கொரோனா பீதியைத் தாண்டி, தமிழக அரசியல் கட்சிகள், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பா.ஜ.க வரும் தேர்தலில் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. '60 சீட்டுகளைப் பிடிப்போம்' என்று பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி கொடுக்கிறார். இன்னொரு பக்கம், `பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதான்' என்றும் செய்திகள் றெக்கை கட்டுகின்றன. இந்த நிலையில், பல கேள்விகளுடன், பா.ஜ.க-வின் துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலையைச் சந்தித்தோம். கரூர் மாவட்டம், தொட்டம்பட்டியிலுள்ள அவரது வீட்டில் தொண்டர்கள் புடைசூழ இருந்த அண்ணாமலையை, கிடைத்த இடைவெளியில் பேசினோம்.
"ஐ.பி.எஸ் பதவியில் இருந்தபோது இருந்த பேரும் புகழும் பா.ஜ.க-வில் சேர்ந்த அடுத்த நொடியே மறைந்துவிட்டது என்று உணர்கிறீர்களா?"
"நான் அப்படி நினைக்கவில்லை. மக்களுக்குச் சேவை செய்ய, ஐ.பி.எஸ் பதவி ஒத்துவரவில்லை. அதற்காக, அந்தப் பதவியை ராஜினாமா பண்ணினேன். அதன் பிறகு, விவசாயம், இளைஞர்களை மோட்டிவேஷன் செய்வது என்றுதான் இயங்க இருந்தேன். ஆனால், காலச்சூழல் என்னை அரசியலுக்குள் இழுத்து வந்துடுச்சு. என்னோட ஐடியாலஜி, கோட்பாடுகள், கொள்கைகளுக்கு ஒத்துப்போகிற கட்சியாக பா.ஜ.க இருந்தது. நம் நாட்டுக்கு புதிய வெளிச்சம் தரும் பிரதமராக மோடி தெரிந்தார். அதனால், யோசிக்காமல் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டேன். மத்தபடி, இதனால் என்னுடைய புகழ் குறையவில்லை. உயர்ந்திருக்கிறது."
"சங்பரிவார் அமைப்புகளின் பின்னணியில் இருந்துதான், நீங்கள் கல்லூரிப் படிப்பு படித்தீர்கள், ஐ.பி.எஸ் கோச்சிங் பெற்றீர்கள் என்று உங்கள் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறதே?"
"இது தவறான வதந்தி. நான் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். பிறகு, லக்னோவில் எம்.பி.ஏ முடித்தேன். டெல்லி வாஜ்ராம் ரவி பயிற்சி மையத்தில், 15 நாள் ஐ.பி.எஸ் நேர்முகத் தேர்வு பயிற்சி பெற்றேன். இதில், நான் எந்த சங்பரிவார் அமைப்பு நடத்தும் கோச்சிங் சென்டர்ல பயிற்சி பெற்றேன்? நல்ல வேடிக்கை. நான் கர்நாடகாவில பணியாற்றிய பத்து வருஷத்துல காங்கிரஸ் பீரியடுலதான் அதிகம் வேலை பார்த்திருக்கிறேன். பா.ஜ.க ஆட்சியில் நான்கு நாள்கள்தான் பணியில் இருந்தேன். ஆதாரம் இல்லாம பேசக் கூடாது. நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மக்களைக் குழப்புவதற்காக தி.மு.க இந்தப் புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறது."
`` I am always proud kannadika' என்று கர்நாடகாவில் இருக்கும்போது சொன்னீர்கள். அந்த 'ஆல்வேஸ் கன்னடிகா' இப்போதும் பொருந்துமா?"
``என்னுடைய ட்விட்டர் புரொஃபைல் பக்கத்துல பார்த்தீங்கன்னா, நான் `ஏ ப்ரௌடு தமிழன்ஸ், கன்னடிகா, அண்ட் ஆன் இந்தியன்ஸ்’னு எழுதிவெச்சிருப்பேன். பத்து வருஷம் கர்நாடகாவுல வேலை பார்த்தப்ப, அந்த மக்கள் என்னை கொண்டாடினாங்க. அதற்கு நன்றிக்கடனாக, பிரிவுபசார விழாவில், `என்றும் கர்நாடகாவை மறக்க மாட்டேன். உங்களை மனதில் நன்றியோடு நினைத்திருப்பேன்' என்று பேசினேன். ஆனால், அந்த ஒரு வார்த்தையை மட்டும் திரிச்சு, இப்போது அவதூறு கிளப்புவது ஏன்னு புரியலை."
``தருமபுரி செந்தில்குமாரை நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்தீர்கள். அவரும் தயார் என்றார். அதன் பிறகு, அப்படியொரு விவாதமே நடக்கவில்லையே... பின்னணியில் என்னதான் நடந்தது?"
``விவாதம் நடத்தலாம்னு ஒரு தனியார் சேனலுக்கு சவால்விட்டு ஒத்துக்கிட்டது உண்மைதான். நான் அக்டோபர் மாதம் 20, 26, 27 ஆகிய மூன்று தேதிகள் சொன்னேன். ஆனா, செந்தில்குமார், `அந்தத் தேதிகளில் டெல்லிக்குப் போக வேண்டும்' என்று சொன்னார். அதனால், அறிவித்த விவாத சவால் இப்போதும் தொடருது. எப்போது வேண்டுமானாலும் நான் விவாதத்துக்குத் தயார்.’’
`` 'நீட்டை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்' என்று சமூக வலைதளங்களில் கருத்து சொன்னீர்கள். அதே சமூக வலைதளங்களில்தான், `நீட்டை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணம் பா.ஜ.க-தான்' என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. நீட் தமிழகத்தில் தேவை என்று பா.ஜ.க உறுதியாக நினைக்கிறதா?"
``தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியாவில் டீன் ஏஜ் வயதிலுள்ள நிறைய மாணவர்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க. அதுக்குக் காரணம், பா.ஜ.க-தான், நீட் தேர்வுதான் என்று சொன்னால் எப்படி? 2010-ம் ஆண்டு நீட்-ஐ கொண்டு வந்து, கெஸட்டில் பதிவு செய்ததே காங்கிரஸும், தி.மு.க கூட்டணி அரசும்தான். ஆனால், 2020-ல் நீட் தேர்வை எழுதிய எந்த மாணவராவது அல்லது பெற்றோராவது, நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்களா? நீட் எழுதிய மாணவர்கள், `அருமையான தேர்வு இது. எளிதாக இருந்தது. 80 கேள்விகள் வரை ஸ்டேட் போர்டில் வந்தது’ என்றுதான் பேட்டி தந்தாங்க. இதைவெச்சு அரசியலாக்கும் ஒரு கட்சித் தலைவர்தான், இதை பெருசாக்கிட்டார். மீடியாவும் இதைச் சரியாக் கையாளவில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவரோட பையன் ஹம்மர் கார்ல போய் இறங்கி, சாதாரண செருப்பை போட்டுக்கிட்டு போறதாக நாடகமாடி, இறந்த மாணவனை பார்த்துட்டு, `நான் மக்களுக்காக இருக்கிறேன்' என்று பேட்டி தர்றார். நீட்டைவைத்து ஸ்டாலின் தேவையில்லாத அரசியல் செய்கிறார்.’’
``ஆனால், 'பா.ஜ.க இந்தியைத் தமிழகத்தில் திணிக்கிறது. வேலைவாய்ப்புகளில் தமிழனுக்கு இடம் மறுக்கப்படுகிறது' என்று பா.ஜ.க மீது ஆணித்தரமாக குற்றம்சாட்டுகிறார்களே?"
``இந்தித் திணிப்பு என்பது நடக்கவில்லை. இந்தித் திணிப்பு எங்கே இருக்கிறது என்று ஆதாரம் காட்டச் சொல்லுங்கள். யூ.பி.எஸ்.இ தேர்வுல ரீஜினல் மொழியில் தேர்வு எழுதுறாங்க. இந்திய அரசு காமனா தேர்வு வைக்கிறாங்க. புதிய கல்விக் கொள்கையில ரீஜினல் லாங்வேஜை படிங்க என்று சொல்றாங்க. ஆனால், தி.மு.க, `தமிழகத்தில் இந்தித் திணிப்பு' என்று வெற்றுக் கூச்சல் போடுகிறது. தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடந்தால், அதை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்."
Also Read: ``ரஜினி எனது ஆன்மிக குரு மட்டுமே; அரசியல் குரு அல்ல!" - அண்ணாமலை ஓப்பன் டாக்
`` 'உங்களுக்கு இந்தி தெரிந்தால், நீங்கள் வேறு மாநிலத்துக்குப் போய்விடுங்கள்' என்று சமூக வலைதளங்களில் பலர் உங்களை விமர்சிக்கிறார்களே..?"
``ஐடி விங்குல சிலர் போடும் ட்வீட்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், சமூக வலைதளங்களே கேலிக்கூத்தான விஷயமாக மாறிவிட்டன. சமூக வலைதளங்கள் மக்கள் மனதைப் பிரதிபலிப்பதில்லை. 350 கோடி செலவு செய்து, ஐடி விங்கை நடத்திக்கொண்டு, இப்படி பொய்யான புரட்டுகளை அவிழ்த்துவிடும் கட்சியைப் பற்றி நானும் மக்களும் லட்சியம் செய்யவில்லை. மக்களுக்கு எங்களுடைய நேர்மை தெரியும். எங்களின் உண்மையான நோக்கம் புரியும்.’’
``உங்களுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்பட இருப்பதாகச் சொல்கிறார்களே..?"
``அதெல்லாம் பொய். எனக்குக் கட்சி தலைமை இட்ட கட்டளை, ஜனநாயக வழியில் கட்சியை வளர்ப்பது மட்டுமே. அதை கண்ணும் கருத்துமாகச் செய்துவருகிறேன். அதற்காக, நீங்கள் சொல்றபடி எனக்கு ராஜ்யசபா பதவி கொடுத்தால், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.’’
``பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகும், நீங்கள் ஆரம்பித்த `வி த லீடர்' அமைப்பு மூலம் இளைஞர்களையும் விவசாயிகளையும் ஒன்று திரட்டுவதற்குப் பின்னணியில், ஓட்டரசியல் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?’’
``ஆமாம். நாங்கள் ஓட்டரசியல்தான் செய்கிறோம். நாங்கள் மக்களுக்குப் பல நன்மைகளை செய்கிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியைக் கொடுக்க நினைக்கிறோம். அப்படிச் செய்யும் நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’’
Also Read: கோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...!’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி
``மறைக்காமல் சொல்லுங்கள்... உங்களைதானே பா.ஜ.க., முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறது?’’
``நிச்சயமாக இல்லை. என்னைவிட அனுபவத்தில், திறமையில், தகுதியில் பலம் வாய்ந்த எத்தனையோ தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். நான் ஒரு சாதாரண தொண்டன். என்னோட எண்ணம், நல்ல கட்சியில் இருந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். எனக்கு முதல்வர் ஆசையெல்லாம் இல்லை.’’
``நீங்கள் உட்பட, எந்த பா.ஜ.க தலைவரிடம் கேட்டாலும், `2021-ல் பா.ஜ.க பண்ணப்போகும் மேஜிக்கைப் பாருங்க’ என்று சொல்கிறீர்கள். 2021-ல் அப்படி என்னதான் நடக்கும்?’’
``கண்டிப்பாக பா.ஜ.க 65 சீட்களைப் பிடிக்கும். பா.ஜ.க கைகாட்டுபவர்கள் ஆட்சியை அமைக்கும் சூழல் வரும். ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சி நடக்கும். தமிழகம் சுபிட்சமாகும்.’’
source https://www.vikatan.com/news/politics/if-party-offers-me-rajyasabha-mp-post-will-happily-accept-it-says-bjp-annamalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக