர். அகஸ்தீஸ்வரம் கவர்மெண்ட் பள்ளியில படிச்சாரு வசந்தகுமார். அப்புறம் விவேகானந்தா காலேஜில படிச்சவரு, இந்து காலேஜில எம்.ஏ படிச்சார். சென்னைக்கு போனவரு அங்க பன்னீர்தாஸின் வி.ஜி.பி நிறுவனத்தில வேலை செய்தார். கொஞ்சம் நாள்ல மேனேஜர் ஆயிட்டார். அங்க இருந்து வெளியேறினவர், தனிக்கடை ஆரம்பிக்கணும்னு வீட்ல வந்து சொன்னாரு. பன்னீர்தாஸ் எனக்கு எலக்ஷனுக்கு இருவத்தஞ்சாயிரம் ரூபா செலவழிச்சிருக்காரு. அவர எதித்து கடைபோட நான் ஏற்பாடு பண்ணமாட்டேன். அவன மறுபடியும் அங்கேயே வேலைபார்க்க வேணும்ன நான் ஏற்பாடு பன்னுறேன்ன்னு அவங்க அண்ணன் குமரி அனந்தன் சொல்லிட்டாரு. அதனால ரெண்டு மாசம் இங்கேயே இருந்தாரு.
அவங்க மாமனார் கன்னிகா ஹோட்டல் வச்சிருந்தார். அங்க காலேஜ் ஸ்டூடண்ட் வந்து சப்பிடுவாங்க. அங்க வேலைக்குப்போன வசந்தகுமார் மாணவர்களுக்கு சர்வ் பண்ணுவார். மிச்சம் மீதி மீன் இருந்தா ராத்திரி வந்து எங்களுக்கிட்ட சொல்லுவாரு. நாங்க போய் சாப்பிடுவோம். இப்பிடியே இருந்தா சரியாவாதுன்னு அவங்க அப்பா ஒரு விளைய ஒத்திக்கு வச்சு பத்தாயிரம் ரூபா வாங்கி அவர்கிட்ட கொடுத்து சென்னைக்கு அனுப்பி விட்டார். அங்க போய் திருச்சியில இருந்து ஒருத்தரோட சேர்ந்து கடையை தொடங்கினார். இவங்க அப்பா எனக்ககிட்ட வந்து ’சென்னைக்கு போனவன் என்ன ஆனான்னு பாக்காண்டமா’ன்னு கேட்டார். நான் சென்னைக்கு போனேன். ஒரு லாட்ஜில தங்கியிருந்த வசந்தகுமார், அங்கேயே சமைச்சு சாப்பிட்டு கடைக்குபோனார். எனக்க சாப்பாட்டுக்கு லாட்ஜில சொல்லிட்டுப் போனார். அப்ப ஒரு ஸ்கூட்டியில கம்பெனிக்கு போவோம்னு கூட்டிட்டு போனார்.
பேவர்லுவாங்கிற கம்பெனி வாட்ச் அப்ப பேமஸ். அதேமாடல்ல விலை குறைவா வேறு ஒரு கம்பெனி வாட்ச் வித்தார். டி.வி வித்ததுலதான் பிக்கப் ஆனார். அதிக டி.வி விக்கிறவங்களுக்கு ஒரு கார் பரிசுன்னு சால்டயர்ங்கிற கம்பெனி அறிவிச்சது. அந்த காரை வாங்கிறதுக்காக கடுமையா உழைச்சார். கார் பரிசு இவருக்கு கிடைச்சது. அந்த காரை வசந்தகுமார் வாங்குற சமயத்துல நானும் குமரி அனந்தனும் பேனோம். நாகர்கோயில்ல கடை தொடங்கும்ப ஊர்ல எல்லாரையும் கூப்பிட்டார். படிக்கிற பிள்ளைங்ககிட்ட போட்டி மனப்பான்மையை வளர்க்கணும்ங்கிறதுக்காக ஃபஸ்ட், செக்கண்ட், தேர்ட் வர்ற மாணவர்களுக்கு புத்தக பை பரிசா கொடுப்பார். விளையாட்டுல ஆர்வம் இருக்கிற பசங்களுக்கு அதை ஊக்குவிக்கும்விதமா பரிசு கொடுப்பார்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``ஒரு முறை மதுரையில இருந்து கன்னியாகுமரிக்கு கார்ல வந்திட்டு இருந்தோம். திருநெல்வேலி வரும்ப ஸ்கூல் பிள்ளைங்க வழிமறிச்சு ஸ்கூல் டே நடத்தணும்னு சொன்னாங்க.. உடனே பத்தாயிரம் ரூபா எடுத்து கொடுத்தார். பல இளைஞர்களுக்கு கம்பெனிகள்ல வேலை வாங்கிகொடுத்திருக்கார். டெல்லியில கம்பெனிகளுக்கு போனா, ’படிச்ச இளைஞர்கள வேலைக்கு வைக்கணும் சார். குறைஞ்ச சம்பளத்தில நான் வேலைக்கு ஆள் அனுப்புறேன்னு சொல்லுவார். படிச்ச இளைஞர்களின் அப்ளிகேஷனை சென்னை ஆப்பீஸ்ல ஏற்கனவே வாங்கி வச்சிருக்கிறதுனால அதில தகுதியானவங்கள அந்த கம்பெனிக்கு அனுப்பி வைப்பார்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vasanthakumar-friend-shares-about-his-growth
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக