கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் நெடுவிளைப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன் (53). இவரது மனைவி ஹெப்சிபாய் (40). இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை குழந்தை இல்லை. இதனால், ஹெப்ஸிபாயை அவரது கணவர் சுரேஷ்ராஜன் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹெப்சிபாய்க்கு கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணி கிடைத்தது. கடந்த 2-ம் தேதி முதல் பணிக்கு சென்று வந்துள்ளார். அவரை சுரேஷ் ராஜன் தினமும் பைக்கில் அழைத்துச் சென்று, பணி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சுரேஷ்ராஜன் வீட்டுக்குள் ஹெப்சிபாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் ராஜன் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால், வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் குளச்சல் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.
குளச்சல் போலீஸார் விரைந்து சென்று சுரேஷ் ராஜனின் வீட்டு கதவை உடைத்துள்ளனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரது வாயும், கண்களும் கட்டப்பட்டிருந்தன. உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. அவரது காலில் அரிவாளால் வெட்டிய காயம் இருந்தது. மேலும் போலீஸைக் கண்டதும் கையில் கத்தியுடன் நின்ற சுரேஷ்ராஜன், தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீஸார், ஹெப்சிபாயை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Also Read: நெல்லை: `கட்டப் பஞ்சாயத்து.. அடித்துக் கொலை!’ - இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு
சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோர்ட் ஊழியர் ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூரமார சித்திரவதைக்கு உள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வேலைக்குச் சென்றுவந்த ஹெப்சிபாய் மீது அவரது கணவர் சுரேஷ் ராஜனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரைக் கொலை செய்யும் நோக்கோடு அவரது காலில் வெட்டியிருக்கிறார். அவர் சத்தம்போடாமல் இருக்க வாயில் துணியால் கட்டியுள்ளார். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். தக்க சமயத்தில் தகவல் கிடைத்ததால் விரைந்து சென்று ஹெப்சிபாயைக் காப்பாற்ற முடிந்தது" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/colachel-police-arrests-man-in-attempted-murder-charge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக