கொரோனா சூழலில்... சரி அதை விடுவோம். எல்லோரும் குறும்படம் என எடுத்துக்கொண்டிருக்க, ஃபகத் ஃபாசில் & குழு வித்தியாசமாக வீட்டுக்குள்ளேயே ஒரு த்ரில்லர் சினிமாவை எடுத்திருக்கிறார்கள். ரோஷன் மேத்யூ காதலால் கசிந்துருகி மணமுடிக்கவிருக்கும் தர்ஷனா ராஜேந்திரன் சட்டெனக் காணாமல்போய்விடுகிறார். இணைய வழியில் துப்புத் துலக்குவதில் கில்லாடியான ஃபகத் ஃபாசில் அப்பெண்ணை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் ஓணம் ஸ்பெஷலாக அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் C U Soon-ன் கதை.
வங்கியில் வேலை பார்க்கும் ரோஷன் மேத்யூவுக்கு தர்ஷனாவை இணையத்தில் கண்டதும் காதல் வந்துவிடுகிறது. துபாய் என்பதால் மெல்ல மெல்ல வளரும் இந்த இணையக் காதலில், சட்டென நடக்கும் சில திருப்பங்களால் தர்ஷனாவை மீட்கும் பொறுப்புக்கு வருகிறார் ரோஷன். திடீரென தர்ஷனா காணாமல் போக, மேத்யூவைத் துரத்துகிறது காவல்துறை. அடுத்து என்ன, தர்ஷனா யார் எனும் கேள்விகளை 99 நிமிட சினிமாவாகக் கொடுத்திருக்கிறார் மகேஷ் நாராயணன்.
OTT வரவால் நாம் பார்க்கும் பெரும்பாலான படங்கள் இணைய வழித் திரைப்படங்கள். ஆனால், C U SOON என்பது முழுக்க முழுக்க மொபைல், கணினித் திரைகளில் மட்டுமே ஓடும் ஒரு சினிமா. கணினியில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டே, மொபைல் ஸ்கிரீனில் படம் பார்க்கும் நபராக நீங்கள் இருக்கலாம். C U SOON படத்தில் பெரும்பாலான காட்சிகள் இப்படியாக கணினித் திரையில் வரும் CHAT/VIDEO CHAT-கள் தான்.
இந்த மாதிரியான படங்களைக் கூர்ந்து கவனித்தால்தான் புரியும். CHAT மெசேஜிலேயே சில காட்சிகள் நகர்வதால் வேறு வழியில்லை. ஃபகத் ஃபாசிலின் ஃபிளாட்டிலேயே ஐபோன் மூலம் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா என்பதால், ஃபகத் ஃபாசிலுக்கு படத்தில் பெரிதாக பர்பாமன்ஸுக்கு இடமில்லை. ஆயினும், அந்த சின்ன ஏரியாவுக்குள் தன்னால் இயன்ற வரையில் ஸ்கோர் செய்கிறார் ஃபகத். குறிப்பாக கோபம் கொப்பளிக்கும் காட்சிகளிலும், ஆண் எனும் ஈகோவை அசைத்துப் பார்க்கும் சக பெண் அலுவலகப் பணியாளரை உதாசீனப்படுத்தும் காட்சியிலும் ஃபன்டாஸ்ட்டிக் ஃபகத். ரொமான்ஸ் காட்சிகளில் ஈர்க்கும் கோபி சுந்தரின் இசை, த்ரில்லரைக் கூட்ட வேண்டிய பல இடங்களில் இரைச்சலாகவே இருக்கிறது.
இயற்கை, பசுமை, வாழ்வியல் எனச் சுற்றித்திருந்த கேரளத் திரையுலகம்தான் இந்தியாவில் இதுமாதிரியான முயற்சியை எடுத்திருக்கிறது என்பது பெருமைமிகு விஷயம். சினிமா டெக்னாலஜி வளர வளர இப்படியான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ரோஷமோன் (1950) காலகட்டத்திலேயே கதை சொல்லுதலில் புதிய யுக்திகளைக் கையாள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே டேக்கில் எடுக்கப்படும் சினிமாக்கள், HandyCam/Found footage காட்சிகளை வைத்து நகரும் சினிமாக்கள், CCTV வீடியோ சினிமாக்கள், Point of View சினிமாக்கள் என இவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த 'ஓர் இரவு' protagonist's viewpoint-ல் எடுக்கப்பட்ட சினிமாக்களில் ஒன்று.
Also Read: ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது சாரே... எப்படியிருக்கிறது #Searching
இப்படியாக கேட்ஜெட்டின் திரையிலேயே நடக்கும் கதைகளில் 'C U SOON' தான் முதல் முயற்சியா என்றால் இல்லை. இதற்கு முன்னும் இப்படியான சினிமாக்கள் வந்திருக்கின்றன. 2018-ம் ஆண்டும் திரையரங்கில் வெளியான Searching இப்படியானதொரு சினிமாதான். (அமேசான் ப்ரைமில் இப்படம் உண்டு). கம்ப்யூட்டர் ஸ்கிரீன், மொபைல் ஸ்கிரீன், ஃபேஸ்டைம், ஃபேஸ்புக், டம்ப்ளர், ட்விட்டர், யூ-டியூப், தொலைக்காட்சி எனப் படத்தின் காட்சிகள் வெவ்வேறு விதமான ஸ்க்ரீன்களில் கதையாக விரியும். இந்த டெம்ப்ளேட்டில் இதற்கு முன் வெளியான படங்கள் என்றால், Unfriended (2015), Unfriended: Dark Web (2018).
டேட்டிங் சைட்டில் கதை தொடங்கும் முதல் காட்சியிலேயே நிச்சயம் பின்னால் ஏதோ தகிடுதத்தம் நிகழப்போகிறது என்பதை யூகிக்க முடிந்தாலும் அதன் பின்னர் நிகழும் சம்பவங்களும் ட்விஸ்ட்களும் பரபர பாக்கெட் நாவல் டெம்ப்ளேட். ஃபகத் நிகழ்த்தும் டெக்னிக்கல் மாயாஜாலங்கள் நிஜத்திலும் சாத்தியம் என்றால் நமக்குள் ஒருவித அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. புதிய வகையில் கேட்ஜெட் ஸ்க்ரீன்களை வைத்தே கதை சொல்வது இந்திய சினிமாவுக்கே புதுசு என்றாலும், எங்கேயும் குழப்பாமல் மிகத் தெளிவாகக் கதையின் போக்கை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் இதில் நிச்சயம் பங்குண்டு. டெக்னிக்கல் விஷயங்கள்தான் இப்படியான திரைமொழியின் பலம் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறது படக்குழு.
OTT-ல் வெளியான தென்னிந்தியப் படங்களில் த்ரில்லராக சிறப்பான படம் என்றால் அது C U SOON தான். ஒரு த்ரில்லர், அதில் ஒரு சமூகப் பொறுப்புள்ள விஷயத்தை இணைத்தது என அட்டகாசமாக இதை எழுதி இயக்கி எடிட் செய்திருக்கிறார் மகேஷ் நாராயணன். இவரின் முந்தைய இயக்கமான 'TAKE OFF' போலவே இதுவும் அயல்நாடுகளில் சிக்கிக்கொள்ளும் கேரள புலம்பெயர் மக்களின் வலியைப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. லாக்டௌன் காலத்திலும் கிரியேட்டிவிட்டிக்கு லீவ் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது மலையாள சினிமா!
source https://cinema.vikatan.com/tamil-cinema/malayalam-movie-fahadh-faasils-c-u-soon-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக